PUBLISHED ON : ஆக 10, 2018

நான், குடும்பத் தலைவி; வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்கள், மிக உற்சாகமாக இருக்கும். காரணம், 'தினமலர்' நாளிதழுடன் வரும் இணைப்பு இதழ்களே. புத்தகத்தை, யார் முதலில் படிப்பது என்ற போட்டி, குடும்ப உறுப்பினர்களிடம் துவங்கும். அதில், வெற்றி பெறுவது சுவாரசியமாக இருக்கும்.
நான், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த போது, 'நல்ல புத்தகங்கள் படி, இனிய இசையைக் கேள்... வயிற்றில் வளரும் சிசு, அவற்றை உள் வாங்கும்...' என்று பலர் அறிவுரை கூறினர்.
அன்று முதல், சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளையும், அவற்றின் இறுதியில் வரும் பட்டூஸ், செல்லுாஸ்... என துவங்கும் அறிவுரைகளையும் படித்து, வயிற்றில் வளரும் பாப்பாவை கொஞ்சுவேன். கதைகள் படிக்கும் நேரத்தில், குழந்தை வயிற்றில் உதைப்பதை, சில நாட்களில் உணர ஆரம்பித்தேன். அப்போது, அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்போது, குழந்தை பிறந்து, ஒருவருடம் ஆகிறது. பிரசவித்தது முதல், சில காலம், நேரமின்மையால், சிறுவர்மலர் சரியாக படிக்க முடியவில்லை.
இப்போது, மறுபடியும் படிக்க ஆரம்பித்துள்ளேன். மகன் அழும் போது, கதை படித்தால், சாந்தமாகி கவனமாக கேட்கிறான்; வியப்பாக உள்ளது.
நன்னெறி கதைகளை, குழந்தை ஆர்வத்துடன் கேட்க, துாண்டு கோலாய் இருக்கும் சிறுவர்மலர் இதழுக்கு, நன்றி மட்டும் கூற விரும்பவில்லை. இன்னும், பல கதைகளை, நல்ல விஷயங்களை, குழந்தையுடன் சேர்ந்து படிக்க வாய்ப்பு தாருங்கள்!
- ராதா சீனிவாசன், மதுரை.
