
என் வயது, 49; கடலுார் மாவட்டம், வாழப்பட்டில், எடிபை என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறேன். என் தந்தை சண்முகம் கடலுாரில் மருத்துவர்; தினமலர் நாளிதழை மட்டும் தான் படிப்பார். தினமும் அதன் வருகைக்காக காத்திருப்பார்; என்னையும் படிக்க அறிவுறுத்துவார்.
சிறுவர்மலர் புத்தகத்தை, ௧௩ வயதில் கவனித்தேன்; படித்த போது, மனதிற்குள் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்று முதல் வரவுக்காக காத்திருந்து படிக்கும் அளவு, மனதில் பதிந்து விட்டது.
அதிமேதாவி அங்குராசு, சிறுகதைகள், கட்டுரை என அனைத்தையும் விடாமல் படித்து விடுகிறேன். தேவையானவற்றை பள்ளி தகவல் பலகையில் பதிவிடுகிறோம். சிறுவர்மலர் புத்தகத்தை மாணவர்கள் சுலபமாக படிக்கும் வகையில் நுாலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளோம்.
கடலுார் மாவட்ட அனைத்து பள்ளிகள் பங்கேற்ற, 'சயின்ஸ் எக்ஸ்போ' நிகழ்ச்சி, எங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, பள்ளி நுாலகத்தை பார்வையிட்டார். அங்கு அடுக்கியிருந்த சிறுவர்மலர் புத்தகங்களை கண்டதும், புன்னகையுடன் பாராட்டினார்.
சனிக்கிழமை தோறும் சிறுவர்மலர் புத்தகத்தை, என் மகன் சபரீஷ்ராம் முதல் ஆளாக ஓடிச் சென்று எடுத்துப் படிக்கும் போது, என் சிறுவயது நினைவு மனதில் மலர்கிறது.
- எஸ்.சீனிவாசன், கடலுார்.

