sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

விரிஞ்சிபுரம்!

/

விரிஞ்சிபுரம்!

விரிஞ்சிபுரம்!

விரிஞ்சிபுரம்!


PUBLISHED ON : மார் 18, 2023

Google News

PUBLISHED ON : மார் 18, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விரிஞ்சிபும் என்ற சிற்றுாரில் வசித்து வந்தான் பலராமன்; பெயரைப் போலவே, உடலும், திடமாக இருந்தது. பெற்றோரை இழந்தவன்; பாட்டியுடன் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தான்.

அந்த ஆண்டு மழை பொய்த்தது.

விளைச்சல் இன்றி வாடினான்; பலரும், அவன் உடலமைப்பு பார்த்து, 'மன்னரின் போர்ப் படையில், சிப்பாயாக சேரலாமே...' என கூறினர்.

அதை கேட்டு அலுத்த பலராமன், ஊர் ஒதுக்குப்புறமாக இருந்த பாறையில் அமர்ந்து, எதிர்காலம் பற்றி சிந்தித்தான். அப்போது, துறவி ஒருவர் வருவதைக் கண்டான். எழுந்து நின்று இருகரம் கூப்பினான்.

புன்னகைத்தபடி, 'இறையருளால், நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கிறாய்... ஏன் கன்னத்தில் கை வைத்து சோகமாய் இருக்கிறாய்...' என, அன்புடன் கேட்டார் துறவி.

மன உளைச்சலுக்கான காரணத்தை கூறினான்.

அவனை அழைத்து, மூலிகைகள் நிறைந்த காட்டுப் பகுதியில், சில செடிகளை அடையாளம் காட்டினார். பின், கடுகை விட சிறிய விதைகளைக் கொடுத்தார். அதை பெற்றவனிடம், 'அறிவைக் கூர்மையாக்கி, வாழ்வில் வெற்றி பெறுவாய்...' என அறிவுரைத்து சென்றார்.

பாட்டியிடம் விடை பெற்று நகரம் நோக்கி நடந்தான் பலராமன். இரவு ஒரு சத்திரத்தில் தங்கிய பின், மறுநாள் காலை உணவருந்த விடுதியில் அமர்ந்தான்.

அதேசமயம், இரண்டு குதிரை வீரர்கள் சாப்பிட வந்தனர்; பலராமனைக் கண்டனர். பின், பேசியபடி உணவு உண்டனர்.

ஒருவன், 'நல்ல உடலமைப்பு உடைய உனக்கு என்னென்ன தெரியும்... ஏதேனும் பயிற்சி பெற்றிருக்கிறாயா...' என கேட்டான்.

அவர்களை அமைதியாக பார்த்த பலராமன், 'நெருப்பைக் கையில் எடுத்து, பந்து போல் விளையாட தெரியும்; மணலைக் கயிறாக திரிக்க தெரியும்; அவ்வளவு ஏன், அதோ தெரியும் மலையை தோளில் சுமப்பேன்...' என்றான்.

வீரர்களிடம் வெடிச்சிரிப்பு உருவானது.

பலராமன் அமைதியாய் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிப்பாய்கள் ஏளனப் பார்வையை தளர்த்தி, 'நீ கூறியதை எல்லாம் எங்கள் தளபதி முன் செய்வாயா...' என கேட்டனர்.

பொறுமையுடன், 'ஆம்...' என, ஒற்றை சொல்லில் பதிலளித்தான்.

சத்திரத்து திண்ணையில் அமர்ந்திருந்த பலராமன், குதிரைகளின் குளம்பொலி சத்தம் கேட்டு நிமிர்ந்தான். சில நிமிடங்களில் குதிரை வீரர்கள் புடை சூழ, கம்பீரமாக இறங்கினார் தளபதி.

தளபதிக்கு வணக்கம் கூறினான் பலராமன்.

'நீ இவர்களிடம் கூறியதெல்லாம் உண்மையா, சொன்னது போல செய்து காட்ட முடியுமா... தவறினால் சிரச்சேதம் செய்யப்படுவாய். கவனத்தில் கொள்...'

- தளபதியின் குரலில் கம்பீரம் நிறைந்திருந்தது.

பணிவுடன், 'முடியும்...' என கூறினான் பலராமன்.

'அப்படியெனில், நாளை காலை மைதானத்தில், உன் விந்தையை செய்து காட்டு. இல்லையேல், உன் விதி முடியும்...'

எச்சரிக்கை செய்து, வீரர்களுடன் தளபதி மறைந்தார்.

உடனே, காட்டுப் பகுதிக்குச் சென்று, துறவி அடையாளம் காட்டிய மூலிகைச் செடிகளைப் பறித்து, அரைத்து வைத்து கொண்டான். பின், மைதானத்தில் ஒரு சிறிய வட்டம், சுண்ணாம்புக் கட்டியால் வரைந்தான்; அவ்வட்டத்தில் இருந்த மண்ணுடன், துறவி தந்த நீர் முள்ளி விதைகளைக் கலந்தான். பின், நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் -

மைதானத்தில் மக்கள் நிறைந்திருந்தனர்.

அரைத்த மூலிகைக் கலவையை கைகளில் பூசி, ஓரமாய் நின்றிருந்தான் பலராமன்.

ஒரு குழியில் சுள்ளிகளை போட்டு தீ மூட்டி, நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

சற்றைக் கெல்லாம், குதிரை வீரர்களுடன் தளபதி வந்து சேர்ந்தார்.

பலராமனை பார்த்து, ஏளனமாய் சிரித்தபடி, 'ம்... துவங்கு...' என கர்ஜித்தார்.

நெருப்புத் துண்டங்களை துாக்கிப் போட்டு பிடித்தபடி தளபதி அருகே வந்த பலராமன், 'போதுமா...' என கேட்டான்.

'ம்... சரி... அடுத்த சாகசம்...'

அடுத்து, சுண்ணாம்பால் வட்டமிட்டிருந்த பகுதிக்கு சென்றான் பலராமன்.

ஒரு குவளை நீரெடுத்தான். அதை நீர் முள்ளி விதையுடன் கூடிய மணலில் ஊற்றி பிசைந்தான். ஜவ்வு போல் மாறி, மணலுடன் கலந்து, மெல்லிய கயிறாக நீண்டது. அது பலராமன் கையில் தொங்கியது.

மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அந்த மணல் கயிற்றை தளபதி அருகில் வைத்து அமைதியாக பார்த்தான்.

'சரி... மலையை தோளில் சுமப்பதாக சவால் விட்டாயல்லவா...'

முழங்கினார் தளபதி.

'எனக்கு தயக்கம் ஏதும் இல்லை; ஆனால், அந்த மலையை யாராவது துாக்கி, என் தோளில் வைத்தால் சுமப்பேன்...'

பலராமன் கூற தளபதியின் கண்கள் சிவந்தன.

உடனே, துணை தளபதி எழுந்து, 'பலராமன் சொல்வதில் தவறு ஏதுமில்லை; மலையை சுமக்க முடியும் என்று அவன் கூறிய போது நம்பியது நம் தவறு; அவனது புத்தி கூர்மையைப் பாராட்ட வேண்டும்...' என்றார்.

உடனே பலராமனை அரசவைக்கு அழைத்து சென்ற தளபதி சாகசங்களை பற்றி கூறினார். வியப்புற்ற மன்னர், 'இவனை உடனே படையில் சேர்த்து பயிற்சி கொடுங்கள்; திடமான தேகமும், அறிவும் படைக்கு பலம் சேர்க்கும்...' என்றார்.

பணிவுடன், 'நன்றி மன்னா... ஒரு விண்ணப்பம்...' என்றான் பலராமன்.

மன்னர் தலை அசைத்த உடன், 'படையில் சேர்ந்தாலும், ஆண்டில் மூன்று மாதம் என் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்...' என்றான்.

ஒப்புதல் வழங்கினார் மன்னர்.

குழந்தைகளே... உழைப்பே உயர்வு தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!



- எம்.ஆர்.பகவான் தாஸ்






      Dinamalar
      Follow us