PUBLISHED ON : ஜன 01, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, ஐயாயிரம் பனை மரங்களை, விதைத்துள்ளார், இளைஞர் ஒருவர். அவரது பெயர் மணிகண்டன்; வயது, 22. பட்டப்படிப்பை முடித்து, திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூரில், மொபைல் போன் சர்வீஸ் செய்து தரும் கடை வைத்துள்ளார்.
ஜெயலலிதா மீது, மிகுந்த அபிமானம் வைத்திருக்கும் இவர், அவர் மறைவை ஒட்டி, தன் நண்பர்களுடன் சேர்ந்து, தங்கள் பகுதியில், ஐயாயிரம் பனை மரங்களை விதைப்பது என்று முடிவெடுத்தார்.
அதன்படி, நண்பர்களை திரட்டி, பனங்காய்களான விதைகளை தேடித் தேடி சேகரித்தனர். அப்படி சேர்ந்த ஐயாயிரத்துக்கும் அதிகமான பனங்காய்களை, நீரில் நனைத்து, நீர்ப்படுகையுள்ள இடங்களில் விதைத்துள்ளனர்.
'பிறந்தநாளுக்கு தான் மரம் நட வேண்டுமா... முதல்வர் நினைவாக, அவர் இறந்ததற்கும் மரம் நடுவோமே என எண்ணினேன். மேலும், பனை மரம் மற்றும் அது தரும் பலன்களை பற்றி அறிந்துள்ளேன். குறிப்பாக, நீர் அதிகம் தேவைப்படாத வறட்சியை தாங்கி வளரும் தாவரம் இது என்பதால், மற்ற மரங்களை விட, பனை மரம் நடுவது, உண்மையிலேயே, மக்களுக்கும், மண்ணிற்கும் நல்லது...' என்கிறார்.
தலைவர் இறந்து விட்டால், விரலை வெட்டுவது, மொட்டை போடுவது, தீக்குளிப்பது மூலமாக தங்கள் விசுவாசத்தை காட்ட வேண்டியதில்லை. மணிகண்டனை போல ஊருக்கு உபயோகமான காரியங்களை செய்தும், தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தலாம்!
— ஜோல்னாபையன்.
