
குட்டீஸ்... உலகத்தில், கலப்படம் செய்ய முடியாத, ஒரு உணவுப் பொருள் உண்டு என்றால், அது நிச்சயமாகவே கோழி முட்டை தான்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் பரிந்துரைப்படி, தனி மனிதன், ஆண்டுக்கு, 180 முட்டைகளைச் சராசரியாக சாப்பிட வேண்டும். ஆனால், இந்தியாவில், தனி மனிதன், ஆண்டுக்கு, சராசரியாக, 47 முட்டைகளே சாப்பிடும் அளவாக உள்ளது.
முட்டை சாப்பிடுவதால், இதய நோய் வரும் என்ற நம்பிக்கை, சிலரிடம் உள்ளது. உடலுக்கு, தினமும், இரண்டு கிராம் கொலஸ்டிரால் தேவை. எனவே, தினமும், இரண்டு முட்டைகள் தாராளமாக சாப்பிடலாம்.
முட்டை, சைவமா... அசைவமா... என்பது பற்றி, பலருக்கு சந்தேகம் உண்டு.
சேவல் இல்லாமல், கோழிகள் முட்டை இடுமா என்பதற்கு, படித்தவர் முதல், பாமரர் வரை, 'இடாது...' என்றே பதில் சொல்வர். கோழிகள் முட்டையிட, சேவல்கள் தேவை இல்லை. ஆனால், கோழிகள் இடும் முட்டைகள், குஞ்சு பொரிக்க, சேவல்கள் அவசியம் தேவை.
கோழி முட்டையை, அனைவரும், ஒரு விதையாகவே கருதுகின்றனர்.
செடி, கொடிகளின் விதைகள், இனச்சேர்க்கையால் உருவாகின்றன. கோழி முட்டையிடுவது இனச்சேர்க்கையாலும் ஏற்படும்; இனச்சேர்க்கை இல்லாமலும் நிகழும். சேவல், கோழியுடன் சேர்ந்தாலும், சேரா விட்டாலும், கோழிகள் முட்டை இடும்.
எனவே, பண்ணைகளில், முட்டை தேவைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை, குஞ்சு பொரிக்காது. அதனால், இவை, சைவ முட்டைகள் தான். உயிர் கரு, இந்த முட்டைகளில் இல்லாததால், முட்டையை சைவமாக கருதலாம்.
கலப்படமே இல்லாத உணவு உண்டு என்றால் அது முட்டை தான். முட்டையில், கால்சியம் சத்து, பாலை விட, குறைவாக உள்ளது. ஆனால், இரும்புச்சத்து, பாலை விட, கூடுதலாக உள்ளது.
நாட்டுக் கோழி முட்டை மட்டுமே, அதிக சத்து கொண்டது என்பது, தவறான கருத்து. கிராமங்களில் மட்டுமல்லாது, நகரத்திலும், இதை உண்மை என நம்புகின்றனர்.
இதனால், நாட்டுக் கோழி முட்டையை, அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு, மக்கள் தயங்குவதில்லை.
இதை, சாதகமாக்கி, மனசாட்சி இல்லாதோர், வீரிய இனக் கோழி முட்டையை, தேயிலைத்துாள் டிகாக் ஷனில் முக்கி எடுத்து, நாட்டுக் கோழி முட்டை என விற்பனைச் செய்வர்.
தவறான, மூட நம்பிக்கைகளால், உடம்புக்கு கிடைக்க கூடிய, தரமான சத்துகளை, நாம் தவிர்க்க கூடாது.
எனவே, குட்டீஸ்... தினமும், இரண்டு முட்டை சாப்பிடுங்க; நலமுடன் வாழுங்க!
- வி.ராஜேந்திரன்