sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழைகளின் 20 ரூபாய் டாக்டர்!

ஏழைகளின் 20 ரூபாய் டாக்டர்!

ஏழைகளின் 20 ரூபாய் டாக்டர்!


PUBLISHED ON : டிச 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதாரண தலைவலி என்றால் கூட, தலையை கழற்றிப் பார்க்கும் அளவிற்கு இன்றைய மருத்துவ உலகம் உள்ளது. உடம்புக்கு முடியவில்லை என்று டாக்டரிடம் சென்றாலோ, ரமணா பட பாணியில், சொத்தையே இழக்க வேண்டிய நிலையே உள்ளது.

இப்படி, சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், வெறும், 20 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம் பார்த்தவர், டாக்டர் பாலசுப்ரமணியம்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பிறந்து வளர்ந்த இவர், மருத்துவம் படித்து முடித்ததும், அரசு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் எட்டு ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார். பின், சென்னிமலை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் தன் பணியை தொடர்ந்தவர், பத்து ஆண்டுகளுக்கு முன், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், சிவில் சர்ஜெனாக சேர்ந்தார்.

அப்போது, சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், கோவை, ஆவாரம் பாளையம் அருகே கிளினிக் துவங்கினார். பத்து மாடி மருத்துவ மனைகளுக்கு நடுவே, பத்துக்கு பத்து அடி இருக்கும் இவரது கிளினிக்கிற்கு, சைக்கிளில் மட்டுமல்ல, கார்களிலும் வந்து இறங்குவர், மக்கள். அந்தளவிற்கு, கைராசிக்காரராக மட்டுமல்ல, மக்களின் அபிமான டாக்டராகவும் திகழ்ந்தார்.

என்ன வியாதியாக இருந்தாலும், தகுந்த ஆலோசனை வழங்கி, குறைந்த விலையுள்ள மருந்துகளையே எப்போதும் எழுதிக் கொடுப்பார். தேவைப்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். இதற்காக, துவக்கத்தில் இவர் வாங்கிய கட்டணம், இரண்டு ரூபாய் மட்டுமே! பின், 20 ரூபாயாக உயர்ந்தாலும், இயலாதவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இவரே வாங்கிக் கொடுப்பார்.

இவ்வாறு, தினமும், காலை, 8:30 மணி முதல் இரவு, 11:00 மணி வரை, 500 பேருக்கும் குறையாமல், இவரிடம் சிகிச்சை பெற வருவர். தன்னை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதற்காகவே, ஒருநாள் கூட இவர் விடுப்பு எடுத்ததில்லை. அவசர காலத்தில், மொபைல் போன் மூலமே, சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்குவார்.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவரை அழைத்து ஆலோசனை பெறும் அளவிற்கு, ஓர் நடமாடும் மருத்துவராகவே செயல்பட்டார். குறைந்த கட்டணம் வசூலிப்பதற்காக, மருத்துவர்கள் மத்தியில், பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும், எதற்கும் மசியாமல் கடைசி வரை, 20 ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணமாக வாங்கினார். இதனாலேயே இவருக்கு, 'மக்கள் டாக்டர்' என்ற பெயரும் உண்டு.

சிங்காநல்லூர், ராஜகணபதி நகரில் மனைவி பவானியுடன் வசிந்து வந்த 67 வயதான பாலசுப்ரமணியம், நவ., 18ம் தேதி காலை, 6:50 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

வழக்கம் போல், மருத்துவம் பார்க்க வந்த பலர், பாலசுப்ரமணியம் இறந்த செய்தியை கேட்டு, கதறி அழுதனர்.

மக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, நவ.,20ம் தேதி, கிளினிக் முன், இவரது உடலுக்கு, இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, இவரால் பயனடைந்த ஆயிரக்கணக்கான மக்கள், திரளாக பங்கேற்று, தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும், கிளினிக் முன், மெழுகுவத்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சியை பார்க்கையில், இப்படி ஒரு டாக்டர், இனி பிறப்பாரா என்றே தோன்றியது.

இவரைப் போல் ஊருக்கு ஒரு டாக்டர் இருந்தால் போதும்; மக்கள் நோயின்றி வாழலாம்!

எஸ்.சரண்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us