PUBLISHED ON : ஜூலை 25, 2021

நம் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த, மெங் என்ற பெண், தன் மகன், பாதுகாப்பாக, பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், சாலையின் குறுக்கே, இரும்பு மேம்பாலம் கட்டியுள்ளார்.
இந்த பெண்ணின் மகன் படிக்கும் பள்ளி, போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது.
இந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், சாலையை கடப்பதற்கு அதிகம் சிரமப்பட்டனர்.
இங்கு மேம்பாலம், 'சிக்னல்' எதுவும் இல்லாததால், பெற்றோர், ஒருவித பீதியுடனேயே, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தனர்.
இந்த பிரச்னையை போக்குவதற்காக, மெங், தன் சொந்த செலவில், இரும்பு மேம்பாலம் கட்டியுள்ளார்.
'என் குழந்தைக்கு மட்டுமல்லாமல், எல்லா குழந்தைகளின் பாதுகாப்பையும், இந்த பாலம் உறுதி செய்கிறது; இது, எனக்கு மகிழ்ச்சி...' என்கிறார், மெங்.
— ஜோல்னாபையன்
