தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/நினைவலைகள்

நினைவலைகள்

நினைவலைகள்


PUBLISHED ON : ஆக 21, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீண்டும் மன்மோகன்!



நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப். 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடந்தது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மன்மோகன் சிங்கையே மீண்டும் முன்னிறுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா. பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது தவிர மார்க்சிஸ்ட், இ.கம்யூ., அ.தி.மு.க., கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியும் களமிறங்கியது. 15வது லோக்சபாவை தேர்வு செய்ய நடந்த இந்த தேர்தலில் 59.7 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தல் முடிவு மே 16ல் வெளியானது. இதில் காங்கிரஸ் கூட்டணி 262 இடங்களை கைப்பற்றியது. இது கடந்த 2004ல் இந்த கூட்டணிக்கு கிடைத்த இடங்களை விட 44 அதிகம். சமாஜ்வாடி, பகுஜன், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. பார்லி.,யில் காங்கிரஸ் ஆதரவு எம்.பி.,க்களின் பலம் 322ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு 159 இடங்கள் மட்டுமே கிடைத்தன. வருண் சர்ச்சை, தலைவர்களிடம் இணக்கமின்மை போன்றவை பா.ஜ.,வின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இடது சாரிகளின் கூட்டணிக்கு 59 இடங்களே கிடைத்தன. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கூட இடதுசாரி கட்சிகளால் சாதிக்க முடியவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிய மூன்றாவது அணி முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு 28 இடங்களும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைத்தன. ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வுக்கும் ஒரு இடமும் கிடைக்கவில்லை. தேர்தல் வெற்றியை தொடர்ந்து மே 22ம் தேதி மன்மோகன் சிங், டில்லி ராஷ்டிரபதி பவனில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமர் பதவியில் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின் மீண்டும் பிரதமரான பெருமை நேருவுக்கு பின் மன்மோகன் சிங்குக்கு கிடைத்தது.





அமெரிக்காவுக்கு புது அதிபர்





அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் அமெரிக்காவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா, தன்னை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கைனை வீழ்த்தி அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தேர்வானார். அமெரிக்காவின் 44வது அதிபராக ஜன. 21ல் பராக் ஒபாமா பதவியேற்றார். முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவியும், ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளர் பதவிக்கு ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சரானார். பதவியேற் புக்கு பின், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்புகள் பற்றி குறிப்பிட்ட ஒபாமா, 'இன்று அமெரிக்கா சந்திக்கும் பிரச்னைகளை எளிதாகவோ, விரைவாகவோ தீர்க்க முடியாது; எனினும் இவற்றுக்கு தீர்வு காணப்படும்', என உறுதியளித்தார். இதற்கு முன் வழக்கறிஞர், செனட்டர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஒபாமா. மிகச்சிறந்த பேச்சாளரும் கூட. இவருக்கு மிஷல் என்ற மனைவியும், மலியா, நடாஷா என இருமகள்களும் உள்ளனர். ஒபாமாவின் தந்தை கென்ய நாட்டை சேர்ந்த கருப்பினத்தவர். அவரது தாய் அமெரிக்காவை சேர்ந்த வெள்ளையினத்தவர். தந்தை கருப்பினத்தவர் என்பதால் ஒபாமாவும் கருப்பினத்தவராகவே கருதப்படுகிறார். சர்வதேச நட்புறவை மேம்படுத்த ஒபாமா எடுத்த முயற்சிகளுக்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு டிச.10ல், வழங்கப்பட்டது.



'நக்சலைட் மாவோயிஸ்ட்' பயங்கரம்





மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள லால்கார்க் பகுதியில் கடந்த ஜூன் மாதம் பழங்குடியினர் வசிக்கும் 50 கிராமங்களை நக்சலைட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இது, இந்தியாவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை வெளியுலகுக்கு காட்டியது. நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் தங்களது பகுதிக்குள் நுழைய முடியாதவாறு பெண்கள் , சிறுவர்கள் ஆகியோரை நிறுத்தியும், மரங்களை வெட்டிப் போட்டும் தடுப்பு அரண்களை அமைத்தார்கள். கண்ணி வெடிகளையும் பதுக்கி வைத்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் 8 பேரையும் சுட்டுக் கொன்றனர். லால்கார்க்கை மீட்க மாநில போலீசார், மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படை, 'கோப்ரா' எனப்படும் நக்சல் ஒழிப்பு படையினர் அடங்கிய குழு லால்கார்க் பகுதிக்குள் நுழைந்து நக்சலைட்களுடன் ஒரு வார காலம் சண்டையிட்டு அப்பகுதியை மீட்டனர். என்றாலும், அங் கொன்றும் இங்கொன்றுமாக நக்சலைட்டுகள் தாக்குதல் தொடர்ந்தது. இதையடுத்து, ஜூன் 22ம் தேதி மாவோயிஸ்ட் இயக் கத்தை மத்திய அரசு தடைசெய்தது. மேலும் மாநில அரசுகள் மாவோயிஸ்ட்டுகள் மீதான தடையை தனி தனியாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஆந்திரா , ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 34 பயங்கரவாத அமைப்புகளுடன் மாவோயிஸ்ட்டும் இணைந்துள்ளது. 2009ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில் இந்த அமைப்பினர் பரவி உள்ளனர். இந்திய நிலப்பரப்பில் 40 சதவீதம் (92,000 சதுர கி.மீ) இவர்களது ஆதிக்கத்தில் இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பலியாகி உள்ளனர். ரயில் பாதை, ரயில்வே ஸ்டேஷன் தகர்ப்பு, ரயிலுக்கு குண்டு வைத்தல், ரயில் டிரைவரை கடத்துதல் என பெரும்பாலும் அவர்கள் ரயில்வே துறை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன்கள் ஆகியவற்றையும் அவர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்கு கடந்த நவ.11ம் தேதி 50 ஆயிரம் வீரர்களைக் கொண்ட 'ஆப்ரேஷன் கிரீன் ஹண்ட்' என்ற பாதுகாப்பு படையை மத்திய அரசு துவங்கி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.





உலகை கவர்ந்த இசை!





'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஹாலிவுட் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். உலக சினிமா கலைஞர்களின் கனவாக திகழும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் வழங்கப்படுகின்றன. 2008ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிப். 22ல் நடந்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில், இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான 'ஸ்லம்டாக் மில்லினர்' படம் எட்டு விருதுகளை வாரி குவித்தது. இதில் சிறந்த பாடல், சிறந்த இசை ஆகிய இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த படத்தில் இடம் பெற்ற 'ஜெய் ஹோ' சிறந்த பாடலாக தேர்வானதால் அதற்கான விருதை இந்தி பாடலாசிரியர் குல்சார் உடன் ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். இதுவரை எந்த இந்தியரும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றதில்லை. ஆஸ்கர் விருதை பெற மேடை ஏறிய ரஹ்மான் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் கூறினார். இந்த படத்தில் இடம்பெற்ற 'ஜெய்ஹோ' மற்றும் 'ஓ சாயா' பாடல்களை மேடையில் தோன்றி பாடிய ரஹ்மான் அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார். 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக கோல்டன் குளோப், பாப்டா உள்ளிட்ட சினிமா உலகில் கவுரவமிக்கதாக கருதப்படும் பல விருதுகளை ரஹ்மான் வென்றார். 'டைம்' பத்திரிகை 2009ம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க 59வது நபராக ரஹ்மானை தேர்வு செய்தது. இதே படத்தில் பணியாற்றிய கேரளாவின் ரெசுல் பூக்குட்டி சவுண்ட் மிக்சிங்பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த படத்தின் இயக்குனரான பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்லுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட குறும்படமான 'ஸ்மைல் பிங்கி' படமும் ஆஸ்கர் விருது வென்றது. இதற்கு முன்னர் 'காந்தி' படத்தில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அத்தையா, பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித் ரே ஆகிய இரண்டு இந்தியர்கள் மட்டுமே ஆஸ்கர் வென்றுள்ளனர்.





நோபல் சாதனையாளர்





தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். உலகின் மிக உயரிய பரிசாக நோபல் கருதப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அக். 7ல் வேதியியலுக்கான நோபல் பரிசை அறிவித்தனர். இதில் தமிழகத்தில் பிறந்த அமெரிக்க விஞ் ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவருக்கு நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன், வதோதரா நகரில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பபையும் நிறைவு செய்தார். பின்னர் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்று, பிரிட்டனில்கேம்பிரிட்ஜில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். செல்களின் அமைப்பு மற்றும் ரிபோசோம்கள் குறித்த ஆய்வுக்காக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. ரிபோசோம்களில் உள்ள கோடிக்கணக்கான அணுக்கள் குறித்த ஆராய்ச்சியை ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அணுக்களின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கி, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செயல்படும் விதம் பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் விளைவாக கேன்சருக்கும் புதிய மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தனது அறிவியல் ஆர்வம் பற்றி குறிப்பிடும் வெங்கட்ராமன், 'பள்ளிப்பருவத்தில் இருந்தே எனக்கு அறிவியல் ஆர்வம் உண்டு. அதனால் இயற்பியல், வேதியியல் துறைகளில் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டேன்' என்கிறார். வெங்கட்ராமனுடன் இதே ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் தாமஸ் ஸ்டெயிட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா யோநாத் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். இவர்களுக்கு டிச. 10ல் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் நோபல் வழங்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகளுக்கு அரிதாகவே கிடைக்கும் நோபலை வெங்கட்ராமன் வென்றது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்தது.





'பாப்' உலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்சன்





பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு. இவர் 1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தார் .1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயதில் அவர் தந்தை தன்னை தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, சுவரில் மோத செய்வது உள்ளிட்ட சித்ரவதைகளை தெரிவித்திருந்தார். 11 வயதிலேயே அவரது சகோதரர்களுடன் இணைந்து 'தி ஜாக்சன் 5' இசை நிகழ்ச்சி நடத்தினார். 'ஐ வான்ட் யூ பேக்' எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது. 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் 'காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் 'ஆப் தி வால்' எனும் 'டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் 'திரில்லர்' ஆல்பம், 1987ல் 'பேட்' , 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன. 1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது,ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார். 20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கிய இவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2005ல், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜரி , போதை ஆகியன அவரது வீழ்ச்சிக்கு காரணங்கள் ஆகும். அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25ல், மாரடைப்பால் இறந்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us