
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த சேர்ப்பாடி நடுநிலைப் பள்ளியில், 1965ல், 3ம் வகுப்பு படித்தபோது, என் செயல்களை விசாரித்து அறிந்து கொள்வார் என் தந்தை எஸ்.ஏ.குப்புசாமி. இதற்காக, 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்தித்து செல்வார்.
என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. வகுப்புக்கு சிலேட், பென்சில் எடுத்துச் செல்ல மாட்டேன். பக்கத்தில் இருப்போரிடம் எழுது பொருட்களை இரவல் வாங்கிக் கொடுப்பார் ஆசிரியர் அண்ணாமலை. இது அன்றாட பழக்கமாகியது.
அன்று, வகுப்புக்கு வந்த தந்தை இதை கவனித்து, 'விறு...விறு...' வென வீட்டுக்கு சென்றார். சிலேட் மற்றும் சேர்த்து வைத்திருந்த பென்சில் குச்சிகளை மண் கலயத்துடன் எடுத்து வந்தார்.
வகுப்பறையில் அவற்றை கொட்டி, 'இவ்வளவு பொருட்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பது கேவலம் இல்லையா... நீ, 'ஏற்பது இகழ்ச்சி' என, படித்ததில்லையா...' என கடிந்து, உடனிருந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். பின், ஆசிரியரிடம், 'இனி, சிலேட், பென்சில் இல்லாமல் வந்தால், இவளை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்...' என கூறி சென்று விட்டார்.
பரிவுடன், 'உன் தந்தை எவ்வளவு ஈகை குணம் உடையவர். அவர் பெயர் கெடுவது போல் நடக்கலாமா...' என்று பக்குவமாக எடுத்து கூறி தேற்றினார் ஆசிரியர். பின், யாரிடமும், எதற்காகவும் கை நீட்டுவதை தவிர்த்தேன்.
எனக்கு, 65 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். என் குழந்தைகளுக்கு, பழந்தமிழ் இலக்கியமான ஆத்திச்சூடியில் வரும், 'ஏற்பது இகழ்ச்சி' என்ற அறக்கருத்தை தாரக மந்திரமாய் போதித்து வளர்த்துள்ளேன்.
நேர்மைக்கு வழி காட்டிய தந்தையும், அதை பக்குவமாய் எடுத்துரைத்த ஆசிரியரும் இன்று உயிருடன் இல்லை. வாழ்வை நெறிப்படுத்திய இருவரையும் நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்!
- கே.கோப்பெரும்தேவி, சென்னை.