PUBLISHED ON : ஜூலை 10, 2021

ஜவ்வாது மலைத் தொடரில், அமைந்துள்ளது காவலுார் விண்வெளி ஆய்வு மையம். வேலுார் மாவட்டம், ஆலங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து, 2,700 அடி உயரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தமிழகத்தில், முதன் முதலாக விண்வெளி ஆய்வு மையம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தான் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் வசிப்பதற்கேற்ற தட்பவெப்ப நிலை இருந்ததால் அவ்வாறு அமைந்தது.
அது, ஆய்வுக்கு பொருத்தமில்லாத இடம் என்றார், விண்வெளி ஆய்வு அறிஞர் எம்.கே.வைனுபாப்பு. ஆய்வுக்கு பொருத்தமான, ஜவ்வாது மலையில் காவலுார் கிராமத்தை தேர்ந்தெடுத்தார். ஆண்டில், 220 இரவுகள் வரை, விண்மீன்கள் மற்றும் கோள்கள் தொடர்பான ஆய்விற்கு உகந்த இடமாக இது உள்ளது.
இங்கு ஆய்வுப் பணிகள் மாலை, 6:00 மணிக்கு பின் துவங்கும். விண்வெளியில் துலங்கும் பலவித விண்மீன்கள் குறித்து ஆய்வுகள் நடக்கின்றன. பூமியிலிருந்து அவற்றின் தொலைவு, வயது, வெப்ப அளவு, காற்றின் தன்மை போன்ற விவரங்களை அறியும் வகையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆய்வுக்கு உட்படுத்தப்படும், குறிப்பிட்ட விண்மீனுக்கு தனிப்பெயர், எண் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சியின் முடிவில் தயாரிக்கப்படும் அறிக்கை, அமெரிக்காவில் உள்ள சர்வதேச அறிவியல் ஆய்வு மைய ஒப்புதல் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு மையம் பல சாதனைகள் புரிந்துள்ளது. உலக அளவில் யுரேனஸ் கிரகத்துக்கு ஒளி வளையம் இல்லை என கணிக்கப்பட்ட ஆய்வு முடிவு தவறானது; யுரேனஸ் கிரகத்துக்கு ஒளி வளையம் உண்டு என இந்த மையம் உறுதி செய்துள்ளது.
சனி கிரகத்துக்கு, ஐந்தாவது ஒளிவளையம் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தொலைநோக்குக் கருவி, இங்குதான் அமைந்துள்ளது. இது, 93 அங்குல விட்டம் உடையது.
இந்த மையத்தை, 20 ஆண்டு கால உழைப்பால் உருவாக்கினார், அறிஞர் வைனு பாப்பு. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது பெயரே இந்த மையத்திற்கு, 1986ல் சூட்டப்பட்டது.
- அ.யாழினி பர்வதம்

