PUBLISHED ON : ஆக 16, 2019

தலைமுறைகளுக்கும் பயன் தரும் தாவரம், வேப்ப மரம். இது தெற்காசியாவை தாயகமாக கொண்டது; இதன் அறிவியல் பெயர், அஸாடிராக்டா இன்டிகா. மிலியேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. கடும் வெப்பத்தை தாங்கும்; வறட்சியிலும் வளமாக வளரும்.
இலையுதிர்ந்த உடனே, புது தளிர் புத்துணர்ச்சியுடன் வளரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில், நறுமணத்துடன் பூத்துக் குலுங்கும். காய், பச்சை நிறத்திலும், பழம், மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
இலை, இறகு வடிவமானது; பல சிற்றிலைகள், தொகுப்பாக ஒரு காம்பில் இணைந்திருக்கும். இதற்குள் வளரும் காம்புகளில், பூங்கொத்து, தொகுப்புகளாக அமையும்.
வெண்மை நிறமான, மிகச்சிறிய பூக்களை, தேனீக்கள் மொய்க்கும்.
வேப்பம் பூவில் வடகம், பச்சடி, ரசம் செய்யலாம்; மிக சுவையாக இருக்கும்.
வேப்ப இலை, தீமை செய்யும் கிருமிகளை தடுக்கும். வேப்பெண்ணெய், பயிர்களை பாதுகாக்கும்; பயிர் பாதுகாப்பு ரசாயனங்களில், ஒட்டு பொருளாக பயன்படும்.
* வயிற்றில் கிருமியால் அவதிப்படுவோர், வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிடலாம்
* வேப்பம் பூவை உலர்த்தி, பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து, உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், தோல் வியாதிகள் நீங்கும். பொடியை, தணலில் போட்டு, வீடு முழுக்க புகை பரவ விட்டால், விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைப்பூச்சி தொல்லை ஒழியும்
* வேப்ப இலைகளை நீரில் போட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின் குளித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.
வேப்பிலை படுக்கை, புத்துணர்ச்சி தரும். ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமாக வாழலாம். வருங்கால தலைமுறைக்கும் பயன்தரும்.
- வளர்
