தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/121212

121212

121212


PUBLISHED ON : டிச 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்மனசு!



ஆணுக்கல்ல,

பெண்ணுக்குமே

புரியாது;

புலப்படாதது!

முற்றிலுமறிய

ஞானி,

விஞ்ஞானியாலும்

ஆகாது!

இந்திரனாயினும்,

எந்திரனாயினும்,

பெண்ணிடம்

தோற்பவன் தான்!

ஆக,

பெண் மனமோர்

விசித்திரம்;

புரிய

முயல்வதோர்

விரயம்!

— ச.பிரசன்னா.

இருள்!







*பூக்கள் விற்ற கிராமம்

புழுதி விற்கிறது...

அகல் விளக்கில்

ஒளிர்ந்த கிராமம்

மின்சார விளக்கில்

இருள்கிறது!

— வைரமுத்து.

நெருப்பு!







*பெண்ணே...

நீ ஒரு பிரபஞ்சம்...

நெருப்பு உனது காதல்...

குளிர்காய,

சமைக்க,

*விளக்கேற்ற,

உன்னிலிருந்து தான்

எடுத்துக் கொள்கிறோம்

நெருப்பை!

— பழநி பாரதி.

பாதி வெந்த சோறு!







* சுதந்திரச்

சோறு

இன்னும் கொஞ்சம்

இருந்திருக்கலாம் உலையில்;

பரிமாறப்பட்டுவிட்டது

பாதி வெந்த நிலையில்!

* சரியாக

செரிமானம் ஆகாமல்...

பாவம்

பாரதமாதா

வீங்கி நிற்கிறாள் இரைப்பை;

வாங்கி நிற்கிறாள் இரைப்பை!

— வாலி.

காதலின் சுவடுகள்!



* காதலின் சுவடுகள் கடுமையாய்

பதிந்ததால்

வெறுமையின் வட்டத்தில் வேதனை

ஆரத்தில் வாழ்வதே பாரமாய்,

வலிகளே சாரமாய்

ஆகித்தான் போனதே ஆழமாய் நோகுதே!

நிகழ்ந்தது யாவுமே நிறைவையே தந்ததால்

உள்ளிலே ஒரு குரல் வேள்வியே என்றது!

— தாமரை.

எரியூட்டுதல்!







* எரிவதற்குத் தயாராய்

எப்போதுமுண்டு

எனக்குள்

ஓர் மூங்கில்காடு!

* வெந்து தணிவதற்கும்

வந்து அணைப்பதற்கும்

உன்னால் மட்டுமே

சாத்தியம்!

* எதிர்வரும்

காலங்களிலாவது

என் நினைவுகள்

உன் மனதை வருடினால்

வந்துவிட்டுப்போ

வாழ்வில் வசந்தம் வீச!

— சிவபாரதி.

ஊழல்!







* ஊழல் ஒரு பெருச்சாளி...

வளை தோண்டிக் கொண்டே

இருக்கிறது!

* ஊழல் ஒரு புற்று நோய்...

பரவிக் கொண்டே

இருக்கிறது!

* ஊழல் ஒரு மெகா

தொடர்...

'எபிசோட்' ஓடிக்கொண்டே

இருக்கிறது!

* ஊழல் ஓர் ஆணிவேர்...

பூமிக்குள் போய் கொண்டே இருக்கிறது!

— ராம.வேதநாயகம்.

வித்தியாசமான நாடு!



* இந்தியா

வித்தியாசமான நாடு...

உள்நாட்டு தொழிலாளர்களைப்

பிச்சைக்காரர்களாக்கும்

வெளிநாட்டு முதலாளிகளை

பணக்காரர்களாக்கும்!

— பா.விஜய்.

வாய்ப்பு வானவில்!



* எண்ணக் கற்களை

முயற்சி உளியால் செதுக்கு...

வெற்றி சிற்பம்

வெளிவரும்!

— மான்சி.

காலத்தை வெல்க!



* கடந்து வந்த பாதையை விட

கடக்கப் போகும் தூரத்தை

கவனத்தில் நிறுத்து

பின்னடைவுகள்

தற்காலிகமானவையே...

* வாய்ப்பு வானவில்

கலையும் முன்

கவனமாய் காரியமாற்றிடு

காலத்தை வெல்!

— அதியமான்.

அன்பு!







* அன்பு இருக்க

பகைமைக்குப் பாலமெதற்கு?

* பண்பிருக்க

துன்பத்திற்கு தோரணமெதற்கு?

* பொறுமை -

இது நம் வெறுமையையும்

வெளிச்சமாக்கும்!

வறுமையையும் வடிகட்டும்!

* பொறுமை...

புதைந்துபோன

வாழ்க்கையையும் புதுப்பிக்கும்!

—'செல்லம்' ரகு.

மரம்!







* உயர்ந்து

தலைநிமிர்ந்து நில்!

மழை, புயல், வெயில், பனி - என

எதையும் தாங்கு!

* இயற்கையில் இரு

இயற்கையாக இரு!

* உண்ணக் கனியும்

இளைப்பாறுதலும்

கொடு!

* அடர்ந்த ஞானம்

பசுமையின் அழகு

நீண்ட ஆயுள்

இவைகளைப் பெற்றுக்கொள்!

* நீ, உனக்காக வாழாமல்

உன்னை, பிறருக்கு அர்ப்பணி!

ஆம்!

மரங்களுக்கு சீடனாகுங்கள்

ஒவ்வொரு மரமும், போதிமரம்...

இது உண்மை தான்!

— என்.சுரேஷ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us