PUBLISHED ON : ஜூலை 18, 2020

என் வயது, 50; இந்தி ஆசிரியையாக பணி செய்கிறேன். சிறுவர்மலர் இதழின் தீவிர ரசிகை. எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும், குறும்புக்கார பள்ளி நாட்கள் மனதில் இருந்து மறைவதே இல்லை. அவற்றை நினைவுபடுத்தம் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அப்படிப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்து, பறை சாற்றும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, மனக்காயத்துக்கு மருந்திடுகிறது. அறிவுரை சொல்லும், 'இளஸ்... மனஸ்...' பகுதி நம்பிக்கையளிக்கிறது. சுவையை அள்ளித்தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' வித்தியாசத்தை விதைக்கிறது.
அபூர்வ செய்திகளை அள்ளித்தரும், அங்குராசு பகுதி வியப்பை தருகிறது. கண்ணுக்கு விருந்தளிக்கும், குட்டிகளின் கைத்திறன் ஓவியங்கள், அப்பப்பா... அபாரம்.
எத்தனை வயதானால் என்ன... எல்லாரையும், சிறுவராக்கும் ஒரே இதழ், நம்ம சிறுவர்மலர் தான். தலைமுறைகளை இணைக்கும் பாலமாக உள்ளது. இதை எண்ணும் போது மெய் சிலிர்க்கிறது!
- எஸ்.ராஜலட்சுமி, கோவை.
தொடர்புக்கு: 94452 11795
