PUBLISHED ON : டிச 17, 2017

மதுரையின் பெருமைகளில் ஒன்றாக, 80ம் ஆண்டு விழா கொண்டாடும் சரும ரோக நிவாரணியான, சைபால் நிறுவனம் உருவான கதையை கடந்த வாரம் பார்த்தோம்.
அதன் ஸ்தாபகர், எஸ்.சுப்பிரமணியன், 55 வயதில் திடீரென இறந்ததில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார், அவரது ஒரே மகன், எஸ்.சங்கர நாராயணன். அப்போது, அவருக்கு வயது, 15.
திடீரென தந்தை மறைந்ததும், அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை; அதுவரை, தங்களின் மருந்து கம்பெனியை மறந்தும் கூட எட்டிப் பார்க்காதவர், இப்போது, அதை நிர்வகிக்க வேண்டிய சூழ்நிலை.
வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கப் பட்ட, வரவு - செலவுகளுக்கும், வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்த, வரவு - செலவுக்கும் ஒத்துப் போகவில்லை. கற்றுக் கொள்வதற்குள் நிறைய இழப்புகள்!
ஆனால், ஒவ்வொரு இழப்பையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டார். இந்நிறுவனம், தந்தையின் கனவு மட்டுமல்ல; சுதந்திரத்திற்காக அவர் இட்ட வித்து என்பதை உணர்ந்து, நிறுவனத்தை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக் கொண்டார்.
சோதனைக் காலத்திலும் கூடவே இருந்த நிறுவன ஊழியர்களை பாராட்டி, 'இனி, இது, என் நிறுவனமல்ல; உங்கள் நிறுவனம். இதை உயரத்திற்கு கொண்டு போவது உங்கள் கடமை...' என்று சொல்லி, அவர்களது ஆலோசனையுடன் நல்ல நண்பர்கள் உதவியுடனும் வீறுநடை போட்டார்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று அண்டை மாநிலங்களுக்கும் சைபால் விற்பனையை விரிவுபடுத்தினார். விவசாய நேரத்திலும், மழைக் காலத்திலும் மட்டும் விற்கக் கூடிய மருந்தாக இல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும், விற்கக் கூடிய மருந்தாக மாற்றினார். அதற்கேற்ப விளம்பர உத்திகளை கையாண்டு, முடிவில் வெற்றியும் கண்டார்.
இருந்த கடன்களை எல்லாம் அடைத்ததுடன், நிறைய மருத்துவ முகாம்களை நடத்தினார். ஆன்மிக காரியங்களுக்கு அள்ளித் தந்தார்; யார் கேட்டாலும், இல்லை என்று சொல்லாது, நன்கொடைகளை வழங்கினார். தன் பிள்ளைகள் இரண்டு பேரையும் வெளி நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.
இனி, எல்லாம் ஜெயமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தந்தை இறந்தது போலவே, அதே, 55வது வயதில், 2011ல் அமரரானார், சைபால் நிறுவன அதிபரும், ஆடிட்டருமான, எஸ்.சங்கரநாராயணன்.
வெளி உலகம் தெரியாத தாயார், வெளிநாட்டு படிப்பு படித்த பிள்ளைகள், உறவினர் போன்ற ஊழியர்களுடன் சைபால் நிறுவனம் தன் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்...
ஊழியரல்ல, உறவினர்...
மதுரை சாத்தமங்கலம் சாலையில், தற்போது இயங்கி வரும் சைபால் நிறுவனத்தின் ஆரம்ப கால ஊழியர், எம்.சண்முகம்; 80 ஆண்டு கால அனுபவம் கொண்ட சைபால் நிறுவனத்தின், 50 ஆண்டு கால ஊழியர்.
நெல்லை மாவட்டம், கடம்பூரை சேர்ந்த சண்முகம், குடும்ப சூழ்நிலை காரணமாக, மதுரைக்கு இடம் பெயர்ந்தவர், தெரிந்தவர் மூலமாக சைபால் நிறுவனத்தில் சேர்ந்தார்.
அன்று முதல், 50 ஆண்டு காலம், இங்குதான் வேலை செய்கிறார். எந்த வேலை என்றாலும் சுறுசுறுப்பாக செய்யக் கூடியவர். மூன்றாவது தலைமுறை முதலாளிகளான சுப்பிரமணியன் - பாலாஜி ஆகியோர், இவரிடம், 'நீங்க, எங்க தாத்தா காலத்து ஆள்; அதனால், நீங்களும் எங்களுக்கு தாத்தா தான். ஆகவே, சம்பளம் மட்டும் வாங்கிட்டு சும்மா இருந்தா போதும்...' என்று சொன்னாலும், கேட்க மாட்டார். இன்றும் கம்பெனிக்கு வரும் முதல் ஆளும், வேலை நேரம் முடிந்து, வீட்டிற்கு செல்லும் கடைசி ஆளும் இவர் தான்.
'என் பிள்ளைங்க படிப்பு, கல்யாணம் என்று எல்லா நல்லதும் இவங்களால தான் நடந்துருக்கு. வயசாச்சேன்னு என்னை வீட்டுக்கு எப்போதோ அனுப்பி இருக்கலாம்; ஆனால், அப்படி செய்யாம, என்னை சொந்தமா பாவிக்கிறாங்கய்யா... என் மேல பாசம் காட்டறதுல மூணு தலைமுறை முதலாளிகளும் ஒருத்தர ஒருத்தர் மிஞ்சுறாங்கய்யா... இவங்களுக்கு உழைக்கிறத விட வேறென்னய்யா எனக்கு வேலை இருக்கு...' என்றவர், நிறுவனர் காலத்தில் போடப்பட்ட, இன்றும் மாற்றப்படாமல் இருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து, பழைய நினைவுகளால் கண்கலங்குகிறார்.
— தொடரும்.
எல். முருகதாஜ்
