PUBLISHED ON : பிப் 25, 2018

சிங்கக் கூட்டங்களுக்கு எதிரே சற்று துாரத்தில் மான்கள் உலவிக் கொண்டிருந்தன. இரவு சாப்பாட்டிற்கு அவற்றில் ஒன்றிரண்டை சாப்பிட, சிங்கங்கள் தயாராகி கொண்டிருந்ததால், எங்களைப் பற்றி அவை கவலைப்படவில்லை.
எனினும், வாகனங்களின் சத்தம், போட்டோ, 'கிளிக்' ஓசை போன்றவற்றால், ஆண் சிங்கம் அவ்வப்போது தலையை திருப்பி, எங்களைப் பார்த்த போது, உயிர் கையில் இல்லை.
சிங்கத்தை நேரில் பார்த்த திருப்தியில், திறந்த ஜீப்பில், அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒற்றையடி தடத்தை தாண்டி, சாலையில் ஜீப்பை ஏற்றிய டிரைவர் கிரெய்க், மரக்கிளைகள் உடைந்தால் வரும் பச்சை மணத்தை முகர்ந்த படி, 'யானை கூட்டம் இங்கே இருக்கிறது...' என்றார்.
'யானை கூட்டமா... பார்த்து வேகமாக போப்பா...' என, எங்களுடன் வந்தவர்கள் கூறினர். அவரும் சுற்றிலும் பார்த்தபடி, சாலையில் வாகனத்தை கவனமாக ஓட்டிச் சென்றார்.
சிறிது துாரம் தான் போயிருப்போம்... உடைந்த ஒரு தந்தத்துடன் பெரிய ஆப்ரிக்க ஆண் யானை ஒன்று, கோபத்துடன் சாலை நடுவே நின்றிருந்தது. அது நின்றிருந்த இடத்திலிருந்து, 20 அடி துாரத்தில் ஜீப்பை நிறுத்திய கிரெய்க், 'இது மிகவும் சிக்கலான நேரம்; யாரும் சத்தம் போடாதீர்கள். இந்த யானை மிகவும் மோசமானது என்பது அதன் உடைந்த தந்தம் தெரிவிக்கிறது. படம் எடுக்கும் போது, 'பிளாஷ்' வேண்டாம்; கவனமாக இருங்கள்...' என்றார்.
'என்ன தான் நடக்கிறது பார்ப்போம்...' என, நானும், கையிலிருந்த மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண் யானைக்கு சற்று தள்ளி, பெண் யானை ஒன்று நிற்பது தெரிந்தது. பெண் யானையை நெருங்கிய ஆண் யானை, அதை சாலைக்கு தள்ளி வந்தது.
ஒற்றை தந்தத்துடன் இருந்த ஆண் யானை மற்றும் பெண் யானை சாலையில் நின்றிருந்தன. ஜீப்பின் ஹெட் லைட் வெளிச்சம் தொந்தரவாக இருந்ததால், ஆண் யானை பிளிறியது. சாலையை விட்டு அகலாமல், இரண்டு யானைகளும் நின்றிருந்தன.
எங்களை போல மேலும் சில ஜீப்புகளும், அந்த குறுகிய சாலையில் வந்து நின்றன. நேரே செல்ல ஒரு வழி தான். திரும்பிச் சென்றால், அறைக்கு செல்ல, நான்கைந்து மணி நேரம் கூடுதலாகும். அதனால், யானை நகர்ந்ததும் சென்று விடலாம் என, வாகனங்களிலேயே காத்திருந்தோம்.
அப்போது திடீரென புதர்களில் இருந்து மேலும், ஐந்து யானைகள் சாலைக்கு வந்து வாகனங்களை நோட்டமிட்டன. 'இன்னிக்கு ரொம்ப கஷ்டமான நாளாகத் தான் இருக்கும் போலும்; நான், 'ஓடுங்க' என கூறியதும், ஜீப்பிலிருந்து குதித்து ஓடிடுங்க...' என்றார், கிரெய்க்.
'எங்கே ஓட... யாருக்கு இடம் தெரியும்... இன்னிக்கு யானை காலில் மிதி படத்தான் போகிறோம் அல்லது காட்டுக்குள் ஓடி சிங்கத்திற்கு இரையாக போகிறோம்...' என, அவரவர் கற்பனைக்கு ஏற்ப, பீதியில் ஆழ்ந்திருந்தனர்.
-அரை மணி நேரம் கடந்தும், யானைகள் சாலையை விட்டு அகலுவதாக இல்லை. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த சபாரி டிரைவர்கள், தங்கள் வாகனங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்த்தி, யானைக்கு ஒன்றிரண்டு அடி நெருங்கி விட்டனர்.
ஒரு கட்டத்தில், முன்னே நின்றிருந்த யானை, எங்கள் ஜீப்பை நோக்கி தும்பிக்கையை தலைக்கு மேல் துாக்கி, பிளிறிய படி வந்தது. முன்னே நின்றிருந்த ஜீப் டிரைவர், 'ஏய்...' என, சத்தமிட்டு, ஜீப்பின் பக்கவாட்டில் தட்டி, யானையை விரட்டினார்.
எங்களை நோக்கி வந்த யானை, சத்தம் வந்த திசையை நோக்கி திரும்ப, மீண்டும், அதே போல அந்த டிரைவர் சத்தமிட, உற்று நோக்கிய யானை லேசாக நகர்ந்து, சாலையை விட்டு அகன்றது.
அதை பின் தொடர்ந்து மற்ற யானைகளும் நகர, சாலையில் வாகனங்கள் அணிவகுத்தன. அப்போது மீண்டும் அந்த யானைகள், பெண் யானையை தள்ளிய படி சாலை நடுவே வர, இன்று இரவு, இந்த காடு தான் என்பது எனக்கு உறுதியானது.
காட்டின் உள் பகுதியில் குளிர் காற்று வீசும் போது, தார் சாலை, வெப்பத்த வெளிப்படுத்துவதால், அங்கு வந்து நின்று கொள்ள யானைகள் விரும்புகின்றன என்பது பிறகுதான் தெரிந்தது.
ஒருவழியாக, ஒரு மணி நேரம் சென்றதும், புதர்களுக்குள் யானைகள் மறைந்தன. அடுத்த சில வினாடிகளில், ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வாகனங்களும் அந்த இடத்தை விட்டு வேகமாக மறைந்தன.
யானையிடம் இருந்து தப்பி வரும்போது, கிரெய்க்கிடம், 'இது போல எத்தனை முறை யானையிடம் சிக்கியுள்ளீர்?' எனக் கேட்டேன்.
அதற்கு, 'வாரத்தில் மூன்று, நான்கு முறை சிக்கிக் கொள்வோம்; அப்போது இப்படித்தான் பொறுமையாக காத்திருந்து, தப்பிப்போம். சில நேரங்களில் யானைகள் கோபம் கொண்டு, வாகனங்களை பந்தாடியுள்ளன. அப்போதெல்லாம் நாங்கள் வண்டியிலிருந்து குதித்து, நடந்தே ஓட்டலுக்கு திரும்புவோம்...' என்றார்.
இந்தியாவிலிருந்து வந்து, யானையிடம் சிக்கிக் கொள்ள இருந்ததை இப்போது நினைத்தாலும் உடல் துாக்கி வாரிப் போடுகிறது.
தென் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதி மக்கள், சுற்றுலா மற்றும் வன விலங்குகளை நம்பியே உள்ளதால், வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றை தொந்தரவு செய்யாமலும் உள்ளனர்.
— தொடரும்.
தீக்கோழி, 'சபாரி!'
தீக்கோழியை அடிப்படையாக வைத்து, 'ஆஸ்ட்ரிச் சபாரி' என்ற பெயரில், அவுட்ஷோர்ன் என்ற இடத்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, சில ஏக்கர் பரப்பில், தீக்கோழி பண்ணை உள்ளது. சிறியதும், பெரியதுமாக, அதிகபட்சம், 200 தீக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
கீழே போட்டாலும் உடையாத தடிமனான ஓடு கொண்ட தீக்கோழி முட்டையிலிருந்து குஞ்சுகளை, செயற்கை முறையில் பொரித்து, இங்கேயே வளர்க்கின்றனர்.
அதன் இறைச்சி, தோல், இறகு, எலும்பு என, அனைத்து பொருட்களையும் விற்கின்றனர். மாட்டுத் தோலை விட தடிமனாக இருக்கும் தீக்கோழி தோலில் செய்யப்பட்ட பர்ஸ், பேக், கூடைகளுக்கு விலை அதிகம்.
அதுபோல, தீக்கோழியின் இறைச்சியும், விலை அதிகம். 1 கிலோ, 4,000 - 5,000 ரூபாய்; அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒயின் நிரம்பிய கிளாசுடன், தீக்கோழி இறைச்சி சாப்பாட்டை ருசிக்கும் வெளிநாட்டினர், விலையைப் பற்றி கவலைப்படாமல், வெட்டுகின்றனர்.
தீக்கோழி சபாரிக்கு, மர இருக்கைகளுடனான டிராக்டரில் அழைத்து செல்கின்றனர். தீக்கோழியை வாகனம் பக்கம் வரவழைப்பதற்காக, மக்காச்சோளத்தை, வீசி எறிகிறார், டிரைவர்.
அவற்றை பொறுக்க, வாகனம் அருகே வரும் தீக்கோழிகள், சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் கையில் உள்ளவற்றையும் அலகுகளால் கொத்தி எடுக்கின்றன. அதன் அலகுகள், பல் இல்லாத பாட்டியின் வாய் போல உள்ளது.
தீக்கோழியின் கால் தான் மிகவும் ஆபத்தானது. வேகமாக ஓடி வந்து, காலால் எதிரிகளை தாக்கும் போது, எவ்வளவு பலசாலியான மனிதரின் உடலும் இரண்டாக பிளந்து, மரணம் ஏற்பட்டு விடுமாம்!
வார இறுதி நாட்களை இன்பமாக பொழுது போக்குவதை, வாடிக்கையாக கொண்டுள்ள தென் ஆப்ரிக்கர்கள், இதுபோன்ற இடங்களுக்கு சென்று, மதுவருந்தி, ஆரோக்கியமான தீக்கோழி இறைச்சியை சாப்பிட்டு, சந்தோஷமாக இருப்பராம்!
ஏ.மீனாட்சிசுந்தரம்
