
''ஐயா... பால்...'' என்ற குரல் கேட்டு, கதவைத் திறந்து வெளியே வந்த தியாகு, பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க பசும் பாலை வாங்கிக் கொண்டார். கிராமத்தின் காலைப் பொழுது, விடிந்து விட்டதற்கு சாட்சியாக, உழவு மாடுகளுடன் வயலுக்கு செல்வோரும், தலையில் தயிர் பானையை வைத்து, வியாபாரத்துக்கு கிளம்பிய பெண்களும் அவர் கண்ணில் தென்பட்டனர்.
காஸ் அடுப்பை பற்ற வைத்து, பாலைக் காய்ச்சியவர், பில்டரில் இருந்த டிகாஷனில் பொங்கிய பாலை ஊற்றி, அளவாக சர்க்கரை போட்டு, வாசனையுடன் கூடிய நுரை ததும்பிய காபியுடன், ஹாலில் வந்து அமர்ந்தார்.
இனி, 7:00 மணிக்கு சமையல்காரம்மா வந்து காலை டிபன் மற்றும் மதிய சமையல் செய்து விட்டுப் போவாள். புகைப்படத்தில் இருந்த மனைவி, தன்னையே பார்ப்பதாக நினைத்து, 'என்னை தனியே விட்டுட்டு நீ பாட்டுக்கு போயிட்டே... உன் கையில ராஜ உபசாரமாக வாழ்ந்துட்டு, இப்ப ஒவ்வொரு வேலையையும், நானே செஞ்சுக்க வேண்டியிருக்கு...' என தனக்குள் பேசிக் கொண்டவர், மொபைல்போன் சிணுங்க எடுத்தார்.
''அப்பா... நான் பரணி பேசுறேன்; நல்லா இருக்கீங்களா...'' என்ற மகனின் குரல் கேட்டதும், முகம் மலர, ''எனக்கென்னப்பா... சவுக்கியமா இருக்கேன்; அங்கே என் பேரன், மருமக எல்லாரும் எப்படி இருக்காங்க?'' என்று கேட்டார்.
''எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா... அடுத்த வாரம் உங்க பேரனுக்கு பிறந்த நாள் வருதுப்பா...'' என்றவன், ''அவன் உங்ககிட்டே பேசணுங்கிறான்,'' என்று கூற, லைனில் வந்த பேரன், ''ஹாய் தாத்தா... எப்படி இருக்கீங்க... தாத்தா, என் பிறந்த நாளுக்கு நீங்க கண்டிப்பா அமெரிக்கா வரணும்,'' என்றான்.
''என் செல்லமே... தாத்தா நினைச்சதும் வரக்கூடிய இடத்திலயா நீ இருக்கே... நான் எங்க இருந்தாலும், என்னோட ஆசீர்வாதம் என்னைக்கும் உனக்கு இருக்கும். அப்பா, அம்மா, பிரண்ட்சோடு சந்தோஷமாக பிறந்தநாள் கொண்டாடு,'' என்றவர், மகனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவரின் மனதில், மகனும், பேரனும் வளைய வந்தனர். மகனைப் போல பேரனும் தன் மீது பாசமாக இருப்பதை நினைத்து மனம் நெகிழ்ந்தார்.
''ஐயா... காபி போட்டு குடிச்சாச்சா...'' என்று கேட்டவாறு சமையல்காரம்மா உள்ளே நுழைய, ''ம்... ஆச்சு. நீயும் காபி கலந்து குடிச்சுட்டு, அப்பறம் சமையல் வேலையப் பாரு,'' என்றார்.
திரும்பவும் மொபைல் போன் அழைக்க, போனை எடுத்தார்.
''தியாகு... நான் சிவசு பேசறேன்.''
''என்னப்பா காலங்காத்தால... என்ன விஷயம்?''
''நம்ப சண்முகத்தோட பையன் விஷத்த குடிச்சுட்டானாம்; நல்லவேளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவனை காப்பாத்திட்டாங்க.''
''அடக்கடவுளே... என்னப்பா சொல்றே... ஸ்பின்னிங் மில் ஆரம்பிச்சு, நல்லபடியா தொழில் செய்துகிட்டிருந்தானே... போன மாசம் கூட, சண்முகம், தன் மகனுக்கு வரன் பார்க்க போறதா போனில் சொன்னானேப்பா... என்ன ஆச்சு...'' என்றார்.
'''தொழிலில் ஏகப்பட்ட நஷ்டமாம். வர வேண்டிய பணம் சரியா பட்டுவாடா ஆகாம, கடன் கொடுத்தவங்க நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம, குழப்பத்தில இருந்தவன், உயிரை மாய்ச்சுக்க துணிஞ்சுட்டான். பாவம் சண்முகம், தன் ஒரே மகன் மேலே உயிரையே வச்சுருக்கான்... அவனுக்காக சொத்தையெல்லாம் விற்று, பாக்டரி வச்சுக் கொடுத்தான். அவனுக்கு இப்படியொரு இடி! நான் போயி பார்த்துட்டு வரலாம்ன்னு இருக்கேன்; நீயும் வர்றயா?''
''நீ போயிட்டு வா... என்னால, இப்ப கிளம்ப முடியாது. நான் இங்கே பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். பரீட்சை நேரம்; விட்டுட்டு வந்தா நல்லா இருக்காது. நான் சண்முகத்துக்கிட்டே, அப்பறமா போனில் பேசறேன்,'' என்றார்.
ஒரு வாரம் கழித்து, சண்முகத்திற்கு போன் செய்து, நடந்ததை விசாரித்து, ஆறுதலாகப் பேசினார் தியாகு.
''மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தியாகு... டாக்டர், 'அவன் மனநிலை இன்னும் சரியாகல. இப்ப, அவனை காப்பாத்திட்டாலும், திரும்ப எப்ப வேணா தற்கொலை முடிவுக்குப் போகலாம். அதனால, அவனக் கொஞ்ச நாள் தனியே விடாம, உங்க பாதுகாப்பில் வச்சுக்குங்க; முடிஞ்சா வெளியூர் எங்காவது கூட்டிட்டுப் போங்க'ன்னு சொன்னாரு. உடனே, எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு. நானும், என் மகனும் கிராமத்தில இருக்குற உன் வீட்டில வந்து ஒரு வாரம் தங்கலாமா... இந்த இடமாற்றம் அவன் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்றார் சண்முகம்.
''இது என்ன கேள்வி... நான் தனியாத் தான் இருக்கேன்; நீ தாராளமா உன் மகனோட புறப்பட்டு வா...''
''தியாகு... ஒரு சின்ன வேண்டுகோள். நீ அவன்கிட்ட இதைப் பத்தி எதுவும் பேச வேணாம்; மனசளவில் ரொம்பவே நொந்து போயிருக்கான்,'' என்றார் சண்முகம்.
''தெரியும்பா... நீங்க ரெண்டு பேரும் என்னோட விருந்தாளிக போதுமா... ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டுப் போங்க.''
சண்முகமும், அவர் மகனும் தியாகுவின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டன. நண்பர்கள் இருவரும் பழைய கதைகளைப் பேசியபடி பொழுதை ஓட்டிக் கொண்டிருக்க, சண்முகத்தின் மகன் ஆனந்தன், யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையிலேயே முடங்கிக் கிடந்தான். மாலையில், அவர்களுடன் வேண்டா வெறுப்பாக கோவிலுக்கு சென்று வந்தான்.
இரவு, மேஜை மேல் சாப்பாட்டை எடுத்து வைத்த தியாகு, ''சண்முகம்... ஆனந்தனைக் கூப்பிடுப்பா; சாப்பிடலாம்,'' என்றார்.
''நாங்க வந்ததுல உனக்கு தான் ரொம்ப சிரமம்,'' என்றார் சண்முகம்.
''இதிலென்னப்பா சிரமம்... சமையல்காரம்மா சமைச்சு வச்சுட்டுப் போனதை, நான் எடுத்து பரிமாறுறேன்; தனியா இருக்கிற எனக்கு, நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா...'' என்றவர், ''ஆனந்தா... நல்லா சாப்பிடுப்பா. வயசுப் பிள்ளை ரெண்டு சப்பாத்தியோட எழுந்திருக்கிறயே... குருமா கொஞ்சம் வைக்கட்டுமா?'' என்று கேட்டார்.
''வேணாம் அங்கிள்... எனக்கு பசியில்ல,'' என்று கூறியவன், எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.
முகம் வாட அமர்ந்திருக்கும் நண்பனைப் பார்த்து, ''கவலைப்படாதே சண்முகம்... கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். இதுவரை வாழ்க்கையில் அடிபடாதவன்; அதான் தளர்ந்து போயிட்டான். சரி வா... காத்தாட வாசலில் வேப்ப மரத்தடியில கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்போம்,'' என்றார் தியாகு.
வேப்ப மரத்துக் காத்து உடலுக்கு இதமாக இருந்தாலும், மனம் முழுக்க கவலையுடன் அமர்ந்திருந்தார் சண்முகம்.
''உன்னை நினைச்சாலும் மனசுக்கு கஷ்டமாக இருக்கு தியாகு. நீ, உன் மனைவியை இழந்து, ஒத்த மகனையும் கண் காணாத தூரத்துக்கு அனுப்பி வச்சுட்டு, இப்படி தனிமையில தவிக்கிறே... கடவுள் ஆளுக்கொரு கஷ்டத்தை கொடுத்திடறாரு. இப்பப் பாரு... நல்லா போயிட்டிருந்த வியாபாரத்தில் பலத்த நஷ்டம்; அதை எதிர்கொள்ள துணிவில்லாம உயிரை விட துணிஞ்சுட்டான் என் மகன். அவன் மட்டும் போயிருந்தா, இப்ப என்னோட நிலைம... நினைச்சுப் பார்க்கவே மனசு நடுங்குது,'' என்றார் மிகுந்த கவலையுடன் சண்முகம்.
''நம்ம வாழ்க்கையில் நடக்கிற எல்லாத்துக்கும் கடவுளையே குறை சொல்லிட்டு இருக்க முடியாதுப்பா. வாழ்க்கை, தொழிலில் கஷ்டமும், நஷ்டமும் வரத்தான் செய்யும். அதுக்காக அத்தனையும் விட்டுட்டு ஒரேயடியா போக முடியுமா... என் மனைவி இறந்தப்ப, என் மகன், 'அப்பா... உங்களத் தனியா விட்டுட்டு, நான் மட்டும் எப்படி அமெரிக்கா போறது, நானும் இங்கேயே இருந்திடறேன்'னு சொன்னான்.
''அதுக்கு நான் ஒத்துக்கல; இது எனக்கான வாழ்க்கை. விதி முடிஞ்சது; என் மனைவி போய் சேர்ந்துட்டா. எஞ்சியிருக்கிற என் வாழ்க்கைய நான் தான் வாழ்ந்தாகணும். அதுக்காக, என் மகனோட முன்னேற்றத்திற்கு குறுக்கே நிக்கிறது எந்த விதத்திலும் நியாயமில்லன்னு தோணிச்சு. நாம நடக்கிற பாதையில கல்லும், முள்ளும் இருக்கற மாதிரி, வாழ்க்கையிலும் நல்லது, கெட்டது இருக்கத்தான் செய்யும். அது புரிஞ்சதாலத்தான் என்னால முடிஞ்சு உதவிகளை அடுத்தவங்களுக்கு செய்துட்டு அமைதியா வாழ முடிவு எடுத்தேன். இப்ப என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கு.
''படிக்கிற புள்ளைகளுக்கு சாயந்தரம் டியூஷன் எடுக்குறேன். கோவில் காரியங்களுக்கு உடலுழைப்பு மற்றும் உபகாரங்களை செய்றேன். பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு வர்ற நாலு பேருக்கு, எனக்குத் தெரிஞ்ச நல்லத எடுத்துச் சொல்றேன். போனிலும், இன்டர்நெட்டிலும், என் மகன், பேரனோடு பேசி, என் மனதில் சோர்வு ஏற்படாம பாத்துக்கிறேன்.
''என் வாழ்க்கை நீ நினைக்கிற மாதிரி விரக்தியாக, வெறுமையில் போறதாக நான் நினைக்கல; மனசை மட்டும் சோர்வு அண்ட விடாம சந்தோஷமாக வச்சுக்கிட்டா, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மால சந்தோஷமா வாழ முடியும்; இது வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட பாடம்.
''வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட பயந்து வாழ்க்கைய முடிச்சுக்க பாத்திருக்கிறான் உன் மகன். போராடுற துணிச்சல் இருந்தாத் தான், வெற்றி கிடைக்கும். தொழிலில் லாப, நஷ்டங்கறது சகஜம். அதிலிருந்து எப்படி வெளியே வரணும்ன்னு தான் யோசிக்கணும். மனசிலே நம்பிக்கை இருந்தா, தோல்விகளைக் கூட வெற்றியாக மாற்ற முடியும்.
''அடிபடாமல் மலையேற முடியுமா சொல்லு... இந்த கஷ்டத்தை பெரிசா நினைக்காம, இன்னும் முனைப்போடு செயல்படச் சொல்லு; நிச்சயம் உன் மகனால் சாதிக்க முடியும். வாழ்றதுக்காகத் தான் நாம பூமியில் பிறந்திருக்கோம்; நம்மைப் படைச்ச கடவுள், நம்மை அழைக்கிற வரை, தோல்விக்குப் பயந்து வாழ்க்கையை விட்டு ஓட நினைக்காம, போராடி ஜெயிக்கணுங்கற உத்வேகத்தை நமக்குள் வளர்த்துக்கணும். நீ தான் உன் மகனுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லணும்; அப்பத்தான் அவன் இதிலிருந்து மீண்டு வருவான்,'' என்றார் தியாகு.
காலையில் எழுந்து கோவிலுக்குச் சென்று திரும்பிய நண்பரை, முகம் மலர எதிர்கொண்டார் சண்முகம்.
''தியாகு... ரொம்ப நன்றிப்பா; நேத்து ராத்திரி நீயும், நானும் பேசினதை, என் மகன் கேட்டிருப்பான் போலிருக்கு. 'அப்பா, ஊருக்கு கிளம்புவோம். பாங்க் லோனுக்கு ஏற்பாடு செய்யணும். வாங்கின இடத்தில் கால அவகாசம் கேட்டு, கடனை திருப்பி தர வழி பார்க்கணும். பாக்டரியை திறந்து, புது உத்வேகத்தோடு செயல்பட போறேன்பா... நான் எடுத்தது எவ்வளவு கோழைத்தனமான முடிவுன்னு, நேத்து நீங்களும், மாமாவும் பேசியதைக் கேட்டு புரிஞ்சுக்கிட்டேன். இனி, உங்க மகனைப் பத்தி நீங்க கவலைப்பட வேணாம்'ன்னு சொல்லி, என் வயித்துல பாலை வார்த்தான். என் மகனோட வாழ்க்கைய மட்டுமில்ல; என் மகனையே நீ திரும்ப மீட்டுக் கொடுத்திட்டே; ரொம்ப நன்றிப்பா,'' என்றார் சண்முகம்.
தன் கைப்பிடித்து நிற்கும் நண்பரை தழுவிக் கொண்டார், தியாகு.
- பரிமளா ராஜேந்திரன்

