
பெரிய சிவன் கோவில்களில், 51 லிங்கம், 108 லிங்கம் என இருப்பது, வாடிக்கை தான். ஆனால், இவை, பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். பிரகாரத்தை வலம் வரலாமே தவிர, லிங்கங்களை தனித்து வலம் வர முடியாது. ஆனால், ஆகம விதிப்படி, 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, அவற்றை வலம் வரும் வகையில் அமைத்துள்ள அதிசயத்தை, கும்பகோணம் அருகிலுள்ள, பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலில் காணலாம்.
சிவராத்திரி (பிப்., 21) அன்று, இந்த கோவிலை, பக்தர்கள், 108 முறை வலம் வருவர். இதை, '108 சிவாலயம்' என, அழைக்கின்றனர்.
ராவணனை கொன்ற பாவம் தீர, ராமேஸ்வரத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார், ராமபிரான். இருப்பினும் கரன், துாஷணன் என்ற அசுரர்களை கொன்ற பாவம் மட்டும், தன்னை தொடர்வதாக உணர்ந்தார். இதற்காக, கும்பகோணம் அருகிலுள்ள, திருப்பாலைத்துறை எனும் பாபநாசத்தில், 107 லிங்கங்களை வடித்தார்.
அவற்றில், 106 லிங்கங்களை வரிசையாகவும், ஒரு லிங்கத்தை, தேர்ந்தெடுத்த இடத்திலும் வைத்தார். அனுமனை கைலாயத்துக்கு அனுப்பி, அங்கிருந்தும் ஒரு லிங்கத்தைக் எடுத்து வரச் செய்து, மற்றொரு இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.
இந்த லிங்கங்களை வலம் வந்து, பூஜித்து, பாவம் நீங்கப் பெற்றார். ராமனின் பாவம், நாசம் ஆனதால், இவ்வூர், 'பாபநாசம்' என, பெயர் பெற்றது.
ராமாயணத்துடன் தொடர்புள்ள இந்த கோவிலில், ராமனுக்கு உதவிய, சுக்ரீவன் மற்றும் அனுமனுக்கு சன்னிதி உள்ளது. 106 லிங்கங்களை, மூன்று வரிசையாக, இடைவெளி விட்டு பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே, இவற்றை வலம் வந்து வழிபட வசதியாக உள்ளது.
மூலவர், ராமலிங்கம் மற்றும் கோவிலுக்கு வெளியில், அனுமலிங்கம் என, 108 லிங்கங்கள் உள்ளன. 108 லிங்கங்களையுமே, மூலவராக கருதி, பூஜை செய்கின்றனர்.
சிவராத்திரியன்று, 108 லிங்கங்களுக்கும், ருத்ர மந்திரம் சொல்லி, பூஜை செய்வர். இந்த நேரத்தில் பக்தர்கள், 108 முறை கோவிலை வலம் வருவர்.
அம்பாள் பர்வதவர்த்தினிக்கு, தனி சன்னிதி இருக்கிறது. இது, மேற்கு நோக்கிய சிவன் கோவில் என்பது, மற்றொரு விசேஷம். மேற்கு நோக்கிய கோவில்களில், சுவாமிக்கு சக்தி அதிகம் என்பர்.
மூலவரான சிவனை நோக்கி, நந்தியை பிரதிஷ்டை செய்வது வழக்கம். இங்கே, நந்தியுடன், காமதேனு பசுவும் இருக்கிறது. பிரதோஷ நாட்களில், இருவருக்கும் பூஜை செய்யும் வழக்கம் உள்ளது, மற்றொரு விசேஷம்.
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ., துாரம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் பாபநாசம் உள்ளது.
தி. செல்லப்பா