
மவுனம் எனும் மந்திர மொழி!
எதை தவற விட்டேன்
என் இதயம் எம்பி குதிக்கிறதே!
பொதும்பலில் புதைந்து கிடந்த
என் நரம்புகள் வெப்ப கனலில்
முறுக்கேறி வேலி தாண்டுகிறதே!
விழிகள் விழித்திருந்தும்
மனம் விட்டத்தில் முட்ட
எட்டிப் பார்க்கிறதே!
முல்லைப் பூக்களின் வாசம்
முகம் மலர்த்தியும்
முட்களின் நட்பை
முன்னிறுத்துகிறேன்!
புத்தனின் போதனைகள் கற்ற பின்பும்
போதி மரத்தின் கிளைகளை
கொத்திப் பார்க்கிறேன்!
அமைதி புறாக்கள்
அழகாய் அடி பணிந்தும்
அஸ்திரங்களால் குறி பார்க்கிறேன்!
ஆர்ப்பரிக்கும்
ஆழிப் பேரலைகளை விட
அதிவேகமாக அல்லவா
மதியிழக்கிறேன்!
எப்படி முடிகிறது...
சீற்றத்திலேயும்
சுமை தூக்கியே
சுகம் பெற இந்த
பூமிக்கும், சாமிக்கும்!
தன் உடமைகளையும், உரிமைகளையும்
சூறையாடும் சூத்திரதாரர்களையும்
சுகமாக தூக்கி சுமக்கிறதே
இந்த பூமி!
தன்னை பிரித்தாளும்
பினாமிகளையும் பிள்ளைகளாகவே
பெருமைப்படுத்திக் கொள்கிறதே
இந்த சாமி!
அப்படியானால்
பொறுமை எனும்
பொக்கிஷத்தை நான்
தொலைத்து விட்டேனா இல்லை
போதும் என்று புதைத்து விட்டேனா...
அதனால் தான்
அவசரமும், ஆத்திரமும் என்
அங்கத்தில் அணிவகுத்து
அல்லோலகல்லோலப்படுத்துகிறதா?
பொறுமை புதைத்து வைக்கும் பொக்கிஷமல்ல
பெருமையுடன் பேணி காக்கும் பிரதான அணிகலன்!
அந்த அமைதி அணிகலனை
அணிந்தவன் மட்டுமே
அகிலம் ஆளும்
பெருமை பெற்றவனாகிறான்.
மவுனம் எனும்
அந்த மந்திர மொழி
பயிலும் எவரையும்
வணங்க காத்திருக்கிறது
இவ்வையகம்!
— க.அழகர்சாமி, கொச்சி.