sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வேழமலைக்கோட்டை! (21)

/

வேழமலைக்கோட்டை! (21)

வேழமலைக்கோட்டை! (21)

வேழமலைக்கோட்டை! (21)


PUBLISHED ON : ஜூலை 20, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் மாயமானார் இளவரசர். இதைத் தொடர்ந்து நாட்டு எல்லையில் எதிரிகள் குவிந்திருப்பதாக தகவல் பரவியது. அதை முறியடிக்க முடியாமல் படை திணறிவந்தது. இவை இளவரசர் மேற்பார்வையில் அவரே முன்னின்று செய்தது தெரிய வந்தது. இளவரசருக்கு எதிராக சதி செய்தவர்கள் இதையறிந்ததும் செய்வதறியாது திணறினர். இனி -

'காட்டுக்குள் இருந்து, இத்தனை நாளும் களமாடியது இளவரசர் வீரவேலன் தான்...'

புன்னகையுடன் கூறினார் ராஜகுரு.

அதிர்ச்சியுடன், ராஜகுருவை பார்த்தனர் அமைச்சரும், தளபதியும்.

'நடந்த நிகழ்வுகள் எல்லாமே இளவரசரின் திட்டமிட்ட ராஜதந்திரம்...'

ராஜகுரு கூறியதும், அமைச்சர், தளபதி முகம் அச்சத்தில் வெளிறியது.

ஆனால், அதை மறைத்து சட்டென வெளியில் ஓடி சென்றார் தளபதி.

அங்கு நின்ற வீரர்களிடம், 'அரங்கு காவலர்களே... ராஜகுருவை கைது செய்யுங்கள்... இது என் உத்தரவு...' என கட்டளை பிறப்பித்தார்.

அவரது கட்டளையை பொருட்படுத்தாமல் எளனமாக பார்த்தபடி நின்றிருந்தனர் காவலர்கள்.

எதுவும் புரியாமல் திரும்பிய தளபதியிடம், 'வேழமலைக்கோட்டை வீரர்கள், நாட்டுப்பற்று மிக்கவர் என சற்று முன், நீங்கள் தானே தெரிவித்தீர் தளபதி. அவர்கள் எப்படி, மன்னருக்கு எதிராக, சதி செய்யும் தளபதி கட்டளைக்கு கீழ்படிவர்...' என கேலி நிறைந்த தொனியில் கேட்டார் ராஜகுரு. பின், 'பக்கத்து அறையில் நீங்கள் போட்ட உத்தரவைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்...' என்றார் ஏளனமாக.

செய்வதறியாது திகைத்து நின்றார் தளபதி.

அமைச்சரின் முகத்தில் அச்சத்தின் சூடு பரவியிருந்தது.

அங்கு வந்த வைத்தியர், 'அமைச்சரே... ஏன் ஒரு மாதிரியாக இருக்குறீர்; என்ன நடந்தது தளபதி...' என விசாரித்தார்.

'காட்டில் களமிறங்கி இருப்பது இளவரசர் வீரவேலன் என்ற விபரத்தை இப்போது தான் அறிந்துள்ளனர்...'

எதுவும் நடவாதது போல் தெரிவித்தார் ராஜகுரு.

வைத்தியரும், ராஜகுருவும் எல்லா உண்மையும் தெரிந்தே தங்களுடன் இருந்துள்ளனர் என்பது அப்போது தான், அமைச்சருக்கும், தளபதிக்கும் புரிந்தது.

'இனியும் மறைக்க எந்த ரகசியமும் இல்லை...' என கூறி, அமைச்சரிடம் திரும்பினார் ராஜகுரு.

'நீங்களும், தளபதியும் சேர்ந்து, மன்னரை முடக்கி, ஆட்சியை கைப்பற்ற திட்டம் திட்டினீர். மன்னருக்கு, விஷம் கொடுக்க, வைத்தியருக்கு பணத்தாசை காட்டி இருக்குறீர். அப்போதே சுதாரித்து, என்னிடமும், மன்னரிடமும் இந்த விபரத்தை தெரிவித்தார் வைத்தியர். இந்த சதியில், வேறு எவரேனும் இருக்கின்றனரா என்பதை அறியவே, உங்கள் நாடகத்தை நாங்களும் உடனிருந்து நடத்தினோம்...'

மிரண்டு போய் பார்த்தனர் தளபதியும், அமைச்சரும்.

'மன்னரின் ஆலோசனைப்படி, அரண்மனையில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாக, இரண்டு மெய்காப்பாளர்களுடன் இளவரசரை கோட்டைக்கு வடதிசையில் இருக்கும் வேட்டைச்சாமி கோவிலுக்கு அனுப்பியதே நாங்கள் தான். அங்கிருந்து, அவர் திட்டமிட்டு நடத்தியவை தான் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்...

'போர் தந்திரங்களில், திறமை உடைய இளவரசர், இந்த பிரச்னையை தனியாக கையாளுவதாக தெரிவிக்க, 14 வயது சிறுவனாக இருந்தாலும், இது ஒரு களப் பயிற்சியாக இருக்கட்டும் என, அனுமதித்தார் மன்னர்...'

தொடர்ந்தார் வைத்தியர்...

'முதலில் ஒற்றனை வைத்து, நாட்டை ஆபத்து சூழ்ந்ததாக உங்களிடம் கூற வைத்தார் இளவரசர். இரு மெய்க்காப்பாளர் உதவியுடன், 20 தீப்பந்தங்களை தயாரித்து, நீளமான மூங்கிலில், வரிசையாக கட்டி இரவில் எரிய விட்டார் இளவரசர்...

'கோட்டையில் இருந்து, பார்த்த போது, காட்டில், 20 பேர் இருப்பது போன்ற தோற்றத்தை தந்தது. அந்த குழுவை பிடிக்க சென்ற குதிரை வீரர்களில், ராஜ விசுவாசமுள்ள இருவரை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு உண்மையை தெரிவித்தார் இளவரசர். அதில் ஒருவன் மட்டும் தப்பியது போல் நடித்து, ராஜ விசுவாசம் உடைய பிற வீரர்களுக்கு, தகவலை பகிர்ந்தான். படையை வழி நடத்திய மகேந்திரனும், இந்த அரும்பணிக்கு ஒத்துழைத்தார்...'

சற்று நிறுத்தினார் வைத்தியர்.

'இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளதா' என திகைப்புடன் பார்த்தனர் அமைச்சரும், தளபதியும்.

'ராஜ விசுவாச படையுடன் வந்து, கோட்டைக்கு, வடக்கு திசையில், முகாம் அமைத்து, உங்கள் கவனத்தை திசை திருப்பி, யாருமில்லாத தென்புறத்தில் அலையவிட்டது தான் இளவரசரின் உச்சகட்ட ராஜதந்திரம்...' என கூறி, சிரித்தார் ராஜகுரு.

தேன் எடுக்க சென்ற பெண்கள், ஒற்றர்கள், வைத்தியர் வேடம் அணிந்து மூலிகை எடுத்து வருவதாக சென்ற துாதுவன் என, தகவல்கள் அளித்த எல்லாரும், இளவரசர் வீரவேலன் நடத்திய நாடகத்தில் சிறப்பாக நடித்ததை புரிய வைத்தார் வைத்தியர்.

'தளபதியின் விசுவாசப் படையான ஐந்து பேர் குழு, காட்டுக்குள் சென்ற போது, சண்டையிடாமல், குளவிகளை பயன்படுத்தி கொட்ட வைத்து திருப்பி அனுப்பியதும், இளவரசரின் தந்திரம் தான். தளபதி படையுடன் சென்ற போது, மூங்கில் குழல்களின் உதவியுடன், குளவிகளின் ரீங்கார ஒலி எழுப்பி, தன்னுடன் இருப்பவர்களுக்கு தேவையான ஆயுதங்களை வீரர்கள் மூலம், காட்டில் போட வைத்ததும், அவரது திட்டம் தான்...'

விவரித்தார் ராஜகுரு.

'இரண்டு மெய்க்காவலர்களுடன் வனவாசம் சென்ற இளவரசர், தற்சமயம், 200க்கும் மேற்பட்ட வீரர்களுடன் கோட்டைக்கு வடதிசையில் வேட்டைச்சாமி கோவில் அருகே முகாம் அமைத்து, பயிற்சி அளித்து வருகிறார்...

'மன்னரின் உடல் நல குறைவுக்கு நான் கொடுத்த சிகிச்சையில், அவரும் நன்றாக தேறி விட்டார். உங்கள் இருவருக்கும், பாதாளச்சிறையா அல்லது சிரச்சேதமா என்பதை, விரைவில் மன்னர் முடிவு செய்வார்...' என்று முடித்தார் வைத்தியர்.

துரோகம் செய்த தளபதியும், அமைச்சரும் கைது செய்யப்பட்டனர்.

பின், நாட்டின் படைத் தளபதியாக பொறுப்பேற்றார் மகேந்திரன்.

களநில நாட்டு மன்னருக்கு, எச்சரிக்கை ஓலை அனுப்பப்பட்டது.

பயிற்சிக்குப் பின், நாடு திரும்பினார் இளவரசர் வீரவேலன். பின், மன்னராக பொறுப்பேற்றார்.

சுபிட்சமாக வாழ்ந்தனர் வேழமலை நாட்டு மக்கள்.

- முற்றும்.

- ஜே.டி.ஆர்.







      Dinamalar
      Follow us