PUBLISHED ON : ஏப் 27, 2018

கிராமத்துப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பில் தேறிய போது, நான் தான் சிறந்த மாணவன். காரணம், எனக்கு மட்டுமே ஆங்கிலத்தில், ஏ,பி,சி,டி., எழுத, படிக்க தெரியும். நாமக்கல் மாவட்டம், மோகனுார் பஞ்சாயத்துப் பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது, நிறைய மாணவர்கள், ஆங்கில வார்த்தைகளை படிக்கவும், எழுதவும் செய்தனர்.
முதல் வாரத்திலேயே, சாலமன் க்ரண்டி பாடலை கற்பித்து, 'அடுத்த வாரம் மனப்பாடமாய் ஒப்புவிக்க வேண்டும்...' என்றார் ஆசிரியர். முடியாததால், ஆங்கில வகுப்பின் போது, சிமென்ட் தரையில் மண்டியிட்டேன்.
முதல் மாதாந்திரத் தேர்வு முடிந்தது. ஆங்கில பாடத்தில், நான் வாங்கிய மதிப்பெண் பூஜ்யம். வழக்கம் போல, தரையில் மண்டியிட்டிருந்தேன்.
'மார்ச் மாத திருப்புதல் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு, 'ஜியாமெட்ரி பாக்ஸ்' பரிசளிப்பேன்; யார் வாங்குவீர்...' என்றார் வகுப்பாசிரியை சரோஜா.
'வேலுச்சாமி வாங்குவான்... மிஸ்' என்று சொல்லி என்னை மிகவும் கிண்டலடித்தனர் மாணவர்கள். அவமானத்தால், தலை குனிந்து அழுதேன்.
அப்போது, வகுப்புக்குள் நுழைந்த சமூக அறிவியல் பாட ஆசிரியை காவேரி, 'என்னடி சரோஜா... வேலுச்சாமி மண்டி போட்டு நிக்கிறான்...' என்றார்.
'வேறென்ன செய்வான்; ஆங்கிலத்தில் ஜீரோ வாங்கியிருக்கான்...' என்றார் வகுப்பாசிரியை சரோஜா.
'மற்ற பாடங்களில், 60க்கும் மேல் வாங்கியிருக்கான். ஆனால், ஆங்கிலத்தில் ஜீரோ... பாவம், கிராமத்து பையன் கவனிச்சிக்கடி...'என்றார்.
அடுத்த நாளிலிருந்து, ஆசிரியை சரோஜா, மதிய இடைவேளையில், அரைமணி நேரம் ஆங்கிலம் கற்பித்தார். காலாண்டு தேர்வில், ஆங்கிலத்தில், 30 மதிப்பெண்கள் பெற்றேன்.
'வேலு... நாளையிலிருந்து தனி வகுப்பிற்கு வர வேண்டாம்... இனிமேல் நீயே படித்துக் கொள்ளலாம்; உன்னால் முடியும்...' என்று, உற்சாக மூட்டினார்.
மார்ச் மாத திருப்புதல் தேர்வு முடிந்தது.
'அன்று எல்லாரும் வேலுச்சாமியை கேலி செய்தீர்கள்; இன்று ஆங்கிலத்திலும், முதலாவதாக வந்துள்ளான். அவனுக்கு இந்த, 'ஜியாமெட்ரி பாக்ஸ்' பரிசளித்து, வாழ்த்துகிறேன்...' என்றார்.
அன்றும், என் கண்களில் கண்ணீர். இந்தமுறை ஆனந்த கண்ணீர். கல்விக்கண் திறந்த ஆசிரியைக்கு நன்றி கூறும் கண்ணீர். இது நடந்தது, 1967ம் ஆண்டில்.
கடந்த, 50 ஆண்டுகளாக, ஆசிரியர் தினத்தன்று, இதை நன்றியுடன் நினைவு கூறுவேன்; இந்த ஆண்டு, உங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு மனதார நன்றி செலுத்துகிறேன்.
- மா.வேலுச்சாமி, கோவை.
வாழ்க வளமுடன்!
- பொறுப்பாசிரியர்.
