
கண்ணாடியின் விளக்கம்!
கண்ணாடியின் முன், சீப்பு, பவுடர்டப்பா, பொட்டு, வளையல் எல்லாம் கூட்டமாக இருந்தன.
கண்ணாடி அவற்றிடம், ''உங்களை எல்லாம் பார்க்கிற போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் சரிசமமாக என் முன் இருக்கிறீர்கள்,'' என்றது.
''கண்ணாடியே! நீ தெரிந்து தான் பேசுகிறாயா அல்லது தெரியாமல் பேசுகிறாயா? யாரைப் பார்த்து சரி நிகர் சமம் என்கிறாய்? நான் சீப்புக்கும், வளையலுக்கும், பவுடருக்கும் இணையாகவில்லை. நான் தனித்தே இருக்கிறேன்,'' என்று கோபத்துடன் சொன்னது பொட்டு.
''அதெப்படி சொல்ற! இதை நீ விளக்கமாக எடுத்துரைக்க முடியுமா?'' என்று கேட்டது கண்ணாடி.
''ஓ! தாராளமாக எடுத்துரைக்கிறேன். உன் முன்னே குளித்து முடித்து ஒரு பெண் வந்து நிற்கிறாள் என வைத்துக் கொள். அவள் ஆடை அணிந்த பின் சீப்பை எடுத்து தலையை சீவிடுவாள்.
''இதை செய்தால் அவள் அழகாகி விடுவாளா என்ன? நெற்றியின் நடுவே என்னை வைத்துக் கொண்டால்தான் அவள் அழகாக காட்சியளிப்பாள். எனவே, பெண்களின் அழகுக்கு மூலப் பொருளாக விளங்குவது நான்தான்,'' என்றது பொட்டு.
''பொட்டே! என்னதான் உன்னைப் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டாலும், கூந்தல் அழகாக இல்லையென்றால் அவர்கள் அழகாகயிருக்க மாட்டார்கள். பெண்களுக்கு அழகு கூந்தல் என்று கவிஞர்கள் கூறியுள்ளனர். எனவே, பெண்களின் கூந்தலை பலவடிவங்களில் அழகாக சீவிட பயன்படுத்தப்படும் சீப்பை அழகின் மூலப் பொருளாக கூறிடுவேன்,'' என்றது கண்ணாடி.
இதைக் கேட்ட பொட்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பின்னர் கண்ணாடி சொல்வதெல்லாம் உண்மைதான் என்பதைப் புரிந்து கொண்டது.
நன்மை கிடைக்கலாம்!
பலாபழத்தின் சுளைகளை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது நரி.
''நரியே! நீ மட்டும் சாப்பிட்டுகிறாயே! நான் உன் நண்பனல்லவா! எனக்கும் இரண்டு பலா சுளைகளைக் கொடேன்,'' என்று நரியின் அருகே வந்தது முயல்.
''முயலே ஓடி விடு. உனக்கு நான் பலாச்சுளைகளைத் தர மாட்டேன். இதை எடுப்பதற்கு நான் எவ்வளவோ சிரமப் பட்டேன். அப்படி சிரமத்துடன் எடுத்த இதை உனக்கு கொடுக்க மாட்டேன். நீ இதை நம்பி நிற்க வேண்டாம். இங்கிருந்து சென்றிடு,'' என்று கோபத்துடன் கூறியது நரி.
அமைதியுடன் அங்கிருந்து புறப்பட்ட முயல், அதன் பின், நரியிடம் பேசவில்லை.
ஒருநாள்-
நரிக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்று வலியின் காரணமாக நரி துடியாய் துடித்தது.
காட்டில் வசித்து வந்த மற்ற விலங்குகள், நரியை வைத்தியரிடம் அழைத்துச் சென்றன.
வைத்தியர் நரியை பரிசோதனை செய்தார்.
''நரியே, நீ இனிப்பான பழவகைகளை அதிகமாக சாப்பிட்டுள்ளாய்! உன் உடலில் இனிப்புத் தன்மை அதிகமாகி குடல்புண் ஏற்பட்டுள்ளது. இதை இப்படியே விட்டு வைத்தால் உன்னுடைய உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம். அதனால், நீ ஒரு வாரத்திற்கு குளிர்ச்சி மிக்க கேரட் கிழங்குகளை உணவாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் உன்னுடைய குடல் நோய் குணமடையும்,'' என்றார் வைத்தியர்.
அந்நேரத்தில் மற்ற விலங்குகள் நரியிடம், ''நரியே! உனக்கு கேரட் கிழங்குகள் வேண்டுமென்றால், முயலின் உதவியை நாடு. முயல் நினைத்தால் ஏராளமான கேரட் கிழங்குகளை கொண்டு வந்து தந்திடும். அதனிடம் கேரட் கிழங்குகளைக் கேள்,'' என்றன.
அதைக் கேட்டு திடுக்கிட்டது நரி.
'அநியாயமாக முயலை பகைத்துக் கொண்டேனே... இப்போது அதன் உதவி எனக்குத் தேவைப்படுகிறதே!' என்று கவலையடைந்தது நரி.
அதுக்குத்தான் யாரையும் பார்க்க வச்சிகிட்டு சாப்பிடக் கூடாது. குட்டீஸ்...

