/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை!
/
பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை!
PUBLISHED ON : பிப் 20, 2011

மிருகக் காட்சி சாலை ஒன்றில், பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை ஒன்று, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், நியூ சவுத்வேல்ஸ் நகரில் உள்ளது டரோங்கா மிருகக் காட்சி சாலை. ஆசிய காடுகளில் மட்டும் காணப்படும் யானை வகையைச் சேர்ந்த பார்ன்டிப் என்ற பெரிய யானை ஒன்று, சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டி யானைக்கு, 'லக்சாய்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குட்டி யானைதான் இப்போது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தாய் பார்ன்டிப்பும், லக்சாயும் பெரிய பந்து ஒன்றை உதைத்து விளையாடி வருகின்றன. தன்னை நோக்கி வரும் பந்தை, அப்படியே அமுக்கி, அதன் மேல் ஏற முயற்சி செய்யும் லக்சாய், பின்னர் பந்தை தன் தாயை நோக்கி காலால் உதைக்கும். இந்த மிருகக் காட்சி சாலைக்கு தினமும் ஏராளமானோர்  வருகின்றனர். அவர்களில் வயதான பெண் ஒருவர் அடிக்கடி வருவார். அவர், இந்த யானை பற்றி கூறியது: ஆஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை லக்சாய். மிகவும் மகிழ்ச்சியாக கால் பந்தை இந்த யானை உதைத்து விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பந்தை, அந்த யானை விரட்டி, விரட்டி செல்வதைப் பார்க்கும் போது, சிறந்த கால்பந்து போட்டியைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள சிறிய குளத்திலும், பந்தை வைத்து யானை விளையாடுகிறது! இவ்வாறு அவர் கூறினார். 'ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த முதல் யானையைப் பார்க்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர். குட்டி யானை, கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல், பந்தைச் சுற்றி சுற்றி வருவது பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது... ' என்று, மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் கூறினர். *** 

