
நெய்வேலி, வேலுடையான்பட்டு, அஞ்சலைம்மாள் தொடக்க பள்ளியில், 1959ல், 1ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன்.
வகுப்பு ஆசிரியராக இருந்த குப்புசாமி, தரையில் நெல்லை பரப்பி, கை விரல்களை பற்றி, 'ஹரி நமோத்து சிந்தம்' என்ற மந்திரத்துடன், தமிழ் உயிர் எழுத்து வடிவமான, 'அ'வை உச்சரித்தபடி எழுத வைத்தார்.
படிப்பில் ஆர்வக்குறைவால் பள்ளி செல்வதை தவிர்த்து, காட்டில் பதுங்கியிருப்பேன். பள்ளி முடியும் நேரத்தில் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தேன். எங்கிருக்கிறேன் என கண்டுபிடிக்கவே முடியாது.
ஒருநாள், கம்பு தானியம் விளையும் புஞ்சைக்காட்டில் பதுங்கி படுத்திருந்தேன். அங்கு சிலர் தேடி வருவதை கண்டு ஊர்ந்தபடி நகர்ந்து கொண்டிருந்தேன். நான்கு பேருடன் சுற்றி வளைத்து, மடக்கிப் பிடித்து விட்டார் ஆசிரியர்.
குண்டு கட்டாக துாக்கினர். வழி நெடுக, 'மள...மள...'வென விழுந்த அடிக்கு பயந்து, 'கொன்று விடாதீங்க சாமி... இனி ஒழுங்கா வருகிறேன்...' என சபதம் செய்தேன். அதுவே, வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தவறாமல் சென்றதால் வகுப்பு தலைவன் பொறுப்பு கிடைத்தது. பாடத்துடன், ஒழுக்கம், நன்னெறி, தலைமைப் பண்பை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. கலை நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்தது.
அது, நாடகம், வில்லுப்பாட்டு என, மேடைக்கலைகளில் ஆர்வத்தை துாண்டியது. தொடர்ந்து படித்து, அதே பள்ளியில், ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.
தற்போது, என் வயது 71; பள்ளி தலைமை ஆசிரியராக உயர்ந்து, ஓய்வு பெற்றேன். வள்ளலார் வழியில், ஜீவகாருண்ய சேவையில் ஈடுபட்டு வருகிறேன். ஒழுக்கம், நன்னெறி பற்றி சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறேன். சேவைகளுக்காக, 21 விருதுகளும், 52 சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். இவற்றுக்கு அடித்தளமிட்ட வகுப்பாசிரியரை போற்றி வணங்குகிறேன்.
- செல்ல கனகசபை, நெய்வேலி.
தொடர்புக்கு: 98658 41544