
சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 1978ல், டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். அது, தற்போதைய, 12ம் வகுப்புக்கு சமமானது.
கணித ஆசிரியர் சுப்பிரமணியன், ஒருநாள் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் பற்றி அறிமுகம் செய்தார். அதில் சேர்வது பற்றி, 'நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானது. நம் மாவட்டத்தில் மிக சிலரே தேர்ச்சி பெறுகின்றனர். கணித பாடத்தில் சிறப்பிடம் பிடிப்பவர்கள் முயற்சித்தால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது; தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி...' என விவரித்தார்.
மிக குறைந்த கால அவகாசதத்தில் தீவிரமாக முயன்று அதற்கு விண்ணப்பித்தேன். அது என் வாழ்வு போக்கையே மாற்றி விட்டது. எந்த பயிற்சியும் இன்றி நுழைவு தேர்வில் சிறப்பிடம் பெற்று, சென்னை, ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தேன். நன்றாக படித்து, மைசூரு மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தேன்.
தற்போது, என் வயது, 61; வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது அந்த படிப்பு. அதற்கு அறிவுரைத்து, உதவிய ஆசிரியர் நினைவை போற்றுகிறேன்.
- பி.மனோகர், மைசூர்