PUBLISHED ON : டிச 31, 2020
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் செப்., 19ல் பார்லிமென்ட்டில் நிறைவேறின. இதன் முக்கிய அம்சங்கள்
1) விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் & வர்த்தகம்
* சாகுபடி செய்யும் இடத்திலேயே விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
* விவசாயிகள் விரும்பும் இடத்தில், விளைபொருட்களை விற்பனை செய்யலாம்.
* உழவர் சந்தைகள், நுகர்வோர் சந்தைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், அவை தொடர்ந்து இயங்குவதற்கு, எந்த தடையும் இருக்காது
* வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நிரந்தர கணக்கு எண் அவசியம் என்பதால் அவர்களின் அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.
2) அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம்
* விவசாய பொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு வசதிகள் அதிகரிக்கப்படும்.
* போர், பஞ்சம், இயற்கை பேரிடர் காலங்களில் தானியங்கள், பருப்பு வகைகள், உருளை, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை தடுக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
3) விலை உறுதியளிப்பு & பண்ணை ஒப்பந்த அவசர சட்டம்
* விவசாயிகளும், கொள்முதல் செய்பவரும், வேளாண் வணிகப் பிரிவு துணை இயக்குனர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். சாகுபடிக்கு முன்பே பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அறுவடை நேரத்தில் சந்தை விலை குறைந்தாலும் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.
* சிறு, குறு விவசாயிகள் ஒன்றிணைந்து ஒப்பந்த பண்ணை விவசாயம் செய்யும்போது, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தியை பெற முடியும்
* உணவு பதப்படுத்தும் தொழில் முன்னேற்றம் அடைவதால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் பெருகும்
* கொள்முதல் செய்பவர் விவசாயிகளின் நிலத்தில் உரிமை கொண்டாட முடியாது.
அமைச்சர் ராஜினாமா
செப்., 18: மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.
பாரத் பந்த்
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் டிச., 9ல் 'பாரத் பந்த்' நடந்தது.
டில்லி முற்றுகை
விவசாய பொருட்களுக்கு அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது என சிலர் அஞ்சினர். இதனால், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நவ., 26ல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி போராட்டத்தை தொடங்கினர். அண்டை மாநில விவசாயிகளும் இணைந்தனர். டில்லி - உ.பி., மாநில எல்லையில் போராடினர்.
பேச்சுவார்த்தை
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஆறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. சில திருத்தங்களை மேற்கொள்ள சம்மதித்தது.