PUBLISHED ON : ஜூலை 01, 2016

நாம் சாதாரணமாக தூங்கும்போது நம்முடைய மூளை முழுவதும் தூங்கி விடுகிறது. அதில் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. அப்போது நமக்கு கனவு உண்டாவதே இல்லை. ஆனால், சில சமயங்களில் நம்முடைய மூளையில் சில பாகங்கள் மட்டும் தூங்குகின்றன. மற்ற பாகங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பாகங்கள் நம்முடைய பழைய அனுபவங்களைக் கொண்டு கனவுகளை ஏற்படுத்துகின்றன.
நாம் கனவு கண்டாலும் சில சமயங்களில்தான் அது நம்முடைய ஞாபகத்துக்கு வருகிறது. நம்முடைய மூளையில் கனவுகளை உண்டாக்கும் பாகம் சிறியதாய் இருந்தால் கனவு மறந்து போகும். பெரியதாய் இருந்தால் ஞாபகத்துக்கு வரும்.
அப்படி நாம் தூங்கும்போது மூளையில் சில பாகங்கள் வேலை செய்யக் காரணம் அநேகமாக வயிற்றுக்கோளாறுதான். இரவு சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு தூங்கினால், நம்முடைய வயிற்றில் உணவு அநேகமாக செரிமானம் ஆகியிருக்கும். அதனால், அப்போது கனவுகள் ஏற்படாது. கனவு காணாமல் இருந்தால்தான் தூக்கம் ஆழ்ந்திருக்கும். நித்திரை ஆழ்ந்திருந்தால்தான் உடம்புக்கும் நல்லது; மனதுக்கும் நல்லது.
எனவே, இரவு நேரத்தில், மொபைல் போன், இன்டர் நெட், 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, நன்றாக தூங்குங்கள்; ஆரோக்கியமாக இருங்கள்!

