தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எது அவசியம்!

எது அவசியம்!

எது அவசியம்!


PUBLISHED ON : ஜூலை 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லுப்பட்டி கிராமத்தில் ஒரு நுாலகம் அமைக்கப்பட்டிருந்தது.

அதை திறந்து வைக்க பிரபல எழுத்தாளரை அழைத்திருந்தனர் மக்கள்.

திறப்பு விழாவிற்கு வந்திருந்த அரசு அதிகாரி, எழுத்தாளரை சந்தித்து, ''ஐயா... எனக்கு ஒரு மகன் இருக்கிறான்; நன்றாக படிக்க வைக்க விரும்புகிறேன்; அவனோ, நண்பர்களோடு ஊர் சுற்றுகிறான்; ஒழுங்காக படிப்பதில்லை. அவனுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்...'' என கேட்டார்.

மகன் கண்ணனை அறிமுகப்படுத்தினார்.

அவன் கன்னத்தை வருடியபடி, ''கண்ணா... நான் யார்...'' என்று கேட்டார் எழுத்தாளர்.

''மிகவும் பிரபலமானவர் என தந்தை கூறியுள்ளார்...'' என்றான்.

புன்னகைத்தவாறு, ''இப்போது தான் அப்படி இருக்கிறேன். என் கடந்த கால வாழ்க்கை உனக்கு தெரியுமா... வா, அதை விபரமாக சொல்றேன்...'' என்றார்.

இதை கேட்டதும் ஆர்வமானான் கண்ணன்.

''செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்த எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்; கடினமாக படித்து வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பேன்; என் துரதிஷ்டம், 13 வயதில் பெற்றோர் விபத்தில் இறந்தனர். தொழில் சார்ந்து, தந்தை நிறைய கடன் வாங்கியதால் எல்லா சொத்தும் கையை விட்டு சென்றது...

''உறவினர்கள் பாரமாக கருதி விரட்டியதால் ஏதுமற்று நடுரோட்டில் நின்றேன்; என் நிலையை உணர்ந்த ஒருவர் டீக்கடையில் வேலைக்கு அமர்த்தினார்; கடைக்கு அருகில் பள்ளி ஒன்று இருந்தது... ஒவ்வொரு நாளும் அங்கு பாடம் நடத்துவதை கவனமாக கேட்பேன்...

''ஒரு நாள் பள்ளியில் ஆரவாரமும், கைதட்டும் ஓசையும் கேட்டது. ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தேன்; மாணவர்களுக்கு வினா - விடை போட்டி நிகழ்ந்தது; உள்ளே செல்ல முயன்றேன்; காவலாளி அனுமதிக்கவில்லை. கதவு ஓரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதாக கெஞ்சி அனுமதி பெற்றேன்...

''போட்டி மிக விறுவிறுப்பாக இருந்தது; நடுவரின் எல்லா கேள்விக்கும் எனக்கு விடை தெரிந்திருந்தது. மனதுக்குள் சொல்லி வந்தேன்; இறுதி சுற்றில் கடினமான கேள்வி எழுப்பப்பட்டது. யாருக்கும் விடை தெரியவில்லை. சிந்தித்து அந்த விடையை கண்டறிந்தேன்...

''ஆர்வத்தில் வெளியே நின்றபடியே விடையை சத்தமாக கூறினேன்; குழுமியிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர்; போட்டி முடிந்ததும், என்னை அழைத்து பேசினார் அந்த நடுவர். என் நிலையை எடுத்துரைத்தேன்; கையோடு அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்...

''இவ்வாறு படித்த எனக்கு இன்று மரியாதை கிடைக்கிறது. இதற்கு என் முயற்சியும், படிப்பும் தான் காரணம்... கல்வி மிகவும் அவசியமானது...''

அனுபவக் கதையை இயல்பாக கூறி முடித்தார் எழுத்தாளர்.

''ஐயா... மன்னியுங்கள். இனி, படிப்பில் தீவிரம் காட்டுவேன்...''

மனம் திருந்தி உற்சாகத்துடன் கூறினான் கண்ணன்.

செல்லங்களே... இளமையில் சோம்பி திரியாமல் கற்றால் வாழ்க்கை ஒளி வீசும்!

ரா.யோகமீனாள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us