தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கால் அடி லிங்கம்!

கால் அடி லிங்கம்!

கால் அடி லிங்கம்!


PUBLISHED ON : ஜூலை 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரிய சிவலிங்கத்தை தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஏறத்தாழ கால் அடி உயரமும், புற்று மண்ணாலும் ஆன சிறிய சிவலிங்கத்தைத் தரிசித்திருக்கிறீர்களா... அரியலுார் - தஞ்சாவூர் சாலையில், 12 கி.மீ., துாரத்திலுள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலுக்குச் சென்றால், தரிசிக்கலாம்.

ஒருமுறை கயிலாயத்தில், அன்னை பார்வதி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினாள். சூரியனும், சந்திரனும் சிவனின் கண்களாக விளங்குவதால், உலகமே இருண்டு போனது.

என்ன நடக்கிறது என, தெரியாமல் முனிவர்கள், தேவர்கள் மற்றும் உலக மக்களும் தவித்தனர். சிவனுக்கு கோபம் வந்தது...

பார்வதியிடம், 'உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா... மற்றவர்களுக்கு இடையூறு செய்யாத வகையில் கேளிக்கைகள் அமைய வேண்டும். நீ தவறு செய்து விட்டாய். கையை எடு. உலகம் இருண்டு கிடப்பதைக் கவனிக்கவில்லையா...' என்று அவர் சொன்ன பிறகு தான், நடந்த விபரீதத்தை உணர்ந்தாள், அம்பாள்.

தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டாள்.

'நீ, பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து, இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. அங்கு வந்து உன்னை ஆட்கொள்வேன்...' என்றார்.

அதன்படி, பார்வதி, பூலோகம் வந்து, தவத்தை முடித்து, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று, சிவனின் வருகைக்காக தவம் செய்தாள். சிவனும் அவளுடன் இணைந்தார்.

அந்த யோகவனத்தில் ஆல மரங்கள் அடர்ந்திருத்தன. ஆல மரத்தை, 'பழு' என்பர். எனவே, இவ்வூர், 'பழுவூர்' என பெயர் பெற்றது. சுவாமிக்கு ஆல மரத்தின் பெயரால், 'ஆலந்துறையார்' என பெயர் சூட்டப்பட்டது. பிரிந்த தம்பதி ஒன்று சேர, இங்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. தவம் செய்த அம்பிகைக்கு, 'அருந்தவநாயகி' எனப் பெயர்.

இத்தல சிவலிங்கம், கால் அடி உயரம் கொண்டது. புற்று மண்ணால் ஆன லிங்கம் என்பதால், சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது. லிங்கம் மிகச் சிறியது என்பதால், அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

பரசுராமர், தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க, வழிபட்ட தலம் இது. அவர் உருவாக்கிய குளம், 'பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. சிவன் கோவில்களில் மூலவர் சன்னிதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைந்திருக்கிறது.

இங்கு, பரசுராமர் சயனத்தில் இருக்கும் சிற்பம் விசேஷமானது. விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் அற்புதமானவை. பங்குனி, 18ல் மட்டும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும்.

சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில், நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே... என்று இவ்வூர் சிவனையும், திருப்புகழில், இத்தல முருகனை அருணகிரிநாதரும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூதலிங்கங்கள், மகாலட்சுமி, லிங்கோத்பவர், அறுபத்து மூவர், சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னிதிகள் உள்ளன.

இந்த சிறிய லிங்கத்தையும், இங்கிருந்து, 33 கி.மீ., துாரத்திலுள்ள தஞ்சாவூர் பெரிய லிங்கத்தையும் ஒருசேர தரிசித்து வருவது விசேஷம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us