தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/32 கை கடவுள்!

32 கை கடவுள்!

32 கை கடவுள்!


PUBLISHED ON : ஜூன் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வங்களுக்கு அதிகபட்சமாக, 16 கரங்கள் வரை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 32 கரங்களை கொண்ட தெய்வத்தைப் பார்த்திருக்கிறீர்களா! பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில், 32 கரங்களுடன் கூடிய வீரபத்திரரைத் தரிசிக்கலாம்.

தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல், யாகம் நடத்தினான் பார்வதியின் தந்தை தட்சன். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், யாகசாலையை அழிக்க, தன் அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பினார்.

முப்பத்திரண்டு கைகளுடன் விஸ்வரூபம் எடுத்த வீரபத்திரர், யாக குண்டத்தை அழித்து, யாகத்தின் பலனை ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார்.

இதன் அடிப்படையில், 32 கைகளுடன், 'பிரளய கால வீரபத்திரர்' சிலை வடித்து, கோவில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோவில் அழிந்து விட்டது. சிலையும் மண்ணில் புதைந்தது.

பிற்காலத்தில், ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி வீசியதைக் கண்டான். புதரை விலக்கிய போது, 32 கை வீரபத்திரர் சிலை கிடைத்தது. அச்சிலையை பிரதிஷ்டை செய்து, மீண்டும் கோவில் எழுப்பினான்.

செவ்வாய் கிழமைகளில் வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று, தேங்காய்த் துருவலால் அலங்காரம் செய்வது விசேஷம். வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், அவரைக் குளிர்வித்து சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.

சுவாமி சன்னிதி வலப்புறமுள்ள குன்றில், வீர ஆஞ்சனேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னிதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் (சிவன்) காட்சி தருகிறார். விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலிங்கம் மற்றும் பார்வதிக்கு, தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

நவக்கிரக சன்னிதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகிறார். வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட, 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னிதி எதிரில் நந்தி உள்ளது.

தை மாதம் ரத சப்தமிக்கு முதல் நாள் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டம் ஏற்றுவர். அர்ச்சகர்கள் இருவர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைப்பர். அதில் சாம்பிராணி துாபமிட்டு வீரபத்திரருக்கு பூஜை செய்வர். அதன்பின் மூவரும் அக்னி குண்டத்தில் இறங்குவர். அன்று வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருவார்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், மதிப்புக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்பட்டவர்கள் ஆகியோர் இங்கு வந்து வீரபத்திரரை வணங்கி, நிவாரணம் பெறலாம்.

பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கிருந்து சற்று துாரம் நடந்தால் கோவிலுக்குச் சென்று விடலாம்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us