PUBLISHED ON : மே 11, 2018

திருச்சி, உப்புலியபுரம் கிராமத்து பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தேன்.
அன்று, தலைமையாசிரியர் ஓய்வு பெறும் விழா; அதில் பேசிய தலைமை ஆசிரியர் ஒரு கதை சொன்னார்...
ஒரு மாணவனை அழைத்து, ஒரு காகிதத்தை காண்பித்து, 'என்ன தெரியுது...' என்றார்.
'காகிதம் தெரியுது ஐயா...' என்றான்.
அந்த காகிதத்தில், ஒரு புள்ளி வைத்து, 'இப்போ என்ன தெரியுது...'
'புள்ளி தெரியுது ஐயா...' என்றான்.
'இதுபோல் தான் வாழ்க்கையும்... நாம் எவ்வளவு நன்மை செய்தாலும், அதாவது, காகிதம் போல இருந்தாலும், அதில், புள்ளி என்ற ஒரு தவறை செஞ்சிட்டா, அந்த தவறை தான், இந்த உலகம் சொல்லுமே தவிர, நாம் செய்த நன்மையை ஒரு போதும் சொல்லாது...' என்றார்.
தற்போது, என் வயது 54; அன்று, அவர் கூறியதன் அர்த்தம், இன்று புரிகிறது; தற்போது, தலைமையாசிரியர் உயிரோடு இல்லை என்றாலும், அவர் கூறிய பொன் வரிகளை மறக்க முடியவில்லை.
- வீ.லட்சுமி, திருச்சி.
