PUBLISHED ON : டிச 08, 2013

மனசுக்கு பிடித்த பெண்ணுக்கு, விதம் விதமான பரிசுகளை வாங்கித் தருவதில், காதலர்களுக்கு, அலாதி பிரியம். சீனாவைச் சேர்ந்த ஒரு காதலர், தன் காதலிக்கு, பரிசு அளித்த விதத்தை கேட்டால், ஆச்சர்யப்படுவீர்கள்.
மெங் குவாங், (27) என்ற இளைஞர், பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். லின்சன் என்ற பெண்ணை, சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். சமீபத்தில் தான், இவர்களின் திருமணத்துக்கு பெற்றோரின் சம்மதம் கிடைத்தது.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அழகான, 18 கூடைகளை வாங்கி, அவற்றில், பணத்தை நிரப்பி, மேல் பகுதியை, பரிசுப் பொருட்களை அலங்கரிப்பதற்காக கட்டும், ரிப்பன்களை கட்டி விட்டார்.
பின், இந்த, 18 கூடைகளையும், காதலியின் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக, 18 ஊழியர்களை அமர்த்தினார். ஊழியர்கள், அந்த கூடைகளை, லின் சன்னிடம் கொடுத்ததும், லின் சன் மட்டுமல்ல, அந்த சுற்று வட்டாரப் பகுதியிலிருந்த அனைவருமே, ஆச்சர்யப்பட்டனர்.
அந்த கூடைகளில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? ஒன்பது கோடி ரூபாய். இதுகுறித்த செய்தி, பத்திரிகைகளில் வெளியாகியதும், சமூக ஆர்வலர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'இவர், அந்த பெண்ணை, திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா அல்லது விலை கொடுத்து வாங்குகிறாரா...' என, கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
- ஜோல்னா பையன்.

