தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கொள்ளைக்காரனாக மாறிய ராணுவ வீரன்!

கொள்ளைக்காரனாக மாறிய ராணுவ வீரன்!

கொள்ளைக்காரனாக மாறிய ராணுவ வீரன்!


PUBLISHED ON : ஜூன் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பிரதேசத்தில் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட, மோரேனா மாவட்டம் - இந்தியா முழுவதும் பிரபலமான, பல கொள்ளையர்களை உருவாக்கிய, சம்பல் பள்ளத்தாக்கு இங்கு தான் உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வீடுகளையே பார்க்க முடியாது. சிறு ஓடைகள், பெரும் பள்ளத்தாக்குகள் என, பார்த்தவுடனேயே மனதில் ஒருவித கிலியை ஏற்படுத்தும், இந்த சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்தவன் தான், பான் சிங் தோமர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவன். ஏழு முறை 3,000 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளான். 1950ல், டோக்கியோவில் நடைபெற்ற, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அனுபவமும் தோமருக்கு உண்டு. உலக அளவிலான ராணுவ போட்டியில், இதே தடை ஓட்டத்தில் முதல் பரிசு பெற்றான்.

தொடர்ந்து, ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வாங்கிக் குவித்து, இந்திய ராணுவத்திற்கு பெருமை தேடித் தந்த, பான் சிங் தோமருக்கு, அப்போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெரிய அளவில் அறியப்படாத நபராக இருந்தான். ஆனால், இந்த தோமர், தன் வாழ்வில் நடந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக, பின்னாளில், சம்பல் கொள்ளைக்காரனாக மாறி, நாடு முழுவதும் பேசப்படும் நபராக மாறி விட்டான்.

தோமர், கொள்ளைக்காரனாக மாறியதன் பின்னணி, மிகவும் சோகமயமானது. தோமரின் நிலங்களை, அவனுடைய ஒன்றுவிட்ட அண்ணன் அபகரித்துக் கொண்டதால், ஆத்திரம் அடைந்து, போலீசிடம் புகார் செய்துள்ளான். 'நான் ஒரு ராணுவ வீரன். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கிறேன். என்னுடைய நிலத்தை மீட்டுத் தாருங்கள்...' என, போலீசாரிடம் கதறியுள்ளான். தான் ஒரு விளையாட்டு வீரன் என்பதற்கு ஆதாரமாக, தான் பெற்ற பதக்கங்களையும் காட்டியுள்ளான். ஆனால், அங்கு இருந்த சப் - இன்ஸ்பெக்டரோ, இவனுடைய அண்ணனுடைய ஆள். தோமருடையை மெடல்களை தூக்கி வீசி, 'இனிமேல், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வந்தால், தோலை உரித்து விடுவேன்...' என, எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, தோமருடைய மகனை, எதிர் கோஷ்டி அடித்து காயப்படுத்தி இருக்கிறது. தோமரின் வயதான தாயார், இந்த கோஷ்டியால் கொல்லப்பட்டாள். வெறுத்துப்போன தோமர், துப்பாக்கியை கையில் எடுத்திருக்கிறான். இவனோடு ஒரு கும்பலை சேர்த்து, பழிக்கு பழி வாங்கும் வகையில், தன் அண்ணனைக் கொன்றான். பின் முறைகேடாக பணம் சேர்த்து வைத்துள்ளவர்களை, பணயக் கைதிகளாக கடத்தினான்.

சம்பல் பள்ளத்தாக்கில் பெரும் கொள்ளையனாக உருவெடுத்த தோமரை ஒழித்துக் கட்ட, போலீசார் முடிவு செய்தனர். திடீரென ஒரு நாள், ஏராளமான போலீசார், தோமர் தங்கியிருந்த கிராமத்தை வளைத்தனர். 14 மணி நேரத்துக்கு மேலாக நடந்த, துப்பாக்கி சண்டையின் முடிவில், தோமர் கொல்லப் பட்டான். கடந்த 1950 முதல் 1980வரை நடந்த உண்மைச் சம்பவம் இது. விளையாட்டு போட்டியில் பங்கேற்று, பல சாதனைகளைச் செய்தபோது, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையால், கொள்ளைக்காரனாக மாறியதும், நாடு முழுவதும் பேசப்படும் நபராக மாறிய, இந்த உண்மைச் சம்பவம், தற்போது இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, வசூலை வாரி குவித்து வருகிறது.

***

- ரித்விக் முகில்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us