PUBLISHED ON : ஆக 30, 2013

இதுவரை: அடிமேல் அடிவாங்கி நொந்துபோன வனிதா, தன் மனக் கவலையை போக்க காலாற நடந்தாள். இனி-
அன்று மாலை காமாட்சியின் கட்டளைப்படி காரியங்களை முடித்து விட்டாள் வனிதா. இருட்டுவதற்கு இன்னும் வெகு நேரமாகும். ஆகவே தன்னை லட்சியம் செய்யாத வீட்டில் சுவற்றைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க விரும்பாத வனிதா, காலாற நடந்து போய் வரத் தீர்மானித்துக் கிளம்பினாள். காமாட்சியின் கட்டுப்பாடும் கொஞ்சம் தளர்ந்திருந்தது.
வேலைகளைச் செய்துவிட்டு வெளியே போய் வருவதை அவள் தடை செய்யவில்லை. வனிதா இரண்டு தெருக் களைக் கடந்து மெதுவாக நடந்து கொண்டி ருந்தாள். அப்போது அவள் கண்ட ஒரு காட்சி அவள் நடையைத் தடுத்து நிறுத்தியது.
ஐந்தாறு சிறுவர் சிறுமியர்... ஒருவன் புல்லாங்குழல் ஊதினான். ஒரு சிறுமி, ஒன்றைக் கம்பியில் மூங்கிலையும் கொட்டாங் குச்சியையும் கொண்டு உருவாக்கிய விளையாட்டு வயலினான துந்தினாவில் கீச் மூச்சென்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு பையன், பொங்கலின் போது சிறுவர் கள் சத்தமுண்டாக்குவார்களே தோல் போர்த்திய பறை வாத்தியம், அதில் தட்டிக் கொண்டிருந்தான். இன்னொரு பையன் அவனுடைய அப்பா பஜனைக்கு செல்வர் போலிருக்கிறது. தன் அப்பாவின் ஜால்ராவில் ஒலி உண்டாக்கிக் கொண்டிருந்தான். ஒரு பெண் தனக்குத் தெரிந்த சுலோகங்களைப் பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடலோடு அந்த வினோத வாத்தியக் கோஷ்டி இணையவே இல்லை. அவரவர் தங்களுடைய வாத்தியக் கருவிகளை தங்கள் இஷ்டப்படி இயக்கிக் கொண்டிருந்தனர்.
''எதற்காக இப்படித் தெருவில் கச்சேரி செய்து கொண்டு போகிறீர்கள்?'' என்று பாடும் அந்தச் சிறுமியிடம் கேட்டாள் வனிதா.
''அதுவா, வந்து... நாங்க நிதி வசூல் பண்றோம்!'' என்றான் ஜால்ரா போட்ட சிறுவன்.
''எதுக்கு வசூல்?''
''ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கு எல்லாரும் உதவணும்னு எங்க ஸ்கூலிலே டீச்சரெல்லாம் சொன்னாங்க. நாங்களும் பணம் சேர்த்துத் தரமுடிவு பண்ணினோம். ஆனா, யாருகிட்ட கேட்டாலும் அவங்க போ போன்னு கையை ஆட்றாங்க. அதனால நாங்க ஒரு ஐடியா பண்ணினோம். கிருஷ்ண ஜெயந்தியின் போது கோஷ்டியா இப்படிப் பாடி பணம் வசூல் பண்றதுன்னு முடிவு செய்தோம். கோபிக்கு, புல்லாங் குழல் வாசிக்கத் தெரியும். நான் இதிலே கஞ்சிரா வாசிப்பேன். மீனா அவளோட வயலின்லே ஜோரா வாசிப்பா!'' என்று ஒவ்வொருவரும் உற்சாக மாகத் தங்கள் திறமையைக் கூறினர்.
''உங்களோட தன்னம்பிக்கையையும், ஒற்றுமையையும் பாராட்டறேன். நல்ல காரியத் துக்காக, நீங்கள் இப்படி நிதி வசூலிக்கிறதும் திருப்தியாக இருக்கு. நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பாடக் கற்றுக்கொள்ள வேண்டும். அது இல்லாததினால் ஒரே சத்தமாக இருக்கிறது!'' என்றாள் வனிதா.
''அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம். எங்களுக்கு யார் சங்கீதம் கற்றுத் தருவா? ஏதோ எங்களுக்குத் தெரிந்ததை கொண்டு... பாடுகிறோம்,'' என்றனர்.
''எனக்கும் அது தெரியும். உங்களை நான் குறை கூறவில்லை. நான் கற்றுத் தருகிறேன். சிரமம் ஒண்ணுமில்லை. இரண்டு நாள் பழகினால் போதும், பிறகு சரியாக பாடலாம். கேட்கவும் இனிமையாக இருக்கும். நிதி வசூலும் கூடும்!'' என்றாள் வனிதா.
அந்தச் சிறுவர் சிறுமியருக்கு ஒரே குஷி.
''நிஜமாகவா அக்கா? நீங்க எங்களுக்கு பாடச் சொல்லித் தருவீங்களா? இதை கேட்கவே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு. எப்படி எங்கே வந்து நாங்க கத்துக்கறது?'' என்று கேட்டாள் சுலோகம் பாடிய சிறுமி.
''அதோ இருக்கிறதே பார்க். அங்கு எல்லாரும் நாளைக்கு ஐந்து மணிக்கு வந்துடுங்க. நானும் வந்துடறேன் என்ன?'' என்று கூறி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டாள் வனிதா.
நடிளைக்கு குருமூர்த்தி வீட்டுக்கு போய் என் வயலினை எடுத்துக் கொண்டு அந்த பார்க்குக்குப் போக வேண்டும். அவர்களுக்கு சேர்ந்து பாடும் முறையை கற்றுத் தரவேண்டும். இப்படி எண்ணமிட்டபடியே நடந்தாள் வனிதா.
வனிதாவுக்கு ஏதோ ஒரு இனந்தெரியாத திருப்தி, மனநிறைவு உண்டாகி இருந்தது. புல்லாங்குழலும், துந்தினாவும், பறை கஞ்சி ராவும், ஜால்ராவும் அதனதன் போக்கில் ஒலி எழுப்பிய அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டபோது அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது அவளுக்கு!
தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள் வனிதா. அவள் நினைவெல்லாம், அன்று பார்த்த அந்த சிறுவர், சிறுமியரைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.
'அவர்களுக்கு முறையாகச் சேர்ந்து பாடத் தெரியாவிட்டாலும் எத்தனை தன்னம்பிக்கை யோடு, உற்சாகத்தோடு செயல்படுகின்றனர். தங்கள் வாத்தியத்தில் சரியாக வாசிக்கிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை அந்தப் பிஞ்சு நெஞ்சங்கள். அவர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கில்லையே... என்னால் அவர்களைப் போல கவலை இல்லாமல் வயலின் வாசிக்க முடியவில்லையே!' என்ற ஏக்கம் வனிதாவின் நெஞ்சை அடைத்தது. அதையும் மீறி அவளுக்கு சிரிப்பும் வந்தது.
'எவ்வித சுதந்திரமும் இல்லாத நான், அந்தக் குழந்தைகளுக்கு சேர்ந்து இசைப்பது எப்படி என்று சொல்லித் தருவதாகக் கூறி அவர்களை நாளைக்கு 'பார்க்' வரும்படி கூறினேனே! என்ன பைத்தியக்காரத்தனம் இது? யோசிக் காமல், என் நிலையை மறந்து, எப்படி அவர் களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி கூறினேன்!' வனிதாவின் மனதில் படர ஆரம்பித்தது.
எனக்குக் கிடைக்காத ஒன்றை அவர் களுக்குக் கிடைக்கும்படி செய்வதில் ஏற்பட்ட ஆசையின் விளைவுதான் அது என்ற முடிவுக்கு வந்தாள் வனிதா.
'எப்படியும் நான் சொன்னபடி அந்தக் குழந்தைகளுக்கு உதவுவேன். அதில் என்ன தடை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பேன்...' என்று உறுதியை வளர்த்துக் கொண்ட பிறகு தான் அவளுக்குத் தூக்கம் வந்தது.
மறுநாள் மாலை குருமூர்த்தியின் வீட்டுக்குப் போய், தன் வயலினை எடுத்துக் கொண்டு, பார்க்கை நோக்கி நடந்தாள். அந்த குழந்தைகளை எதிர்பார்த்து, அவர்களுக்காக காத்திருந்தாள். குழந்தைகளும் மிகுந்த எதிர் பார்ப்புகளோடு சொன்னபடி வந்து விட்டனர். அது பெரிய பார்க், அடர்த்தியாக மரங்களும், பூச்செடிகளும், குரோட்டன்ஸ்களும் கொண்டது. அதிக ஜன நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குப் புறமான இடத்தைச் தேர்ந்தெடுத் தாள் வனிதா. நாலு பக்கமும் அடர்த்தியாக குரோட்டன்ஸ் செடிகள் உயர்ந்து வளர்ந்து நின்றன. நடுவில் மெத்தென்ற புல்வெளி.
துந்தினாவோடு வந்திருந்த பெண்ணிடம் அவளுடைய அந்த கொட்டாங்கச்சி வாத்தியத் தில் எப்படி சுருதி சேர்ப்பது என்பதைச் சொல்லிக் கொடுத்தாள். புல்லாங்குழல் ஊதும் சிறுவனிடம் அவனை குழல் இசைக்கச் சொல்லி அதை சீர் திருத்தினாள். கஞ்சிரா போன்ற பறை வாத்தியத்தை தட்டும் சிறுவனுக்கு அதில் எப்படித் தாளம் தவறாமல் ஒலி எழுப்ப வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தாள். அவர்களை இப்படி ஒழுங்கு படுத்திய பின் அவர்களோடு சேர்ந்து தானும் வயலின் வாசிக்கலானாள். இனிய குரலுடைய ஒரு சிறுமி பக்திப் பாடல்களைப் பாடினாள். அந்தப் பாடல்களுக்கு மெட்டமைத்துத் தன் வயலினை மீட்டலானாள். தன்னோடு இணைந்து அவர்களை செயல்பட வைத்தாள். ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி னாலும், நாலைந்து நாட்களில் தேறிவிட்டனர். அவர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் பக்திப் பாடல்களுக்கும், வனிதா வின் வயலினுக்கும் ஒற்றுமையாக மற்றவர் களும் தங்கள் இசைக் கருவிகளை இயக்கத் தெரிந்து கொண்டனர். தன் முயற்சி வெற்றி பெற்றதில், வனிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருவாரத்தில் வனிதாவின் இசைக்குழு நிதி வசூல் செய்வதற்கு ஆயத்த நிலையை அடைந்துவிட்டது. குழந்தைகள் அவளை, 'அக்கா, அக்கா' என்று பாசத்தோடு அழைத்து, ஒட்டுதலாக இருந்தனர்.
''நாம் கடைவீதியில் போய் நிதிவசூல் செய்ய வேண்டாம். அங்கு நம்மை வேடிக்கை பார்க்கக் கூடுவார்களே தவிர, உதவ மாட்டார் கள்; தவிர வியாபார நிறுவனங்கள், நம்மால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கருதி நம் நோக்கத்தை கேட்டறிய மாட்டார்கள். ஆகவே, நாம் குடியிருப்புப் பகுதிகளுக்கும், பலமாடிக் கட்டடங்களைக் கொண்ட காலனி களுக்குப் போவோம். அங்கு நம்மை வேடிக்கை பார்க்கும் கும்பல் இருக்காது. குடும்பப் பெண்களும், தலைவர்களும் நம்மை அனுதாபத்தோடு பார்ப்பர்...'' என்றாள் வனிதா.
குழந்தைகளும் அவள் யோசனையை ஏற்றுக் கொண்டனர்.
-தொடரும்.
