
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் மாயமானார் இளவரசர். அப்போது நாட்டின் எல்லைப் பகுதியில் எதிரிகளின் மர்ம நடமாட்டத்தை கண்காணித்து ஒடுக்க சென்ற படை நடவடிக்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. களத்தில் இறக்கிய வீரர்களில் பலரை காணவில்லை. அவர்கள், நாட்டை மறந்து எதிரிகள் பக்கம் சாய்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இனி -
'வேழமலை வீரர்கள், நாட்டுப்பற்று உடையோர். தன் நாட்டுக்காக எவ்வித தியாகத்தையும் செய்ய கூடியோர். அதை, பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்; அவர்கள், எதிரிகளுடன் கைகோர்த்து, துரோகம் செய்திருப்பரா...'
மிகவும் விசனத்துடன் கேட்டார் படைத்தளபதி.
'நீங்கள் கூறுவதும் சரி தான். அதேசமயம், உங்கள் பதிலிலே விடை இருக்கிறதே...'
'அப்படியென்றால், காட்டில் இருப்பது எதிரிகள் அல்ல என்கிறீர்களா...'
'அது தான், என் சந்தேகமும்...'
அமைச்சர் கூறியதை வைத்து, சிந்தித்தார் தளபதி.
'எதிரிகளிடம் இருந்து தப்பி வந்த வீரர்கள் கூறிய தகவல்களையும் சேர்த்து சிந்தித்து பாருங்கள். எல்லாமே, முன்னுக்கு, பின் முரணாக இருக்கும்...'
'ஆமாம்... தப்பி வந்த வீரர்கள் கூறிய கணக்கு, 50ஐ தாண்டவில்லையே... ஆனால், நாம் ஊகித்தது, 500 பேர் அல்லவா...'
'இப்போது தெரிகிறதா... நான் முன்வைக்கும் முரண்பாடு...'
'ஆமாம் அமைச்சரே... காட்டுக்குள் இருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை பற்றி, வீரர்கள் கூறியதை வைத்து தான், கணக்கிட்டோம். ஆனால், அதுவே தவறாக தெரிகிறதே...'
'தற்போது, காட்டுக்குள் எதிரிகளுடன் சண்டையிட சென்றீர்களே... அங்கு, எத்தனை பேரை பார்த்தீர்கள்...'
'எதிரிகள் ஒருவரை கூட, நான் பார்க்கவில்லை. ஆனால், சண்டை நடந்த தகவலை அங்கிருந்து தப்பிய வீரர்கள் இருவர் தான் தெரிவித்தனர்...'
'சண்டை நிகழ்ந்த இடத்தில், நீங்கள் கண்டது என்ன...'
'பெரிய சண்டை நடந்ததாக, நம் வீரன் கூறிய மானோடை கரையில், வெறும் கைகலப்பு நடந்த அறிகுறி மட்டும் தான் இருந்தது...'
'கைகலப்பு என்றால் என்ன...'
'எதிரிகள் என, நாம் எண்ணிக்கொண்டிருப்போர், ஒருவேளை மன்னருக்கு எதிராக, கிளர்ச்சி செய்யும் புரட்சிக்காரர்களாக இருப்பாரோ...'
'அப்படியும் இருக்கலாம்; ஆனால், நிச்சயம் வேற்று நாட்டினராக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்...'
அமைச்சரின் தெளிவான கூற்று, தளபதியின் முகத்தில், பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.
'தளபதி... மானோடை கரையில் என்ன பார்த்தீர்...'
'ஒரு சில குதிரைகளையும், இரண்டு வீரர்களையும் தவிர்த்து, எதிரிகள் அங்கு இல்லை...'
'போர் ஆயுதங்கள்...'
'வாள், ஈட்டி, அம்பு என, ஆயுதங்கள் எதுவுமில்லை; மாறாக, ஒரு குறுவாளும், இரண்டு கட்டாரிகளும் தான் கிடந்தன...'
'அப்படியென்றால், அங்கு சண்டை நடந்த அறிகுறி எதுவும் இல்லை தானே...'
தளபதியின் மனதில், அந்த காட்சிகள் படம் போல் ஓடின.
'அமைச்சரே... நீங்கள் கூற வருவதும் சரி தான். குறுவாள், கட்டாரிகளில் கூட ரத்த கறை எதுவுமில்லை; சண்டை நடந்ததாக கூறிய இடத்தில், ரத்த சிதறல்களும் இல்லை; எல்லாமே நாடகம் போல் தெரிகிறது...'
'மன்னருக்கு எதிரான புரட்சியாளர்களுடன், நம் வீரர்கள் கைகோர்த்து இருப்பரோ...'
'அப்படியானால், இப்போது என்ன செய்வது...'
அதிர்ச்சி, சோர்வு மிகுதியால், அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார் தளபதி.
'ராஜகுரு வரட்டும்; அவருடன் ஆலோசிப்போம்...'
ராஜகுருவின் வரவுக்காக காத்திருந்தனர் தளபதியும், அமைச்சரும்.
'ராஜகுரு வருகிறார்...'
தகவல் கூறி, சென்றான் வீரன் ஒருவன்.
நிதானமாக நடந்து வந்தார் ராஜகுரு.
'தளபதி... நம் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வந்ததே... மானோடை கரையில் என்ன நடந்தது...'
'ராஜகுருவே... நாம், ஏதோ தவறாக கணித்து செயல்பட்டுள்ளோம்...'
'தளபதி... சற்று தெளிவாக கூறுங்கள்...'
'காட்டுக்குள், எதிரி நாட்டினர் இருக்க வாய்ப்பில்லை என தோன்றுகிறது...'
அதை கேட்டதும், அமைச்சரிடம் திரும்பினார் ராஜகுரு.
'என்ன சொல்கிறார் தளபதி...'
'நடந்த நிகழ்வுகளை சற்று ஆழமாக யோசித்தால் அங்கு, எதிரி படையினர் இருப்பது போல் தெரியவில்லை. மன்னருக்கு எதிராக புரட்சிப் படையினர் இருக்கலாம் என தோன்றுகிறது...'
'காட்டுக்குள், எதிரி படையினர் இல்லை என்பதை, இப்போதாவது கண்டுபிடித்தீர்களே...'
கேலியும், கிண்டலுமாக பதிலளித்தார் ராஜகுரு.
அவரை நிமிர்ந்து பார்த்தனர், தளபதியும், அமைச்சரும்.
'சத்தமின்றி, மூன்று மோப்ப நாய்கள் காணாமல் போன போது, உங்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்க வேண்டும்...'
'அப்படியென்றால், மோப்ப நாய்கள் தாக்கப்படவில்லையா...'
'தாக்கப்பட்டிருந்தால், வலியில், சாவு ஓலமிட்டு தானே வீழ்ந்திருக்கும். அவ்வளவு வேகமாக, அவை ஓடியதற்கு காரணம், அறிமுகமான ஒரு நபர் அங்கே, அப்போது இருந்திருக்கலாம் அல்லவா...'
'மோப்ப நாய்களுக்கு அறிமுகமான நபரா...'
அமைச்சரின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.
'போர் பயிற்சியின் போது, நம் படையின் குதிரைகள், யானைகள், மோப்ப நாய்கள் அனைத்துக்கும், அறிமுகமான ஒரு நபர், அப்போது அங்கிருப்பார். தங்களது மோப்ப சக்தியால், அதை உணர்ந்த மோப்ப நாய்கள் அவரை காணும் ஆவலில் தான் வேகமாக ஓடியிருக்கும்...'
புன்னகையுடன் கூறினார் ராஜகுரு.
அதேசமயம், முகத்தில் பேயறைந்தது போல நின்றிருந்தனர் அமைச்சரும், தளபதியும்.
'உங்கள் ஊகம் சரி தான். அங்கிருந்து களமாடியது இளவரசர் வீரவேலன்...' என கூறி, நிறுத்தினார் ராஜகுரு.
அதிர்ச்சியுடன், ஒருவர் மாற்றி ஒருவர் முகத்தை பார்த்தனர் தளபதியும், அமைச்சரும்.
- தொடரும்...
ஜே.டி.ஆர்.