PUBLISHED ON : ஆக 27, 2022

என் வயது, 41; வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றேன். சிறு வயது முதல், சிறுவர்மலர் இதழ் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறேன். படக்கதை, தொடர்கதை, சிறுகதைகளை விரும்பிப் படித்து மகிழ்கிறேன். தோழியருக்கும் சிபாரிசு செய்கிறேன்.
இன்றும், இதழ் வந்தவுடன் ஆர்வமுடன் எடுத்து வாசித்து விடுவேன். என் கணவர், 'நீ என்ன குழந்தையா...' என கிண்டல் செய்வார். எதையும் பொருட்படுத்துவதில்லை.
மலரும் நினைவுகளாய் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, ஓவிய பிரம்மாக்களின் கை வண்ணத்தில், 'உங்கள் பக்கம்!' பகுதி, நளபாகமாக மலரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதிகள் சுவை குன்றாமல் உள்ளன.
அறிவுச்சுடராக மிளிர்கிறது, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி. நகைச்சுவை சித்திரமாக ஜொலிக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி.
சிந்தனை சுடராய், 'இளஸ்... மனஸ்' பகுதி விளங்குவதை காண்கிறேன். இப்படி, வண்ண மயமாக பூத்து குலுங்குவது மகிழ்ச்சி தருகிறது.
என் மகன், கணவர், மாமியார், மாமனார் என, குடும்பத்தினரின் அன்புக்கு பாத்திரமாக சிறுவர்மலர் இதழ் உள்ளது.
- வி.உமா ராமகிருஷ்ணன், சென்னை.
