
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கடலூர் துறைமுகப்பட்டினத்தில் தூய தாவீது உயர்நிலைப்பள்ளி மிகப் பிரபலமானது.
ஒருநாள்-
சரித்திர வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எங்கள் பள்ளியை ஒட்டினாற்போல் ஒரு தேவாலயம்; இதே பள்ளி வளாகத்தில் ஆங்கிலேய பிரபு 'ராபர்ட் கிளைவ்' தங்கியிருந்த வீடும் உள்ளது. எனவே, அடிக்கடி பல ஆங்கிலேயர்கள், எங்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வர்.
அப்படித்தான் ஒருநாள் சில ஆங்கிலேயர்கள் ஓர் அயல்நாட்டு ஜீப்பில் வந்தனர். எங்கள் வகுப்பு ஓரமாக இருந்த மரத்தடியில் நிறுத்திவிட்டு, தேவாலயத்திற்குச் சென்றனர். சரித்திர பாடம் நடத்திக் கொண்டிருந்த எங்கள் ஆசிரியரின் கவனமும் அந்த வாகனத்தின் மீது திரும்பியது. அவர் சட்டென மாணவர்களைப் பார்த்து, 'ஏலேய் இந்த ஜீப்புல நம்ம நாட்டு பொருள் ஒண்ணு இருக்கு. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றார்.
மாணவர்கள், எதை எதையோ சொன்னார்கள். பெரும்பாலான மாணவர்கள், 'பெட்ரோல்' என்றே சொன்னார்கள். அதற்கு ஆசிரியர், 'பெட்ரோல் நம் நாட்டில் தயாரிக்கவில்லை; அயல் நாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம்!' என்று கூறிவிட்டார்.
நான் சிறு வயதிலிருந்தே கார் பைத்தியம். எல்லா மாடல் கார்களும் எனக்கு அத்துப்படி. எஞ்சின் சத்தத்தை வைத்து, அது என்ன மாடல் கார், லாரி என்று சொல்லிவிடுவேன். நானும் அந்த ஜீப்பை பார்த்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.
ஆசிரியர் கடைசி பெஞ்சில் இருந்த என்னை நோக்கி, 'ஏலேய்... மூர்த்தி உனக்கு என்ன தோணுது?' என்றார். நான் பட்டென்று, 'சார் இந்த ஜீப்லே இருக்கற ஏதாவது ஒரு டயர்ல நம் நாட்ல பிடிச்ச காத்து இருக்கும் சார்' என்றேன்.
ஆசிரியர் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை போலும். அசந்து விட்டார்.
'எப்படிடான்னு!' விஷமச் சிரிப்போடு கேட்டார்.
'பல ஆயிரம் மைல்கள் ஓடி இங்கு வந்திருக்கு. நம் நாட்டுக்கு வந்தப்புறம் நம்ப நாட்டு ரோடுல எப்படியும் ஒரு சக்கரமாவது பஞ்சர் ஆகியிருக்கும். பஞ்சர் ஒட்டி நம்ம நாட்டுல காத்து பிடிச்சிருப்பாங்க' என்றேன்.
கடைசி பெஞ்சிற்கு வேகமாக வந்த ஆசிரியர் என் முதுகில் தட்டிப் பாராட்டியதை இன்றும் நினைத்துப் பார்ப்பேன். ஆனால் இன்றைக்கும் என் வீட்டில் கார் இல்லை என்பதுதான் உண்மை!
- வானவில் மூர்த்தி,
குரோம்பேட்டை.

