PUBLISHED ON : மே 23, 2014

அமைச்சர் பதவி!
தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும்படி அரசரை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் பெருந்தேவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே, தன் மைத்துனரை வரச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து உடனே தன் மைத்துனனிடம், ''அது என்ன வண்டி? விசாரித்து வா!'' என்று சொல்லி அனுப்பினான்.
மைத்துனனும் ஓடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் நெல்வண்டி என்று கூறினான். அரசன் என்ன நெல்? என்று கேட்க, உடனே வெளியே ஓடிப்போய் வந்து சம்பா நெல் என்று கூற, அரசன், எங்கே போகிறது? என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஓடிப் போய்க் கேட்டு வந்து பக்கத்து ஊர் சந்தைக்கு போகிறது என்றான்.
அரசன் என்ன விலை? என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, மூட்டை 30 ரூபாய் என்று கூறினான். அரசன் எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன? என்று கேட்டான். விசாரிக்க போன மைத்துனன் மிகவும் களைத்து போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
சற்று நேரமாகியும் மைத்துனன் திரும்பி வராததை அறிந்த அரசன், தெருவில் மீண்டும் வேறு வண்டிச்சத்தம் கேட்டதும், தேவியின் முன்னிலை யிலேயே மந்திரி பதவிக்காகத் தான் வரவழைத்திருந்த ஒருவனை அழைத்து, ''வீதியில் என்ன வண்டி? விசாரித்து வா,'' என்றான்.
அவன் திரும்பி வந்து அரசனிடம், ''வண்டியில் கேழ்வரகு. 1 வண்டியில் பத்து மூட்டை இருக்கிறது. மொத்தம் ஐந்து வண்டிகள். ஏழாவது மைலில் உள்ள சந்தைக்கு விற்பனைக்குப் போகின்றன. 1 மூட்டை 60 ரூபாய் என்று சொல்கின்றனர். என் மதிப்பு 50 ரூபாய். மன்னரின் கட்டளை என்ன?'' என்று சொல்லி நின்றான்.
அரசன், உடனே தன் தேவியை பார்த்து, ''எங்கே மைத்துனரை இன்னும் காணோம்? இப்போது சொல். யாரை அமைச்சராக்கலாம்?'' என்று கேட்க, பதில் ஒன்றும் கூற முடியாமல் தலை குனிந்து நின்றாள் பெருந்தேவி.
பல்லக்கும் கன்றுக்குட்டியும்!
ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக் குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக் குட்டியைத் தேடி வரும்படி ஏவினார். அவர்கள் நால்வருமாக சேர்ந்து,
''சாமி பல்லக்குத் தூக்குவது தான் எங்கள் வேலை; கன்றுக் குட்டியைத் தேடுவது எங்கள் வேலையல்ல,'' என்று சொல்லி விட்டனர்.
உடனே மடாதிபதி , ''சரி, நானே கன்றுக்குட்டியைத் தேடப் புறப்படுகிறேன். பல்லக்குத் தயாராகட்டும்,'' என்றார். வெற்றிக் களிப்புடன் பல்லக்கை கொண்டு வந்தனர்.
மடாதிபதி அதில் ஏறி அமர்ந்து ஊர் முழுவதும் பெரிய சாலைகள் எல்லாம் அலைந்து, பிறகு சந்து பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லக்கைக் கொண்டு போகச் சொன்னார். மிகக் குறுகிய, நெருக்கடியான சந்துகளில் எல்லாம் போக முடியாமல் கஷ்டப்பட்ட அந்த நால்வரும், பல்லக்கைக் கீழே இறக்கி வைத்து,
''சாமி, தாங்கள் இங்கேயே இருங்கள். நாங்களே போய்க் கன்றுக் குட்டியைத் தேடி வருகிறோம்,'' என்றனர்.
உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, ''இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும். என்னையும் சுமந்து வந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே,'' என்றார்.
அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்படலாயினர்.
***
