
பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித்தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள். அதனால் கேள்வித்தாளைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகளில் ஒன்று கூட வரவில்லை. கேள்வித்தாளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் திகைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் மிகவும் கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவனும் கேள்வித்தாளைப் பார்த்து விழித்துக் கொண்டு தான் இருந்தான்.
கேள்விகள் இவ்வளவு கடினமாக இருக்கின்றனவே! எப்படிப் பதில் எழுதுவது? என்று எண்ணி அவன் விழிக்கவில்லை; இந்த எட்டுக் கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கிறார்கள்? எந்த நான்கிற்கு விடை எழுதுவது?' என்று தெரியாமல்தான் அவன் விழித்தான்.
சிறிதுநேரம் இப்படி யோசனை செய்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். விறுவிறு என்று விடை எழுத ஆரம்பித்தான். அந்த எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். விடைகளின் அடியிலே ஒரு குறிப்பையும் எழுதி வைத்தான்.
''ஐயா, பரீட்சை அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதி விட்டேன். ஏதேனும் நான்கு விடைகளுக்கு, மார்க் போட்டால் போதும்!'' என்று எழுதியிருந்தான்.
பரீட்சை அதிகாரி அவனது விடைகளைப் படித்துப் பார்த்தார், குறிப்பையும் படித்துப் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாக இருந்தது.
எந்த நான்கு விடைகளுக்கு மார்க் போடுவது? என்றே அவருக்கு புரியவில்லை! ஏன் தெரியுமா? அவன் எழுதியிருந்த எட்டு விடைகளுமே மணி மணியாக இருந்தன!
இவ்வளவு தூரம் கெட்டிக்காரனாக இருந்த அந்த மாணவன் பெரியவனானதும், ஒரு வக்கீலாக விளங்கினான். மாதம் ரூபாய் நாலாயிரம், ஐயாயிரம் சம்பாதித்தான். ஆனாலும், வருமானத்தைப் பெரிதாகக் கருதவில்லை. வக்கீல் தொழிலை உதறித் தள்ளி விட்டு, தேச விடுதலைக்காகப் பாடுபட்டான். காந்திஜியின் முக்கிய சீடனாக விளங்கினான். நம் பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியாகவும் விளங்கினான். அவர் யார் என்று இப்பவாவது கண்டுபிடிச்சிட்டீங்களா?
விடை: பாபு ராஜேந்திர பிரசாத்