
அந்தக்கப்பல் எச்சரிக்கையுடன் பிரெஞ்சுக் கடற்கரை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் பெயர் எகிப்து. 1922ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி. டில்பரியிலிருந்து பம்பாய்க்குப் போய்க் கொண்டிருந்தது.
அன்று மாலை 7 மணியளவில் உஷாண்ட் என்னும் துறைமுகத்துக்கு 30 மைல்களுக்கு அப்பால், கப்பலின் மேல் தளத்திலிருந்தவர்கள் உற்றுக் கேட்டனர் ஊது கொம்பு ஒலியை. ஒரு விநாடிதான். சாம்பல் நிற பனிமூட்டத்தினூடே பிரெஞ்சு சரக்குக் கப்பலான சீனின் முகப்பு பூதாகரமாக வெளிப்பட்டது. அடுத்த விநாடி பயங்கரமான கிறீச்சொலியையும், அதிர்வையும், குலுக்கலையும் உணர்ந்தனர் எகிப்து கப்பலில் உள்ளவர்கள். மரணத் தாக்கு தலுக்குட்பட்ட எகிப்துக் கப்பல் தடுமாறியது. கப்பலின் உலோகத்தகடு பிளந்து உள்வாங்கியது. குளிர்ந்த கடல் நீர், கப்பலின் கட்டுமானத்துக்குள் பயங்கர வேகத்துடன் புகுந்தது. எகிப்து கப்பல் இந்த மோதலுக்குப்பின், பதினெட்டு நிமிடங்களே உயிரோடிருந்தது. கப்பல் பணியாளர்கள் எழுபத்தோரு பேர் பதினைந்து பயணிகளுடன் கடலில் மூழ்கி ஜல சமாதியாயினர்.
எண்பத்தியாறு உயிர்களுடன் ஒரு மில்லியனுக்கு மேலான ஆங்கில நாணயமான சாவரினும், தங்கம், வெள்ளிக் கட்டிகளும் சேமக்காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. கடுமையான மூடுபனியால் எகிப்து கப்பல் மூழ்கிய இடத்தை, உத்தேசமாகத்தான் கணிக்க முடிந்தது. அப்பகுதியில் கடல் மிகவும் ஆழமாக இருந்தது. நீர் மூழ்கிகள் சாதாரண நீர்மூழ்கி உடையணிந்து முக்குளித்து ஆராயமுடியாது. நீரின் அழுத்தத்தில் அவ்வுடையே நொறுங்கி விடும்.
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி நாட்டுக் கடல் ஆய்வாளர்கள், மூழ்கிய கப்பலிலிருந்து மீட்க முடியாத புதையலை மேலே கொண்டு வர முயற்சிகளை மேற் கொண்டனர். இத்தாலிய கம்பெனி ஒன்று உறுதியான உலோகத்தினாலான நீரில் மூழ்கி ஆராயும் கவசம் ஒன்றை உருவாக்கி இருந்தது. நீரில் மூழ்கியுள்ளவர் எளிதில் அசைந்து செயல்படும் வசதி கொண்ட அக்கவச உடையணிந்தபடி, 1929ம் ஆண்டு புதையல் வேட்டை ஆரம்பமாயிற்று. அந்த இத்தாலிக்காரர், அந்த ஆண்டு கோடை முழுவதும் தேடு தேடு என்று எகிப்து கப்பலை தேடினார். பலன் கிட்டவில்லை. பருவநிலை மாறவே, தேடல் வேட்டையைக் கைவிட்டார். அடுத்த ஆண்டு 1930ல் மீண்டும் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு நீண்ட காலத்தேடலுக்குப்பின் தற்செயலாக மூழ்கிய கப்பல் தட்டுப்பட்டது. கடலில் தடம் காட்டும் மிதவை ஒன்று கட்டிலிருந்து விடுபட்டு, மிதந்து போகலாயிற்று. ஆனால், அதோடு இணைக்கப்பட்டிருந்த கேபிள் எதிலோ சிக்கிக்கொள்ளவே அதன் ஓட்டம் மிதப்பு தடைப்பட்டது. இதைக் கவனித்த நீரில் மூழ்கித்தேடும் ஒருவர் நீரில் மூழ்கி ஆராயலானார்.
நானூற்று இருபதடி ஆழத்தில், கடல் படுகையில் தடம்பதித்தவரின் தலைக்கு மேலே பூதாகாரமான ஒரு பொருள்! சந்தேகமே இல்லை அது கப்பல் தான்! மிதவையோடு இணைக்கப்பட்டிருந்த கேபிள், உடைபட்டு, மூழ்கிய கப்பலின் ஒரு பகுதியில் சிக்கிக்கொண்டு கப்பல் இருக்குமிடத்தை காட்டிக் கொடுத்து விட்டது.
உற்சாகமடைந்த தேடல் குழுவினர் சுறுசுறுப்புடன் செயல் படலாயினர். இருளடர்ந்த, கருப்பு நிறமுடைய எழுபது பாதம் கடல் நீருக்கடியில் ஆராய்ச்சி மேற்கொள்ள காலதாமதமாயிற்று. லைப்போட்டுகள் இறக்கப்பட்டன. வெடிப் பொருள் களை மூழ்கியுள்ள கப்பலின் பக்கங்களிலும், தளத்திலும் இணைத்து வெடிக்கச் செய்தனர். கப்பலின் கட்டுமான உலோகத் தகடுகள் பிளந்து, வளைந்து முறுக்கிக் கொண்ட நிலையில் அதை வெட்டி அகற்றினர். தளத்தில் அடுத்தடுத்த பகுதிகளை வெட்டி அகற்றுவது ஆமை வேகத்தில் தான் செயல் பட முடிந்தது. சிரமமான காரியமும் கூட. புதையலை 1930, 1931களிலும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 1932ல் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் சேமக்காப்பறையை அணுகினர்.
சேமக்காப்பறையில் கூரையில் துளையிட்டு உள்ளே புகுந்தனர். நான்கு ஆண்டுகள் தளராத உழைப்பின் பலனாக மூழ்கிக் கிடந்த புதையலை மேலே கொண்டு வந்தனர். நீர் மூழ்கியாளர்கள் மீட்டது ஒரு மில்லியன் பவுண்டு ஆங்கில நாணயங்களை மட்டுமே, எகிப்துக் கப்பலின் சேமக்காப் பறையில் இருந்த தங்கம் வெள்ளிக் கட்டிகள் என்ன வாயின தெரியவில்லை. இன்று வரை அந்த மர்மம் விடுவிக்கப்பட வில்லை.
***