PUBLISHED ON : ஜூன் 21, 2020

'செண்பகமே... செண்பகமே...' என, ராமராஜன் வாயசைப்பில் மயங்கி, பசு மாடு பால் கறந்ததை, நாம், எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் பார்த்து, ரசித்து விட்டோம். ஆனால், தற்போது இது, ரஷ்யாவில் அதி நவீன தொழில்நுட்பமாக உருவெடுத்து, பெரும் வியாபாரமாக மாறியுள்ளது.
மாஸ்கோ அருகில் உள்ள, ரமென்ஸ்கி மாவட்டத்தில், பசு மாடுகளின் காதுகளில், 'ஹெட்செட்' பொருத்தி, அதில், இனிமையான இசையை ஒலிக்க விடுகின்றனர். பால் கறக்காமல் அடம் பிடிக்கும் பசுக்கள், இந்த இசையில் மயங்கி, லிட்டர் லிட்டராக கறப்பதாக கூறுகின்றனர்.
'பசு மாடுகளின் காதுகளில் சரியாக பொருந்தும் வகையில், இந்த கருவியை தயாரித்துள்ளோம். இனிமையான இசையை கேட்டதும், பசு மாடுகள், பதற்றம் குறைந்து, சுற்றுச் சூழலை மறந்து விடுகின்றன. இதனால், அதிகம் பால் கறக்கின்றன...' என்கின்றனர், 'ஹெட்செட்' தயாரிப்பாளர்கள்.
இதையடுத்து, இந்த கருவிக்கு, ரஷ்யாவில் கிராக்கி அதிகரித்துள்ளது.
ஜோல்னாபையன்
