PUBLISHED ON : மே 10, 2020

'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொடுக்கும்' என்பது, தென் கிழக்காசிய நாடான பிலிப்பைன்சைச் சேர்ந்த, 16 வயதான, ரீட்டா காவியோலா என்ற இளம்பெண் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், 13 வயது சிறுமியாக இருந்தபோது, தலைநகர் மணிலா நகர வீதிகளில் தெருத்தெருவாக பிச்சையெடுத்து வந்தார், இந்த பெண்.
இவரது தந்தை, குப்பை பொறுக்கும் தொழிலாளி. இவருக்கு, ஐந்து குழந்தைகள். இவர்களில் யாருமே, மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்கியது இல்லை.
தெருத் தெருவாக சென்று, வசதியானவர்களின் வீடுகளில் உணவு சேகரித்து, அதை, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, சகோதர, சகோதரிகளுக்கு தருவது, ரீட்டாவின் வழக்கம். அப்படி பிச்சை எடுத்தபோது தான், ஒரு புகைப்படக்காரரின் கண்களில் பட்டார், ரீட்டா. இந்த சிறுமியின் கண்களில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை பார்த்த அந்த புகைப்படக் கலைஞர், அவரை படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அடுத்த சில நாட்களிலேயே, அந்த சிறுமி பிரபலமாகி விட்டார். பிலிப்பைன்சைச் சேர்ந்த மாடல் அழகிகள், அந்த சிறுமியை அழைத்து வந்து, மாடலிங் தொழிலில் ஈடுபடுத்தினர்.
தற்போது அந்த சிறுமி, இளம்பெண்ணாகி, பல முக்கிய வர்த்தக நிறுவனங்களின் பிரதான மாடல் அழகியாக உருவெடுத்துள்ளார். கோடி கோடியாக சம்பாதித்து கொட்டுகிறார்.
'எல்லாவற்றுக்கும் ஒரு நேரம், காலம் வர வேண்டும்' என, பெரியவர்கள் சும்மாவா கூறியிருப்பர்.
— ஜோல்னாபையன்

