
''நில்லு சாமி, நில்லு. எதற்கு இப்படி ஓடற?'' என்று கூப்பிட்டபடியே பின்னால் ஓடி வந்தார், பவித்ராவின் தந்தை ஏகாம்பரம்.
அழுதபடியே வீட்டிற்குள் ஓடி, அறை கதவை மூடி, உள் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டாள், பவித்ரா. ''கதவைத் திற சாமி... என் தங்கமே... நீ அடிக்கடி சொல்ற மாதிரி இந்த ஊரை விட்டே போயிரலாம் சாமி. ஐயோ, யாராச்சும் வந்து என் தங்கத்தைக் காப்பாத்துங்களேன்,'' என கூச்சலிட்டார், ஏகாம்பரம். அவரின் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டிலும், தெருவிலும் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் ஓடி வந்தனர். அதில் சிலர், ஒன்று சேர்ந்து, வலுவான மரக்கதவை உடைத்து, உள்ளே சென்றனர்.துாக்கில் தொங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பவித்ராவை கீழே இறக்கினர். கழுத்தைப் பிடித்துக்கொண்டே, பலத்த இருமல் சத்தத்தோடு, ''என்னை ஏன் இப்பக் காப்பாத்துனீங்க... ஒவ்வொரு நாளும் என்னைப் பேசியே கொல்லுறதுக்கா... என்னை விடுங்க, இன்னைக்கே ஒரே அடியாய் போய்ச் சேர்ந்துடறேன்,'' என்று கதறினாள், பவித்ரா.நடந்த இந்தக் கலவரத்தின் அதிர்ச்சியில், ஒரு மூலையில் ஒடுங்கிப் போனார், ஏகாம்பரம். எத்தனையோ பிரச்னைகள் வந்தபோதும், மனம் உடையாமல் தைரியமாக இருந்தவர், பவித்ரா செய்த முட்டாள்தனமான இந்த செயல் கண்டு மனமுடைந்து போனார். 'ஊரை விட்டே போயிருவோம். இந்த ஊரே வேணாம்...' என்று மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தார், ஏகாம்பரம்.பவித்ரா துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற செய்தி, சற்று நேரத்தில் ஊர் முழுக்கப் பரவியது. பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருக்காரர்கள், பவித்ராவின் தோழியர் என, அனைவரும் வந்து அவளுக்கு அறிவுரைகள் வழங்கிச் சென்றனர். சற்று நேரத்தில், பள்ளிக்குச் சென்றிருந்த, பிளஸ் 2 படிக்கும் அவளின் தம்பி விக்ரம், வீட்டுக்கு வந்தான்.''என்னாச்சுப்பா, வீட்டு முன் இவ்ளோ ஆள் நிக்குறாங்க. உங்க கையில என்னப்பா காயம்?'' என்று கேட்டான், விக்ரம்.எந்த பதிலும் சொல்லவில்லை, ஏகாம்பரம்.''ஏன்க்கா இப்படித் தலையெல்லாம் களைஞ்சு போயி உட்கார்ந்துட்டு இருக்க. சொல்லுக்கா,'' என்று படபடத்தான், விக்ரம். பவித்ராவிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.''நான் இங்க லுாசு மாறிக் கேட்டுட்டு இருக்கேன்... ரெண்டு பேரும் ஏன் வாயவே திறக்க மாட்டேங்குறீங்க,'' என்று கத்தினான், விக்ரம். ''விக்ரம் அண்ணா, இங்க வாங்க நான் சொல்றேன்,'' என்றாள் பக்கத்து வீட்டுச் சிறுமி, தன்யா.வெளியே சென்று, ''சொல்லும்மா, என்ன ஆச்சு?'' கேட்டான், விக்ரம். ''அண்ணா, அக்கா சேலையில் துாக்கு மாட்டீட்டாங்களாம். அப்புறம் கதவை உடைச்சு, நம் வேலன் அண்ணாவும், சுரேஷ் அண்ணாவும் தான் காப்பாத்துனாங்களாம். எங்க அம்மா வீட்டுல பேசிட்டு இருந்தாங்க,'' என்றாள், தன்யா.விக்ரமுக்கு துாக்கி வாரிப்போட்டது. ''என்ன காரியம் பண்ணப் பார்த்த பவித்ரா,'' என்று வீட்டுக்குள் ஓடிச் சென்று, கடைசி அறையைப் பார்த்தான், விக்ரம். அங்கே அறுபட்டுக் கீழே கிடந்தது, அவன் அம்மாவின் சேலை. ''பவி, என்னாச்சு உனக்கு? எப்பவும் நீ தானே அப்பாவுக்கும், எனக்கும் தைரியம் சொல்லுவ. இப்போ உனக்கு என்ன ஆச்சுடி. போன வாரம் அந்த மாப்புள வீட்டுக்காரங்க உன்ன வேணாம்ன்னு ஒரு மோசமான காரணம் சொல்லி, 'ரிஜெக்ட்' பண்ணப்பக் கூட, நீ தைரியமாய்த்தான இருந்த...''இன்னைக்கு என்ன ஆச்சு. இப்படிப் பண்ணியிருக்க... என்ன நடந்துச்சுன்னு சொல்லுக்கா?'' என்று கோபமும், அழுகையுமாக கேட்டான், விக்ரம். மெதுவாகத் தலையை உயர்த்தி விக்ரமைப் பார்த்தாள், பவித்ரா.
அவளின் கண்கள், கோவைப் பழம் போல் சிவந்திருந்தது. தழுதழுத்த குரலில், ''தம்பி, இந்த ஊர்ல உள்ள சிலர், நம்மை வாழவே விட மாட்டாங்கடா. பேசமா நாம வேற ஏதாச்சும் ஒரு ஊர் பார்த்துப் போயிருவோம்டா,'' என்றாள்.''சரிம்மா, போயிடுவோம். இதோ இந்த வாரத்துக்குள்ளயே போயிருவோம்,'' என்று பதில் வந்தது, ஏகாம்பரத்திடமிருந்து.அன்று இரவு, யாருமே வீட்டில் சாப்பிடவில்லை. அவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள மின்விளக்கு கூட போடப்படவில்லை. அன்று இரவு கட்டிலில் குப்புறப்படுத்தபடி தன் வாழ்க்கையின் கசப்பான கடந்த காலங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தாள், பவித்ரா...எனக்கு அப்போது, 9 வயது, விக்ரமுக்கு, 3 வயது இருக்கும். வீட்டில் இருந்தபடி குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தாள், அம்மா லட்சுமி. அப்பா ஏகாம்பரம், ஒரு ஆசாரி. உள்ளூர், வெளியூர் என வேலைக்குப் போய், குடும்பத்தை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். நாங்கள் குடியிருக்கும் வீடு, ஒண்டிக் குடித்தன வாடகை வீடு தான். எங்கள் காம்பவுண்டில் எங்களையும் சேர்த்து, ஐந்து குடும்பங்கள் வசித்து வந்தன. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பொருளாதார ரீதியாக அன்றி, வேறு எந்தப் பிரச்னையும் பெரும்பாலும் வராது. அப்பாவின் மேல் எந்த ஒரு குறையையும் சொல்ல மாட்டாள், அம்மா லட்சுமி.அச்சமயத்தில் தான், எங்கள் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தார், சங்கர் மாமா. ஆரம்ப நாட்களில் அவர் வீட்டின் பாத்ரூம் கதவு, உடைந்த ஜன்னல் என, எல்லாத்தையும் சரி பண்ணிக் கொடுத்தது, அப்பா தான். என்றாவது, நான் ஸ்கூலுக்கு போகலேன்னு எங்கம்மா என்னை அடிச்சாக் கூட, 'அடிக்காதீங்க லட்சுமி மேடம்'ன்னு, எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து, ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயி விடுவாரு, அந்த சங்கர் மாமா.ஒரு தடவை எங்க அப்பா வெளியூர் போயிருந்த சமயம், தம்பி விக்ரமுக்கு, உடம்பு சரியில்லை. மருத்துவமனை கூட்டிட்டுப் போகச் சொல்லி, சங்கர் மாமாவிடம் உதவி கேட்டாங்க, எங்க அம்மா.எனக்குத் தெரிந்து, எங்க அம்மா சங்கர் மாமாகிட்ட முதல் முறையாகப் பேசுனது அப்போது தான். அம்மாவையும், தம்பியையும் பைக்ல மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாரு, சங்கர் மாமா. அதுக்கப்புறம் எங்க அம்மாவும், அவரும் சகஜமா பேச ஆரம்பிச்சாங்க. என்னையும், தம்பியையும் எங்க ஊரு மைதானத்துக்குக் கூட்டிட்டுப் போவாங்க, எங்க அம்மா. எங்களை விளையாடச் சொல்லிட்டு, அவரு கூடப் பேசிட்டு இருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சுது. சண்டைக்கு இடையில, 'அவன் கூட எதற்கு மைதானத்துக்கு அடிக்கடி போய் பேசுற...' அப்படி இப்படின்னு கேட்டாங்க, அப்பா. ஒரு சில தடவை, அம்மாவ அடிக்கவும் செஞ்சாரு, அப்பா. அந்த சங்கர் மாமாவுக்கும், அப்பாவுக்கும் இடையே கைகலப்பு கூட ஏற்பட்டது. என்கிட்டயும், தம்பிகிட்டயும், 'இனிமேல் அவன் வீட்டுக்குப் போகாதீங்க'ன்னு சொல்லிட்டாங்க, அப்பா. அதுக்கப்புறம், நானும் அந்த சங்கர் மாமா கூட பேசவே இல்லை.ஒருநாள் காலையில எழுந்துருச்சுப் பார்த்தப்போ, அழுதுட்டு இருந்தாரு, எங்க அப்பா.'உங்க அம்மா நம்மள வேணாம்ன்னு சொல்லிட்டு சங்கர் கூடப் போயிட்டாம்மா பவித்ரா...'ன்னு சொல்லி அழுதாரு. அம்மாவும், சங்கர் மாமாவும் ஓடிப் போயிட்டதா... ஊர்ல எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், என்னையும், தம்பியையும் கூட்டிட்டுப் போலீஸ் ஸ்டேஷன் போயி புகார் கொடுத்தாரு, அப்பா.அதுவரைக்கும், சமையல்கட்டுப் பக்கம் போகாத அப்பா, எனக்காகவும், தம்பிக்காகவும் போக ஆரம்பிச்சாரு. தம்பி ரொம்ப குட்டிப்பையனா இருந்ததால, அவனை அவரு வேலைக்குப் போறப்ப கூடவே கூட்டிட்டுப் போவாரு.கொஞ்ச நாள் கழிச்சு தம்பியும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சான். நானும், பெரிய பொண்ணு ஆனேன். அது வரைக்கும் எல்லாமே சகஜமாத்தான் போச்சு. ஆனால், அதுக்கப்புறம், எங்க ஊர்ல இருந்த ஒரு சில அம்மாக்கள், அவங்க பொண்ணுங்ககிட்ட, 'அந்த ஓடுகாலியோட பொண்ணு பவித்ராகிட்ட சேராதீங்க'ன்னு, என் காதுபடவே பேசுனாங்க. எங்க ஊர்ல ஒரு சில ஆளுங்க, 'ஏன் ஆசாரி, ஊர்ல உள்ள எல்லா கதவையும் நல்லா செஞ்சுட்டு, உன் வீட்டுக் கதவ சரியா செய்யாம விட்டுட்டியே'ன்னு, பேசுவாங்க.முதல்ல ஒரு சிலர்கிட்ட எங்க அப்பா சண்டைக்குப் போனாரு. அதுக்கப்புறம், பேசுறவன் என்ன வேணும்ன்னாலும் பேசட்டும்ன்னு, விட்டுட்டாரு.வீட்டுக்கு வர எங்க சொந்தகாரங்க எல்லாம், 'நீயும் உங்க அம்மா மாறியே ஒழுங்கீனமா இருக்காத. நீயாச்சும், உங்க அப்பன் சொன்ன பேச்சைக் கேட்டு இரு...'ன்னு சொல்லி, 'அட்வைஸ்' பண்ணுவாங்க. எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனால், எங்க அப்பா எனக்கு, 'சப்போர்ட்' பண்ணுவார். அப்புறம், நான், 10ம் வகுப்புல நல்ல மார்க் எடுத்து, பிளஸ் 1 போனேன். அப்போ, என் தோழியோட அம்மா, 'ஓடிப்போனவ பொண்ணு எல்லாம் நல்ல மார்க் எடுத்துருக்கா, உனக்கு என்னடி கேடு இப்படி கம்மியா மார்க் எடுத்து வெச்சுருக்க...'ன்னு திட்டுனாங்க. இது எனக்கு மட்டும் நடக்கல, என் தம்பிக்கும் நடந்துச்சு. அவன், 6ம் வகுப்பு படிக்கறப்போ ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினான். அதற்கு, ஊர்ல இருந்த சிலர், 'அப்படியே அம்மா மாதிரிடா நீ...'ன்னு சொன்னாங்க.அவன் அர்த்தம் புரியாம சிரிச்சான். ஆனால், எனக்கும், அப்பாவுக்கும் மட்டும் அந்த வார்த்தை, ஏதோ கத்தியை வச்சு இதயத்தைக் கிழிச்ச மாதிரி இருந்துச்சு.வேற ஏதாச்சும் ஊருக்குப் போகலாம்ன்னு, பல நாட்கள் நெனச்சு இருக்கோம். ஆனால், திடீர்னு பழக்கம் இல்லாத ஊருக்குப் போயி என்ன பண்றது. வேலை விஷயமா அப்பா, வெளியூருக்குப் போய் தங்க வேண்டிய சூழ்நிலை வந்தால், பக்கத்து வீட்டுக்காரங்க எங்களைப் பார்த்துக்குவாங்க.அப்படி இல்லாட்டாலும், இவ்ளோ நாள் இருந்த ஊர்ன்னு நெனச்சு நாங்க பயப்படாம இருந்து கொள்வோம். இதை நெனச்சே எத்தனையோ ஏளனப் பேச்சுக்களைத் தாங்கி வாழ்ந்தார், அப்பா. நான் காலேஜ் படிச்சப்போ என் தோழி விமலாவுக்கும், எனக்கும் ஒரு சின்ன சண்டை. சின்ன வயசுல இருந்தே ஒரே ஸ்கூல்ல கூடப் படிச்ச விமலா ஒருமுறை, 'எங்க அப்பா, அப்பவே சொன்னாங்க, அந்த ஓடுகாலி பெத்த பொண்ணு கூடச் சேராதன்னு. கேட்காம உன் கூடச் சேர்ந்து திரிஞ்சேன் பாரு, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்...'ன்னு சத்தமாக் கேட்டா. எனக்கு ரொம்ப அவமானமாய் போச்சு. அதுக்கப்புறம் நான் காலேஜ் முடிக்குற வரைக்கும் யாருடனும் அதிகமாய் பேசவில்லை.காலேஜ் முடித்து, நாலு வருஷமா வேலைக்குப் போயிட்டு இருக்கேன்.என் கிட்ட, 'லவ்' சொல்ல வந்த எத்தனையோ பேர வேணாம்ன்னு சொல்லிட்டேன். ஒரு சிலரை எனக்குப் பிடிச்சு இருந்தும், எங்க அப்பாவுக்கு எனக்கான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்குற உரிமையைக் கொடுக்கிறது தான், அவரு வாழ்ந்த தியாக வாழ்க்கைக்கு நான் செய்யுற கைம்மாறுன்னு நெனச்சேன். எனக்கு, 23 வயதானதும் பொண்ணுப் பார்க்க வருபவர்கள், பொண்ணு பிடிச்சிருக்குன்னு தான் சொல்லுவாங்க. அப்புறம் பொண்ணோட அம்மான்னு ஒரு கேள்வி கேட்பாங்க. உண்மை தெரிஞ்சதுக்கப்புறம், அவங்க முக பாவனையே மாறிடும். அவங்க எல்லாத்துக்கும், ஓடிப்போன எங்க அம்மா தெரியுறாங்களே தவிர, இத்தனை நாள் கஷ்டப்பட்டு வளர்த்த எங்க அப்பாவோட கஷ்டமும், வியர்வையும் தெரியல. இன்னைக்கு சாயந்தரம் வேலைக்குப் போயிட்டு, பஸ்சிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருந்தேன்.
எங்க ஊர்ல இருக்குற மாடசாமிங்குற ஒருத்தர் கூட, எங்க அப்பா பேசிட்டு இருந்தார். அவர் பொண்டாட்டி இறந்து ஒரு வருஷம் ஆச்சு. அவருக்கு, என் தம்பி கூடப் படிக்குற, 17 வயசுல ஒரு பையனும், 15 வயசுல ஒரு பொண்ணும் இருக்காங்க. 'யோவ் ஏகாம்பரம், பேசாம உன் பொண்ணு பவித்ராவை எனக்கு கட்டி வெச்சுப்புடும். உன் ஓடுகாலிப் பொண்டாட்டிக்குப் பிறந்ததுனால, எவனும் அவளைக் கட்டிக்க முன்வர மாட்டான். இன்னும் அவளுக்கு எத்தனை நாள் மாப்பிள்ளை பார்த்துட்டு இருப்ப. பேசாம எனக்கு கட்டி வையும். ராணி மாதிரிப் பார்த்துக்கிறேன்னு...' சொன்னான், மாடசாமி.இதை கேட்டதும் எங்க அப்பா, அவரை ஓங்கி அடிச்சுட்டாரு. மாடசாமியும் அடிக்க, குறுக்கப் போயி தடுத்து, எங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்தேன். 'உன் பொண்ண வேற எவன் பொண்ணு பார்க்க வரான்னு நான் பார்க்குறேன்டா...' என்று கத்திக்கொண்டே போனான், மாடசாமி.நடந்த அந்த சண்டையில், அப்பாவின் கை, காலெல்லாம் காயம் ஆயிருச்சு. இவ்ளோ நாள் நாம அவருக்கு பாரமா இருக்றமோன்னு என் மனசுல தோணாத ஒரு எண்ணம், அந்த ஒரு நிமிஷம் எனக்குத் தோணுச்சு. குடும்பத்தை விட்டு ஓடிப் போன அம்மா லட்சுமிக்கு மகளாய்ப் பிறந்ததைத் தவிர, அப்படி என்ன தப்பு செய்தோம்ன்னு தோணுச்சு. நான் உயிரோட இருக்குற வரைக்கும், இன்னும் எத்தனை பேர் என்னைப் பொண்ணு பார்க்க வந்தாலும், இந்த ஊருல சிலர், இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. நான் காயப்படுறது மட்டும் இல்லாம, என்னால அப்பாவும், தம்பியும் அவமானப்படுவாங்க. பேசாம, இவ்ளோ கஷ்டப்பட்டு வாழுறதுக்கு, ஒரே நாள்ல செத்துரலாம்ன்னு தோணுச்சு. அப்பாவுக்கு முன், ஓடி வந்து துாக்கில் தொங்க முடிவு செய்தேன். இதையெல்லாம் நினைத்துக் கொண்டே அன்று இரவு முழுவதும் கட்டிலில் துாக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்தாள், பவித்ரா. அடுத்த ஐந்தாவது நாள், அந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்குப் பவித்ராவின் குடும்பம் குடி பெயர்ந்தது.அந்த ஊர் கடைத்தெருவுக்கு போனார், ஏகாம்பரம்.ஒரு பிளாஸ்டிக் பூ மாலையை வாங்கி வந்தார். அத்தனை நாள் ஒதுக்கப்பட்டு இருந்த அம்மாவின் போட்டோவை ஆணியில் மாட்டி, வாங்கி வந்த மாலையை மாட்டினார், ஏகாம்பரம். ''இன்னையோட உன்னைப் பொண்ணுப் பார்க்க வர்றவங்க, இந்தப் போட்டோவைப் பார்த்துப் புரிஞ்சுக்குவாங்க. அதற்கும் மேல யாராச்சும் கேட்டா, 'அவ செத்து, 14 வருஷம் ஆச்சு'ன்னு தைரியமாச் சொல்லும்மா பவித்ரா,'' என்று சொன்னபடி வெளியே சென்றார், ஏகாம்பரம்.
ந. செந்தில்குமார்
வயது: 29
படிப்பு: பி.காம்.,
பணி: உதவி பிரிவு அலுவலர், தலைமைச் செயலகம்
சொந்த ஊர்: பொள்ளாச்சி
லட்சியம்: சிறுகதை எழுத்தாளனாக உருவாவது
கதைக்கரு பிறந்த விதம்: தந்தை இல்லாத வீடுகளில் வளரும் குழந்தைகளை விட, தாய் இல்லாமல் வளரும் குழந்தைகள் சந்திக்கும் ஏளனங்கள் அதிகம். அதுகுறித்த சிறு கற்பனை வடிவமே, இக்கதை உருவாக காரணம்.

