PUBLISHED ON : டிச 31, 2022

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, ஆர்.சி.தொடக்கப் பள்ளியில், 1979ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் சூசைராஜ். புரியும் வகையில் பாடம் நடத்துவார். சந்தேகம் கேட்டால், எளிமையாக விளக்குவார். எழுத்துக்கள், முத்து முத்தாய் ஜொலிக்கும். அவரிடம் பயிற்சி பெற்ற பின்தான், சிறப்பாக எழுத கற்றுக் கொண்டேன்.
ஒரு நாள், 'கேள்வி ஒன்று கேட்கிறேன். சரியாக பதில் சொல்பவருக்கு தகுந்த பரிசு கொடுப்பேன்...' என கூறினார். ஆவலுடன், 'கேளுங்க சார்...' என உரத்த குரலில் கூறினோம்.
சிரித்தபடியே, '50 ரூபாய் பெரிதா... 100 ரூபாய் பெரிதா...' என்றார். சற்று தடுமாறியபடி யோசித்து கொண்டிருந்தோம். பின்னால் இருந்த நண்பன் ரவி, 'ஐயா... 50 ரூபாய் தான் பெரிது...' என்றான்.
ஆவலுடன் புருவத்தை உயர்த்தி, 'எப்படி என்று சொல் பார்க்கலாம்...' என்றார். நிதானமாக, 'ஜீரோவுக்கு முன் அஞ்சு வருதுல்ல ஐயா... அதனால, 50 ரூபா தான் பெரிது...' என விளக்கம் கொடுத்தான். அனைவரும் சிரித்தோம். அவன் புதுமை சிந்தனையை பாராட்டி, சரியான விடையுடன் விளக்கம் அளித்தார். தவறை உணர்த்தினார்.
எனக்கு, 52 வயதாகிறது; அரசு பணியாளராக உள்ளேன். பள்ளி வகுப்பறையில் நடந்த அந்த நிகழ்வு இன்றும் சிந்தனையை துாண்டுகிறது. அந்த ஆசிரியரை நினைவில் கொண்டுள்ளேன்.
- சி.கண்ணன், திண்டுக்கல்.
