பொது தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 78, அமெரிக்காவின் 46வது அதிபராக 2021 ஜன., 20ல் பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் மிக வயதான அதிபர் இவரே. துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் பதவியேற்கிறார். இவரே அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். புதிய அரசு இந்தியாவுடன் நல்லுறவை கடைபிடிக்கும்.
தேர்தல் முடிவு
மொத்த இடங்கள் - 538
பெரும்பான்மைக்கு தேவை - 270
ஜோ பைடன் - 306
டிரம்ப் - 232
'ஹெச் 1 பி' விசா
அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த 'ஹெச் 1 பி' விசாவை தற்காலிகமாக டிரம்ப் நிறுத்தினார். புதிய அதிபராக தேர்வான ஜோ பைடன் 'ஹெச் 1 பி' விசாக்களுக்கு நாடு வாரியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பு விலக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த குடியேற்றக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்.
பருவநிலை ஒப்பந்தம்
ஒபாமா அரசு, 2016ல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைந்தது. டிரம்ப் அரசு கருத்து வேறுபாடால் விலகியது. விரைவில் அமையவுள்ள ஜோ பைடன் அரசு, மீண்டும் ஒப்பந்தத்தில் இணைய உள்ளது. பருவநிலை மாற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு பைடன், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
சீனாவுடன் எப்படி
டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது. குறிப்பாக கொரோனா, வர்த்தகம், மனித உரிமைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதே நிலைப்பாட்டை புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள பைடனும் தொடர்வார்.
யார் இந்த பைடன்
1942 நவ., 20ல் பென்சில்வேனியா மாகாணத்தில் ஸ்கிரான்டன் நகரில் பிறந்தார்.
1962 : 20 வயதில் பேசுவதில் குறைபாடு (திக்கி பேசுதல்) இருந்தது. கண்ணாடி முன் நின்று பேசி பழகி சரி செய்தார்.
1965 : வரலாறு, அரசியல் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார்.
1968 : சட்டப்படிப்பு முடித்தார். அரசு சட்ட நிறுவனமான நியூ கேஸ்டில் கவுன்டி கவுன்சிலில் உறுப்பினரானார்.
1972: விபத்தில் மனைவி, மகள் பலியாகினர். 2 மகன்கள் காயமடைந்தனர்.
1973 - 2009: ஜனநாயக கட்சி சார்பில் டெலவேர் மாகாணத்தில் இருந்து ஏழுமுறை அமெரிக்க செனட் சபைக்கு தேர்வானர். இளம் வயதில் செனட் சபைக்கு தேர்வான ஆறாவது உறுப்பினரானார்.
செனட் உறுப்பினராக இருந்த போது, டெலவேரில் இருந்து வாஷிங்டனுக்கு (144 கி.மீ.,) ரயிலில் வந்து சென்றார்.
1975 : ஜில் டிராசி ஜாகோப்சை இரண்டாவது திருமணம் செய்தார்.
1988 பிப்., : கழுத்து வலிக்காக மூளையில் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.
2009 - 2017 : ஒபாமா அதிபராக இருந்த போது, துணை அதிபராக இருந்தார்.
2013 : துணை அதிபராக இருந்த இவர், மும்பை ஐ.ஐ.டி.,க்கு வருகை தந்தார்.
2020 : அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வானார்.
முதல் பெண் துணை அதிபர்
அமெரிக்க இந்தியரான கமலா ஹாரீஸ் 55, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வானார்.
1964 அக்., 20: கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் பிறந்தார். தாய் ஷியாமளா கோபாலன் மார்பக புற்றுநோய் விஞ்ஞானி. சென்னையை சேர்ந்தவர். தந்தை டொனால்டு ஹாரீஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
அமெரிக்காவின் பெர்க்லி பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்காக வந்த ஷியாமளாவும், ஹாரீசும் காதலித்து திருமணம் செய்தனர். ஹாரிஸ், ஸ்டான்போர்டு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியவர்.
1971 : பெற்றோர் விவாகரத்து பெற்றனர். தாய் மற்றும் சகோதரியுடன் கனடாவின் மான்ட்ரீல் நகருக்கு சென்றார்.
1986ல் ஹார்வர்டு பல்கலையில் பி.ஏ., அரசியல் அறிவியல், பொருளாதாரம் முடித்தார்.
1990ல் சட்டப்படிப்பு முடித்தார். இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றார்.
2003ல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக தேர்வு.
2011ல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக தேர்வு பெற்றார். இவர் அப்பதவிக்கு தேர்வான முதல் பெண்.
2014ல் வழக்கறிஞரான டக்ளல் எமோபை திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லை. தன் கணவரின் முந்தைய திருமணத்தில் பிறந்த எல்லா, கோலோயை வளர்க்கிறார்.
2017ல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்ற முதல் தெற்காசிய பெண் ஆனார்.
இனவெறிக்கு எதிரான வழக்குகளில் கமலா ஹாரீஸ் ஆஜராகியுள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தத்தை வலியுறுத்தினார்.
2021 ஜன., 20: துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.