தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாலாட்டியின் வம்பு!

வாலாட்டியின் வம்பு!

வாலாட்டியின் வம்பு!


PUBLISHED ON : ஆக 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது அழகான தோட்டம். ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. மரங்கள், கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளிர்நிழல், பறவைகளின் குதுாகலமான குரல்களால் ரம்மியம் நிறைந்திருந்தது. இன்பமாகப் பொழுதை போக்க, மக்கள் அங்கு தான் வருவர்.

பணக்காரர்கள் தள்ளு வண்டியில் அமர்ந்திருக்கும் குழந்தையுடன், ஒற்றையடிப் பாதையில் நடை போடுவர்.

குழந்தை கைகளில் இருக்கும் ஒரு கையுறை, நடைபாதையில் கேட்பாரற்று கிடந்தது; பஞ்சு போன்ற, வெண்மை நிறத்தில் மிக அழகாக காட்சியளித்தது.

அந்த வழியாக வந்த பாட்டி, அதை பார்த்தாள்.

'வழியில் கிடக்கிறதே' என, ஒரு மரக்கிளையில், சுருக்கு கயிற்றால் தொங்க விட்டுச் சென்றாள். 'உரியவர் தேடினால் எடுத்துப் போகட்டுமே' என்ற நல்ல எண்ணத்தில் அதை செய்தாள் பாட்டி.

அந்த மரத்தில், வாலாட்டி குருவி, வசித்து வந்தது. அதற்கு மிகவும் பேராசை.

அதன் நீண்ட வால், பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பழகுவதற்கு முசுடு. அது வசித்து வந்த மரத்தில், பழங்கள் ஏராளம் இருந்தன. எந்த பறவையையும் கனிகளை தொட விடாது.

அத்தனை சுயநலம்.

வாலாட்டி குருவி, 'க்விக்... க்விக்...' என்று, தாவியபடி மரத்தில் தொங்கிய கையுறை அருகே வந்தது.

'இது என்ன... புதிதாக இருக்கிறது; என் உடல் அளவுக்கு பொருத்தமாக இருக்கிறதே! ம்... கத கதப்பாக இருக்கிறது' என்று, அதன் உள்ளே புகுந்து ஆராய்ந்தது. பின், வெளியேற முயற்சி செய்தது. முடியவில்லை.

'ஹா... ஹா... இதுவும் நல்லதுக்குத் தான்; இங்கிருந்தபடியே, ஊஞ்சலாடியபடி வேடிக்கை செய்கிறேன். மரத்தின் பழங்களைக் கொள்ளையடித்துப் போக வரும் பறவைகளை மிரட்டி, விரட்ட, சரியான சாதனம் இது' என எண்ணி மகிழ்ந்தது வாலாட்டி.

எண்ணியபடியே மைனா வந்தது; கம்பளி உறைக்குள் தாவியது வாலாட்டி. அந்த உறை ஊசலாடியது. புரியாமல் பயந்த மைனா, பறந்து விட்டது. வாலாட்டிக்குச் சிரிப்பான சிரிப்பு.

அடுத்து கிளி வந்தது.

'வந்தாயா... வா... வா... ஒரு பழத்தைக் கூட விட மாட்டாயே நீ' என கறுவியபடியே, தாவி குதித்தது வாலாட்டி. கம்பளி உறை வேகமாக ஆடியது. கிளியும், அலறி அடித்து ஓடியது.

இப்படி, பறவைகளை பயமுறுத்தி விரட்டியது வாலாட்டி.

'ஏதோ, பூதம், பிசாசு, வெள்ளையாக...' என்று, கலவரத்துடன் பேசிக் கொண்டன பறவைகள்.

வாலாட்டிக்கு, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சி எத்தனை நேரத்துக்கு...

வாலாட்டிக்கு பசித்தது. முடங்கி கிடப்பது வலியைக் கொடுத்தது. வெளியேறிச் சாப்பிடப் போகலாம் என முயன்றது! ம்ஹும்... கம்பளி உறை, அதன் உடலில் பொருந்தி இறுக்கி விட்டது. விடுபட முடியவில்லை.

'ஐயையோ... மாட்டிக்கொண்டேனே... பட்டினியால் சாகத்தான் வேண்டுமா' என வேதனையில் அழுதபடி, 'யாராவது காப்பாற்றுங்களேன்...' என, கதறியது வாலாட்டி.

ஒரு பறவை கூட அருகில் வரவில்லை. ஏதோ, பேய், பிசாசு என்ற எண்ணத்தில் எட்ட நின்றபடி பார்த்தன.

இரவு முழுவதும், அந்தச் சிறையிலேயே சிக்கி தவித்து, கண்ணீர் விட்டு கதறியது வாலாட்டி. பட்டினியும், கவலையும், பீதியும், அதன் உடலை இளைக்கச் செய்து விட்டன.

மறுநாள்-

எலும்பும் தோலுமானது வாலாட்டி. உடல் மெலிந்ததால் வெளியேறும் முயற்சி பலன் தந்தது. விடுதலை கிடைத்தது.

'இறைவா... இனி, சகோதரப் பறவைகள் எதையும் அலட்சியம் செய்ய மாட்டேன். பயமுறுத்த மாட்டேன். சினேகமா இருப்பேன்' என உறுதி எடுத்தது. இறுகியிருந்த இறக்கைகளை நீவி விரித்தது. பழங்களை தின்று பசியை தணித்தது. நல்ல பாடம் கற்றுக் கொண்டது.

செல்லங்களே... சுயநலத்துடன் வாழக்கூடாது. அனைவருடனும் அன்பு பாராட்டி இணைந்து வாழ வேண்டும்.

வாண்டுமாமா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us