PUBLISHED ON : ஜூலை 06, 2018

கடந்த, 1995ல், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! மாசி மாதத்தில், 'மயான கொள்ளை' திருவிழா எங்கள் பகுதியில் விமரிசையாக நடக்கும்.
மேளதாளம் முழங்க, காளி, அங்காளி அம்மன் வேடமிட்ட பக்தர்கள், ஆக்ரோஷமாக நடனமாடி, நேர்த்திக்கடன் செலுத்துவர்.
பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் எங்கள் பள்ளியிலிருந்து, 2 கி.மீ., சென்றால், திருவிழா நடக்கும் நகரப்பகுதி வந்து விடும்.
அன்று, மதிய உணவு இடைவேளையின் போது, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், என் உறவினர் மகன், திருவிழாவை காண செல்கிறான் என கேள்விப்பட்டு, நானும், என் நண்பனும் வகுப்பை, 'கட்' அடித்து, அவனுடன் சென்றோம்.
திருவிழாவை கண்டுகளித்து, இருட்டியதும், வீடு திரும்பினோம். பெற்றோர், 'புத்தகப் பை எங்கே...' என கேட்க, அமைதியாக இருந்து விட்டோம்.
மறுநாள், விடியற்காலையிலேயே, பள்ளிக்கு வந்து விட்டோம். பள்ளியை துாய்மை படுத்துபவர் முதல், அனைத்து ஆசிரியர்களும், 'புத்தகப் பை எங்கே...' என கேட்டு, நச்சரித்தனர். இறை வணக்கம் முடிந்தது; எங்கள் இருவரின் பெயரையும் சொல்லி, அழைத்தார் தலைமையாசிரியர்.
'புத்தகப் பை எங்கே...' என கேட்டார்.
காரணம் சொல்ல தயங்கி, தலை குனிந்தோம்.
'உங்களை, நேற்று திருவிழா நடந்த இடத்தில் பார்த்தேன். வகுப்பை, 'கட்' அடித்து விட்டு, திருவிழாவிற்கு சென்றுள்ளீர்கள். வீட்டிலிருந்து நேரடியாக பெற்றோருடன் மட்டுமே செல்ல வேண்டும்; பள்ளியில் இருந்து சென்றால், உங்களுக்கு ஏதாவது, அசம்பாவிதம் ஏற்பட்டால், பெற்றோர் உங்களை இழப்பர்; பள்ளி நிர்வாகத்திற்கும் கெட்டப் பெயர் வந்து விடும்...' என்று கூறி, ஐந்து நிமிடம் முட்டி போட வைத்து, எங்களுடைய புத்தகப் பையை கொடுத்தார்.
இப்போது, எனக்கு, 32 வயதாகிறது. 'மயான கொள்ளை' திருவிழா வரும் போதெல்லாம், எங்கள் பள்ளி தலைமையாசிரியரும் நினைவுக்கு வருவார். நாங்கள் அறியாமல் செய்த தவறை எண்ணி, இப்போதும் வருந்துகிறேன்.
- ஆர்.ராஜ்மோகன், திண்டிவனம்.
