
என் வயது, 40; சிறுவர்மலர் இதழை, 3ம் வகுப்பு முதல் படித்து வருகிறேன்; அப்போது, வெள்ளிக்கிழமை தோறும், வீட்டின் அருகே வசித்த எண்ணெய் மில் அக்காவிடம், இரவல் வாங்குவேன்; பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமர்ந்து நண்பர்களுடன் படிப்பேன்!
முதலில், புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து, தொடர்கதை, படக்கதை, கட்டுரை என, ஒருவர் வாசிக்க, மற்றவர்கள் கேட்போம்.
சிறுவர்மலர் மூலம் தான், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகள், கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள் மற்றும் சாதனை அறிஞர்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், படக்கதைகளில் அனுமன் வால், சிம்மாசனம், பாடலிபுத்திரம், கதை நாயகன் செருப்பு அணிந்ததும் பறப்பது, நளதமயந்தியில் அன்னம் போன்ற பாத்திரங்களுக்கான ஓவியங்கள் மனதில் பசுமையாக பதிந்துள்ளன.
ஒவ்வொரு வாரமும், என் இளமைக் காலத்தை நினைவூட்டி, மகிழச் செய்யும் சிறுவர்மலர் இதழுக்கு மனமார்ந்த நன்றி!
- ஜெ.வெங்கடாசலம், கோவை.
தொடர்புக்கு: 98658 37991

