
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, சி.எஸ்.ஐ.மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 10ம் வகுப்பு படித்தபோது நிகழ்ந்த சம்பவம்!
வகுப்பாசிரியர் சூர்யகுமாரி, ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் நடத்துவார். எப்போதும், இன்முகத்துடன் அக்கறை எடுத்து கற்பிப்பார்.
ஒரு நாள் அறிவியல் வகுப்பில், 'தற்சமயம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்...' என்று கேட்டார். அனைவரும் அமைதியாக இருந்தனர். நான் எழுந்து, 'இந்திய பெண்மணி ஐஸ்வர்யா ராய்...' என்று கூறினேன்.
உற்றுப் பார்த்தபடி, 'எப்படி தெரியும்...' என்றார். தினமும் செய்தித்தாள் வாசிக்கும் விவரத்தை சொன்னேன். என்னை பாராட்டி, 'வருங்காலத்தில் மெச்சத்தக்க பணிக்கு செல்வாய்...' என வாழ்த்தினார்.
அத்துடன், 'பாடப்புத்தகப் புழுவாக இருப்பதில் எந்த பயனும் இல்லை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்...' என்று அறிவுரைத்தார். அவரது பேச்சு அன்று புரியவில்லை. பின்னாளில் அந்த வாக்கு பலித்தது. நெடுச்சாலைத்துறையில் பணியில் சேர்ந்து, நல்ல பதவி வகித்து வருகிறேன்.
தற்போது, என் வயது, 40. பொது அறிவு ஆர்வத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியயை மனதில் கொண்டு, இன்றும் வாசித்து வருகிறேன். அவருக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
- டி.பாண்டி, மதுரை.
தொடர்புக்கு: 97914 20793

