PUBLISHED ON : டிச 26, 2021

வரங்கள் பல பெற்றவன், ராவணன். அதன் காரணமாக, பலரையும் வென்று, அடக்கி ஆண்டு வந்தான்.
'என்னை வெல்ல யாருமில்லை...' என்ற ஆணவத்தோடு, மாகிஷ்மதி நகரை அரசாண்ட, கார்த்த வீரியார்ஜுனன் என்பவனோடு போர் செய்ய முனைந்தான்.
ராவணன் போன நேரம், நர்மதை ஆற்றில், அரச மாதர்களோடு கார்த்தவீரியார்ஜுனன் நீராடிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதனால், அங்கிருந்து புறப்பட்ட ராவணன், நர்மதை ஆற்றின் கரையில் சிவலிங்கம் அமைத்து, வழிபாடு செய்யத் துவங்கினான்.
ராவணன் இருந்த அதே இடத்தில் சற்று தள்ளி மேற்பக்கமாக, கார்த்த வீரியார்ஜுனன் தன் தேவியர்களுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தான். கார்த்த வீரியார்ஜுனனுக்கு,
1,000 கைகள் உண்டு. அந்தக் கைகளால் ஆற்றின் நீர்ப்பெருக்கைத் தடுத்து நீராடிக் கொண்டிருந்த
கார்த்தவீரியார்ஜுனன், நீராட்டம் முடிந்து, தடுக்கப்பட்ட நீரை விட்டான்.
தடுக்கப்பட்ட நீர் விடுபட்டவுடன், பொங்கிப் பெருகி ஓடி வந்தது. அதன் விளைவாக, ராவணன் செய்து கொண்டிருந்த சிவ பூஜைக்குண்டான பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தான் செய்து கொண்டிருந்த வழிபாட்டிற்கு இடையூறு வந்தவுடன், ராவணனுக்குக் கடுங்கோபம் வந்தது. விபரம் அறிந்தவன், 'இந்த கார்த்த வீரியார்ஜுனனை விட்டு வைக்க மாட்டேன்...' என்று, அவனுடன் போர் செய்ய முனைந்தான்.
ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீரியார்ஜுனனுடன், 20 கைகள் கொண்ட ராவணன் போரிட்டு வெல்ல முடியுமா? ராவணனை மிகவும் சுலபமாக அடித்து, இழுத்துப் போய், தன் நகரில் சிறை வைத்து விட்டான்.
தகவல் அறிந்தார், ராவணனின் பாட்டனாரான, புலத்திய முனிவர், கார்த்த வீரியார்ஜுனனை தேடி சென்றார். தன்னை தேடி வந்த மாமுனிவருக்கு, எல்லாவிதமான மரியாதைகளும் செய்து உபசரித்தான், கார்த்த வீரியார்ஜுனன்.
'மன்னா... நீ சிறையில் வைத்திருக்கும் ராவணன், என் பேரன். அவனை விட்டு விடு...' என்றார், புலத்திய முனிவர்.
அவருடைய வார்த்தைகளை ஏற்று, ராவணனை விடுதலை செய்தான். தலை குனிந்து திரும்பினான், ராவணன்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் இந்நிகழ்வு, மரக்கிளையின் நுனியிலே ஏறி நின்றவர், அதற்கு மேலும் செல்ல முயன்றால், அவரது உயிருக்கு முடிவை உண்டாக்கி விடும்- எனும் வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கவும் செய்கிறது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
வீடுகளில் மணியடித்து பூஜை செய்துவிட்டு, அந்த மணியை தரையில் வைக்கக் கூடாது; ஏதாவதொரு மரப்பலகை அல்லது மேடையின் மேல் வைக்க வேண்டும்.
