/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அந்தமானில் ஒரு எருமைகன்றுகுட்டி! (3)
/
அந்தமானில் ஒரு எருமைகன்றுகுட்டி! (3)
PUBLISHED ON : நவ 12, 2017

செல்லுாலர் ஜெயிலில் ஒலி - ஒளி காட்சியை பார்த்தபின், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம்.
முத்து, பவழம், மரத்தாலான கைவினை பொருட்களுக்கு மத்தியில், அந்தமான் பழங்குடியினரின் மரச் சிலைகள் கண்களை கவர்ந்தன.
இப்பழங்குடி மக்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்... இன்றும், ஜாரவா, செண்டினல், ஷான்பென், ஒன்கே மற்றும் அந்தமானியர் என பழங்குடி மக்கள், தெற்கு மற்றும் நடு அந்தமானில் உள்ள காடுகளில், வெளி உலகத் தொடர்பின்றி வாழ்கின்றனர். இவர்கள் வசிக்கும் தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு அனுமதியில்லை.
செண்டினல் பழங்குடி மக்களோ, அந்தமானில் உள்ள வடக்கு செண்டில் என்ற தீவில், ஒரு சிறு கிராமத்தில் வாழ்கின்றனர்.
டிசம்பர், 26, 2004ல் வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்ட சுனாமியின் போது, இப்பழங்குடியின மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லையாம். காட்டையும், கடலையும் மட்டுமே நேசித்து, அதனுடனே தங்கள் வாழ்வை பிணைத்துக் கொண்ட இவர்கள், இயற்கையின் சீற்றத்தையும், அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வழிகளையும் அறிந்து வைத்திருந்ததே இதற்கு காரணம். இருப்பினும், பல்வேறு காரணங்களால், இன்று, இப்பழங்குடியின மக்கள் சில நுாறு பேரே இருப்பதாக கூறுகின்றனர்.
கடைகளில், அந்தமானில் மட்டுமே கிடைக்கும் பொருட்களை வாங்கி, ஓட்டல் திரும்பினோம்.
இரவில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே, காளான் சூப், சாதம், சாம்பார், சப்பாத்தி, சோளா பட்டூரா, உருளைக் கிழங்கு கறி, சிக்கன் குழம்பு, அப்பளம், ஊறுகாய் என, வெட்டு வெட்டி, துாங்கப் போனோம்.
மறுநாள் காலை, இட்லி, தோசை, சப்பாத்தி, தேங்காய் சட்னி, பிரட் ஆம்லெட், அவல் உப்புமா, பழச்சாறு என, தொண்டை வரை உணவைத் திணித்து, போர்ட் பிளேரிலிருந்து, 'பெர்ரி' எனப்படும், கப்பல் வடிவில் காணப்படும் பெரிய ரக உல்லாச படகில், ஹவ்லாக் தீவிற்கு பயணமானோம். சமுத்திர ராஜன் தாலாட்ட, சுகமான ஒரு மணி நேர பயணத்திற்கு பின், ஹவ்லாக் தீவில் இறங்கினோம்.
டாக்சியில், முக்கால் மணி நேரம் ராதா நகர் கடற்கரையை நோக்கிய பயணம்...
வழி நெடுக, பாக்கு, தென்னை, மூங்கில் மற்றும் ஓக் மரங்கள் வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, கம்பீரமாக அணிவகுத்து, மிரட்டின.
கடல், காடு, மலையை காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா... அது மூன்றும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தால், வாய் பேச முடியாதோருக்கும் கவிபாடத் தோன்றுமே... அப்படியிருக்கையில், பெரிய பெரிய வாய்களை வைத்துள்ள எங்களுக்கு தோன்றாமல் இருக்குமா... எல்லார் உதடும் அவரவருக்கு பிடித்த பாடல்களை, 'ஹம்மிங்' செய்ய, எங்களுக்கு கார் ஓட்டிய வாலிபனிடம் பேச்சு கொடுத்தார், கல்பலதா...
வங்காளியான அந்த இளைஞரின் முன்னோர்கள், பிழைப்பு தேடி, அந்தமானுக்கு வந்தவர்கள் என்றும், இன்று, அங்கேயே நிலம் வாங்கி, விவசாயம் செய்து வாழ்வதாகவும் கூறினார், அந்த வாலிபர்.
இவரைப் போன்றே, நிறைய வங்காளிகள், வடக்கு அந்தமான், மத்திய மற்றும் சிறிய அந்தமானில் வசிக்கின்றனர். வங்கதேச பிரிவினையின் போது, முன்னாள் பிரதமர் இந்திராவால் குடியேற்றப்பட்டவர்கள் இவர்களின் முன்னோர். அதே போன்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் போர்ட் பிளேயரில் அதிகம் வசிக்கின்றனர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகள் பேசப்பட்டாலும், பிரதான மொழியாக ஹிந்தியே இங்கு அனைவராலும் பேசப்படுகிறது.
ஹவ்லாக் தீவில் இறங்கும் போதே மணி, 12:30 ஆகி விட்டதால், டிரைவரிடம், 'சாப்பிட இங்கே ஓட்டல்கள் இருக்குமா?' என்று கேட்க, 'ராதா நகர் கடற்கரை அருகே, சைவம், அசைவம் இரண்டும் கிடைக்கும் ஓட்டல் ஒன்று உள்ளது. ஆனால், மதியம், 1:00 மணிக்கு மேல் அங்கு உணவு கிடைக்காது...' என்றார். அத்துடன், 'வழியில் பழக்கடைகள் இருக்கும்' என்றார்.
ஏதோ பெரிய ஓட்டல், பழமுதிர் சோலை போன்று பெரிய பழக்கடைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அங்கோ, பெட்டி கடைகள் என்றே சொல்லும் அளவுக்கு இருந்ததே, ஏழெட்டு கடைகள் தான்; அதுவும், கீற்றுக் கொட்டகைகள். அந்த சிறிய ஓலை குடிசைகளுக்குள், கொஞ்சம் துணிகளை தொங்க விட்டிருந்தனர்.
கடல் போன்ற ஜவுளிக் கடைக்குள் பெண்கள், நுழைந்தாலே, அக்கடை, யானையின் காலில் மிதிப்பட்ட கரும்பாகி விடும். இந்த சின்ன கடைகள் எம்மாத்திரம்... நம் குழு உள்ளே புகுந்து, டி - ஷர்ட், கம்மல், சங்கு என, வாங்கி குவித்தனர். பின், இளநீர் குடித்தோம். ஒரு இளநீர் விலை, 40 ரூபாய்!
டிரைவர் சொன்ன பழக்கடை எங்கிருக்கிறது என்று என் கண்கள் தேட, நம் ஊரில் காணப்படும் ரோட்டோர தள்ளுவண்டி போல் மூன்று வண்டிகள் தென்பட்டன. அதில், மா, பலா, வாழை, ஆப்பிள், கொய்யா, வால்பேரி, பப்பாளி பழம் என்று சிறு பெட்டியில் அடுக்கப்பட்டிருக்க, அதிலிருந்து சிறிது, 'கட்' செய்து, சாட் மசால் துாவி கொடுக்க, குச்சியில் குத்தி ருசித்தபடி, ராதா நகர் கடற்கரையை அடைந்தோம்.
ஆங்காங்கே இருந்த அழகான மரக் குடில்களில் அமர்ந்து, இயற்கை எழில் கொஞ்சும் அந்த அழகிய கடற்கரையை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தனர், சுற்றுலா பயணியர். கல்பலதா மற்றும் செல்வி இருவரும், 'நாங்கள் பைகளை பாத்துக்கிறோம்...' என்று கூறி, மரக் குடிலில் அமர்ந்து, வம்பளந்து கொண்டிருக்க, நாங்கள், நால்வரும், கடலில் குதியாட்டம் போட கிளம்பினோம்.
இதுபோன்ற அழகான கடற்கரை உலகில் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு, எங்கும் பசுமை பூத்துக் குலுங்க, பளிங்கு போன்று தண்ணீர் பளபளத்தது. வியந்து பார்த்த எங்களுக்கு ஒரு நிமிடம் அள்ளி பருகத் தோன்றி விட்டது; அத்தனை சுத்தம்!
குமரிப் பெண்ணின் துள்ளல் நடை போன்று கும்மாளம் போட்டு வந்த அலையில், சிறிது நேரம் நாங்களும் குதித்து ஆடி, குடிலுக்கு திரும்பினோம்.
அங்கு, தமிழர் நடத்தும் சைவ ரெஸ்டாரன்ட் ஒன்று இருந்தது. சப்பாத்தி, சாதம், கடி எனும், குஜராத்தி மோர் குழம்பு, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் என்று மதிய உணவை அங்கேயே முடித்து, ஹவ்லாக் நகருக்கு திரும்பி, 'பெர்ரி'யில் போர்ட் பிளேயர் திரும்பினோம்.
அங்கிருந்து திரும்பவும், செல்லுாலர் ஜெயில் சென்று, முதல் நாள் பார்க்காமல் விட்ட இடங்களை பார்த்து, திரும்பிய போது, எதிரில் இருந்த பூங்காவில் அதே எருமைக் கன்று... அதன் கரிய நிறக் கண்களில் ஏதோ ஒரு செய்தி... பார்க்கலாம் அடுத்த வாரமாவது இதைப் பற்றி சொல்ல முடிகிறதா என்று!
—தொடரும்.
செவன் சிஸ்டர்ஸ்
இத்தீவுகளில், ஆயிரம் ஆண்டுகளாக, வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இங்குள்ள, 572 தீவுகளில், மனிதர்கள் வசிப்பது, 38 தீவுகளில் மட்டுமே!
சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான, இந்திய தேசிய ராணுவம் அந்தமான் தீவை கைப்பற்றி, சுவராஜ் - சாஹிப் தீவுகள் என்று பெயர் சூட்டியது.

